No icon

வெல்லுமா?

இந்தியாவின் பெருவாரியான எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது மகிழ்வைத் தரும் செய்தியே. கண்ணீர் விட்டு வளர்த்த சனநாயகத்தையும், சனநாயகம் எனும் உயர் விழுமியத்தைக் காத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் அணிதிரண்டுள்ள கட்சிகளைப் பாராட்டுவோம்.

உயரிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியக் கூட்டணிமீது துவக்கத்திலேயே அவநம்பிக்கைக் கொள்வது, நம்பிக்கையோடு முன்னெடுத்த கட்சிகளை, கட்சித் தலைவர்களைச் சிறுமைப்படுத்தி விடும் என்பதனையும் நினைவில் கொண்டு, எதிர்மறை விமர்சனம் தவிர்த்து, நம்பிக்கையோடு ஆதரவு தெரிவிப்போம். காலத்தின் கட்டாயத் தேவை என்பதனையும் நினைவில் கொள்வோம்.

நங்கூரமற்ற கட்சிகள்

கட்சிகள் வெறும் கும்பலோ, கூட்டமோ அல்ல; கட்சிகள் சனநாயகத்தின் கொடைகள்! சனநாயகம் அளித்த கருத்துரிமை, பேச்சுரிமையின் அடையாளங்கள். தாம் சார்ந்த மக்களின் அல்லது சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் பெற்றவைகள். பன்மைப் பண்புடைய இக்கட்சிகள், குறிப்பிட்ட இலட்சியத்தோடு இயங்கும் உரிமை பெற்றவைகள்.

 கொள்கை எனும் நங்கூரமற்ற (Anchorless) கட்சிகளால் சனநாயகம் கேலிக்குள்ளாகும். ‘இவ்வுயரிய நோக்கமெல்லாம் நம் கட்சிகளிடம் உள்ளனவா?’ என்ற வினாவிற்கு இன்று உரிய விடை இல்லாதபோது, நங்கூரம் எனும் கொள்கை இல்லாத கட்சிகளாகவே பல கட்சிகள் செயல்படுகின்றன. பிரபல அரசியல் விமர்சகர் ரஜினி கோத்தாரி அவர்கள், இன்று நம் நாட்டில் செயல்படும் கட்சிகள் பற்றி மேற்கண்டவாறு விமர்சிப்பார். விளைவு என்ன? சனநாயகம் தந்த கட்சிகள், சனநாயகமற்ற முறையில் செயற்படுகின்ற நிலையில், குடிமக்கள் கட்சி அரசியலில் மட்டுமல்ல, கட்சிகளை அனுமதித்த சனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். இந்த அவநம்பிக்கை மக்களை அரசியலிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது.

அரசியல் அகற்றல் என்பது சனநாயக அரசியலுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய பிழையாகும். கொள்கையற்ற கட்சிகள் எளிதில் சமரசம் செய்யும்; வெகு எளிதாக விலையும் போகும். கொள்கையற்ற கட்சிகளில் எவர் வேண்டுமெனிலும் குதிரைச் சவாரி செய்யலாம். கொள்கையற்ற கட்சிகள் உதிரிகளின் புகலிடமாகிறது; குற்றவாளிகளின் கூடாரமாகிறது. சனநாயகத்தைக் கேலி செய்யும் கட்சிகளின் இப்போக்கால் உருவாகும்வெளியை (Space) அனைத்துத் தீய சக்திகளும் பயன்படுத்திக் கொள்கின்றன.

குடிமக்கள் மத்தியில் அரசியல் எண்ணம் அகற்றப்பட்ட சூழலில், நிலவும் அரசியல் காரணிகளால் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில், உயரிய நோக்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நம்பகத்தன்மை (Credibility) பறிபோன நிலையில், பொய்யான நம்பிக்கையைத் தந்து நுழைந்ததுதான் இன்றைய மதவாத கட்சியான பி.ஜே.பி. எனும் தேசியக் கட்சி. திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள் அனைத்து மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்பட்டிருந்த நிலையில், ‘மாற்று நம்பிக்கையை அளிக்கப்போகிறோம்என்ற பொய்யான நம்பிக்கையின்மீது காலூன்றியதுதான் வகுப்புவாதமும், வகுப்புவாத அரசியலும்.

அரசியல் அகற்றப்பட்ட மக்கள் ஒருபுறம்; குற்றவாளிகள் ஒருபுறம்; சந்தையை மையமாகக் கொண்ட உலகமயப் பொருளாதாரம், இவற்றோடு வகுப்புவாத அரசியலும் மக்களுக்கு வலைவிரித்தது; மக்களும் வீழ்ந்தனர்.

மீட்பு எப்போது? எப்படி?

இந்திய சனநாயகம் அனுமதித்த நிலையில், இன்று நாம் கண்ணுறும் கட்சிகள் அனைத்தும் கொள்கைப் பிடிப்பின்றி செயல்பட்டு வரும் சூழ்நிலையில், எந்தச் சனநாயகம் அனுமதித்ததோ அந்தச் சனநாயகத்தையே வீழ்த்திட முனையும் பாசிச மதவாத கட்சியை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், ‘இந்தியாஎன்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியுள்ளன. ‘இந்தியாஎன்ற கூட்டணி உருவான சூழலில் உரையாற்றிய இராகுல் காந்தி, ‘இக்கூட்டு கட்சி சார்ந்த கூட்டல்லஎன்றும், ‘சித்தாந்தங்களுக்கு எதிரான கூட்டுஎன்றும், ‘போர்என்றும் அறிவித்தார். இராகுல் காந்தியின் கூற்று மகிழ்வையே தருகிறது.

இந்தியாஎனும் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணி, கொள்கை ரீதியாக முரண்பட்டக் கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இருந்தாலும், வகுப்புவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை எதிர்த்தாக வேண்டிய கட்டாய நிலை இன்று உருவாகியுள்ளது என்பதையே உணர்த்துகிறது.

வகுப்புவாதம் ஒரு கருத்தியல். வகுப்புவாதம் மக்களைப் பிரித்தாள்வது; வகுப்புவாதம் மத ரீதியாகக் கட்டமைக்கப்படுகையில், மத அடிப்படை வாதமே இதன் உள்ளீடாகிறது. மத அடிப்படை வாதம் மாற்றத்தை மறுப்பது; நிலவும் நீதியற்ற சமூக அமைப்பை நியாயப்படுத்தி நிலைப்படுத்துவது. சனநாயக விழுமியங்களுக்கு எதிரான இம்மதிப்பீட்டை உயிர்க்கொள்கையாகக் கொண்டு செயற்படும் மதவாதக் கட்சியை, வலுவான கருத்தியலை அல்லது சித்தாந்தத்தைக் கொண்ட வகுப்புவாதக் கட்சியின் சித்தாந்தத்தை எதிர்கொள்ள, வகுப்புவாதிகளின் சித்தாந்தம் பற்றிய குறைந்தபட்ச தெளிவு வேண்டும். இராகுல் காந்தி அவ்வப்போது பேசிவரும் தன்னுரைகளில், வகுப்புவாத சித்தாந்தம் குறித்த புரிதல் இருப்பது மகிழ்வே.

சனநாயகம் பன்மையை ஏற்பது; பன்மைச் சமூகத்தின் சமப் பங்கேற்பை உறுதிசெய்வது; மக்களின் தெரிவு செய்யும் அதிகாரத்தை உத்தரவாதப்படுத்துவது; இந்திய மதவாத கட்சியின் உள்ளார்ந்த கொள்கையாய் சனாதனம் - சனநாயகத்தின் மாண்பார்ந்த அனைத்து மதிப்பீடுகளையும் புறந் தள்ளுவது! பன்மை என்பதும், பங்கேற்பு என்பதும் மதவாத அரசியலின் எதிர்பண்புகள்.

இந்தியா சுதந்திரம் பெற்று, சனநாயக அரசைக் கட்டியெழுப்ப முயன்ற நம் தலைவர்கள்இந்திய குடிமக்களாகிய நாம்என்ற முழக்கத்தோடு இந்தியாவுக்கான அரசமைப்பை உருவாக்கினர். இந்த முழக்கத்தில்இந்தியாஇடம்பெற்றிருந்தது.‘குடிமக்கள்எனும் சனநாயக விழுமியம் உச்சரிக்கப்பட்டது. குடிகள் குடிமக்களானபோது, குடிமக்களின் சமத்துவமும், இக்குடிமக்கள்நாம்ஆகிவிட்ட பன்மைப் பண்பையும் எடுத்துக் காட்டிற்று. இந்தியக் குடிமக்களாகிய நாம், இந்தியாவைச் சனநாயக, சமயச் சார்பற்ற, சமன்மை மிக்க, இறையாண்மையோடு கூடிய குடியரசாக அறிவித்தது.

இது என்ன? யார் செய்த சூழ்ச்சி இது? இந்தியா எங்கிருந்து முளைத்தது? குடிமக்கள் யார்? சனாதனம் தர்மமாக்கப்பட்ட நாட்டில், சமத்துவம் நுழைந்தது எப்படி? குடிமக்கள் அனைவரையும் இறையாண்மை மிக்கோராய் எப்படிக் கருத முடியும்?’ என்ற எண்ணத்திலே குடிமக்களை மத அடிப்படையில் பாகுபடுத்த குடியுரிமைச் சட்டம் கொண்டு வரத்துடிக்கும் மதவாத அரசின் மூலவர்கள், இந்தக் குடிமக்களின் இறையாண்மையை ஏற்பாரா? அது பற்றிப் பேசுவார்களா?

ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பின் மூத்தக் கருத்தியலாளரான குருஜி கோல்வால்க்கர் பாரதப் புத்திரர்களுக்கான இலக்கணம் சொல்ல வந்தபோது எந்தவித ஒளிவுமறைவுமின்றி சொல்கிறார்: “பாரதத்தில் வாழ்வோர் பாரதக் கலாச்சாரத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். பாரதத் தலைவர்களைப் போற்ற வேண்டும். இல்லையெனில் இந்நாட்டில் வாழலாம்.”

எப்படி? எப்போது? இந்நாட்டில் எந்த உரிமையும் கோராமல், ஏன் குடியுரிமை கூட இல்லாமல்தான் வாழ முடியும். நீண்ட நெடிய பாரம்பரிய வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட நாடு என்று இப்படித்தான் நடத்த முடியும். பாரதம் இப்படியே நடத்தும் இந்தக் கூற்றைப் புரிந்துகொண்டவர்கள், அகவயப்படுத்திக் கொண்டவர்கள் இந்துத்துவவாதிகள்.

சனநாயகம் எனும் உயரிய மானுட மதிப்பில் சிறிதும் நம்பிக்கையற்ற ஒரு கட்சி, சனநாயகம் முன்வைக்கும் தேர்தல் சனநாயகத்தைக் கருவியாக்கி, ஆட்சிப் பொறுப்பேற்பதால் சனநாயகவாதிகளாகிட முடியாது. வகுப்புக் கருத்தியலால் மதப் பெரும்பான்மையினரை ஒருங்கிணைத்து, பெரும்பான்மைவாத அடிப்படையில் (Majoritarian) ஆட்சி அமைத்துள்ள வகுப்புவாதிகளின் சூழ்ச்சியுள் அடங்கிய சித்தாந்தப் புரட்டை இந்தியக் கூட்டணியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்துத்துவர்களின் சனாதனத்திற்கும், சனாதனம் நியாயப்படுத்தும் தர்ம சாஸ்திரங்களுக்கும் இந்திய மண்ணில் இடமில்லை என்பதைக் காட்டியதே இந்தியா உருவாக்கிய அரசமைப்பு, அரசமைப்பின் முகப்புரை இந்துத்துவர்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய சாவு மணி! எனவேதான் மேலே சொல்லப்பட்ட குருஜி கோல்வால்க்கர், இந்திய அரசமைப்பைஇந்துக்களுக்கு எதிரானதுஎன்றார். அவர் வார்த்தையில் சொல்வதானால் இந்திய அரசமைப்புஇந்தியக் குடிமக்களாகிய நாம்என்று அறிவிக்கப்பட்ட சனநாயகம், சமத்துவம், சமயச் சார்பின்மை, குடியரசு, இறையாண்மை, நீதி,

சகோதரத்துவம் எனும் அனைத்து விழுமியங்களும் இந்துக்களுக்கு எதிரானவை.

இந்தியாஎனும் பெயரில் கூடியுள்ள இக்கூட்டணியினர், இம்முரண்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘உலகச் சனநாயகங்களின் தாய்என்று ஒரு பக்கம் சொல்லிக்கொள்வது; இந்திய அரசமைப்பை வேதத்திற்கு நிகர் எனத் துதி பாடுவது; புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அர்ச்சகர்கள் அர்ச்சிப்பது; உள்ளே வேதபாராயணம் பாடுவதெல்லாம் நாடாளுமன்ற சனநாயகத்தைத் தூக்கிப் பிடிப்பதில் மதவாதிகள் உண்மையிலேயே நம்பிக்கைக் கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளனர். இவர்களின் பொய்யான இத்தோற்றத்தை முறியடிக்க வேண்டிய தருணம் இது.

வகுப்புவாத கருத்தியல் ஒரே நாளில் விதைக்கப்பட்ட ஒன்றல்ல; தாயின் மார்பில் சுரக்கும் பாலை மெல்ல மெல்ல உறிஞ்சும் மழலை போல, மக்களிடம் ஊட்டப்படும் ஓர் உணர்வு என்பார் பேராசிரியர் பிபன் சந்திரா.

வகுப்புவாத கருத்தியல் மத ரீதியாக வளர்க்கப்படுகிறபோது, மக்களிடம் உருவாகும் பதற்றம் கலவரமாக மாறுகிறது; எப்போது கலவரமாகிறதோ, அங்கு மதவாதிகளின் நோக்கம் வெற்றிபெறத் தொடங்குகிறது. மண்டைக்காட்டில் இந்துத்துவர்களால் தொடங்கப்பட்ட மதப்பகைமை மதக்கலவரமாகி, ஒற்றுமையாக வாழ்ந்த சமூகக் குழுக்களைப் பகைக்குழுக்களாக மாற்றி அரசியல் நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். குமரி மாவட்டச் சிறுபான்மையின மக்கள் கொஞ்சம் எச்சரிக்கை தவறினால், ஒன்றிய அரசில் பாரதிய சனதாவின் சார்பில் ஒருவர் அமைச்சராவது உறுதியாகி விடுகிறது. குமரி மாவட்டத்தில் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வகுப்புவாத கருத்தியலின் விளைவுதான் இது.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களின் எளிய மத உணர்வை அரசியலாக்கி, பெரும்பான்மைவாத அரசியலைக் கட்டமைக்கின்ற நிலையில், வெற்றி பெற்றிருக்கும் பகை அரசியலால் வளர்த்து வெற்றி பெற்றிருக்கும் இன்றைய மதவாதக் கட்சியைஇந்தியாஎனும் கூட்டணி வீழ்த்துவது எளிதல்ல.

இந்திய மதவாதக் கட்சி ஒரு பாசிச அமைப்பு. சனநாயகத்துள் புகுந்து சனநாயக ரீதியாகச் செயல்படுவது போலக் காட்டிக் கொள்ளும் இவ்வமைப்பை ஒரு தேர்தல் மூலம் வீழ்த்த முடியுமா? முடியாது! ‘பாரதிய சனதாஎனும் நச்சு மிகப்பெரிய கேட்டினைத் தரும் கொடிய நச்சு எனத் தெரிந்தும், நாட்டின் பெரும்பான்மை மக்கள் இக்கருத்தினை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார்கள். இந்தப் போக்கினால் அழியப்போவது யார்?

பில்கிஸ் பானுக்களின்கதைகளை நாளும் சொல்லிப் பார்க்கிறோம். குஜராத்தின்நரோடா பாட்டில் - வினல்படுகொலை செய்யப்பட்ட 97 இஸ்லாமியர்களின் அழுகுரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் நாளும் கொல்லப்படும் பழங்குடியினர், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களின் அலறல் செவிகளை அரிப்புக்கு உள்ளாக்கவில்லையே!

இந்தியாவுக்கும், பாரதத்திற்குமான போராட்டம் இருபெரும் சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம். இந்தியாவின் அடையாளம் (Idea) வேறு; பாரதத்தின் அடையாளம் வேறு. இந்தியா பன்மையில் வாழ்வது. இந்தியா, வேற்றுமையை இயல்பாக ஏற்று, வேற்றுமையுள் ஒற்றுமை காண்பது. ஒற்றையும், ஓர்மையும் சனநாயக எதிர்பண்புகள். இவை ஏதேச்சதிகாரத்தின் குரல்கள். இந்துத்துவம் முன்வைக்கும் இந்து தேசியம் - ‘பாரதம்ஒடுக்கப்பட்ட மக்களை, சிறுபான்மையினரை ஒதுக்குவது, ஒடுக்குவது, அழிப்பது போன்றவை உள்ளடங்கிய இந்தியா.

விழித்துக்கொள்வோம். சித்தாந்தப் போரில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.

Comment