No icon

கண்டனையோ, கேட்டனையோ…

மலையப்பன் (எ) இராயப்பர் (எ) பேதுரு

1995, நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று, மதுரை ஞானஒளிவுபுரத்தில் அன்றைய தமிழக விவிலியப் பணிக்குழுவின் தலைவர் பேராயர் M. ஆரோக்கியசாமி அவர்களால் வெளியிடப்பட்டு, இன்றுவரை கத்தோலிக்கர்களின் பயன்பாட்டில் இருக்கும் திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு), ஏறக்குறைய 22 ஆண்டு காலம், 35 இறைத் தொண்டர்களுடைய, ஓய்வறியா உழைப்பில் கிடைத்த பயன்! இதன் உருவாக்கப் பணியில் ஈடுபட்ட வல்லுநர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டநினைவு மலர்’(வெளியீடு: TNBCLC, திண்டிவனம், 1995), சமீபத்தில் ஓரிடத்தில் கிடைக்கப் பெற்று, முன் அட்டை முதல் பின் அட்டை வரை வாசித்து மகிழ்ந்தேன்.

130 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய தொகுப்பு இது. சமீபக் காலங்களில் வழ வழ தாள்களில், விளம்பரங்கள் புடைசூழ அச்சிடப்படும், மூளைக்கு வேலையே தராத ஆடம்பர வகை‘Souvenirs’போலல்லாமல், இந்தமலர்எளிய வடிவத்தில், பல பயனுள்ள கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. துவக்கப் பக்கங்களில் வரும் சில தட்டையான வாழ்த்துச் செய்திகளைத் தவிர்த்து விட்டால் (இதற்கென்று ஒரு stock format இருக்கிறது... கவனித்திருக்கின்றீர்களா? I am, here by, very delighted to learn that you are... என்று ஆரம்பித்து, அப்புறம் ஆங்காங்கே சிலமானே’, ‘தேனே...’ தூவினால்வாழ்த்துச் செய்தி தயார்!), இது ஒரு முக்கிய வரலாற்று, இலக்கிய ஆவணம் என்று தயக்கமின்றி சொல்லலாம்.

பொது மொழிபெயர்ப்பில் இருக்கும் குறைகளை நீக்கி, அதன் ‘திருத் தப்பட்ட பதிப்பைத்தயாரிக்கும் பணி பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் வெளியாகலாம் என்ற சூழலில், முதல் பதிப்பு உருவான வரலாறு குறித்த சில முக்கியத் தகவல்கள் நினைவு மலரிலிருந்துஇங்கே...

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) - தமிழகக் கத்தோலிக்க ஆயர் பேரவையும், விவிலியச் சங்கங்களின் இணையமும் சேர்ந்து மேற்கொண்ட ஒரு மாபெரும் முன்னெடுப்பு. இரண்டாம் வத்திக்கான் தந்த உற்சாகத்தில் கத்தோலிக்கர், பிற சபையினர் என்ற பாகுபாடு இல்லாமல், தமிழ்ப் பேசும் எல்லாக் கிறிஸ்தவர்களும் பயன்படுத்தும் வகையில் ஒரு பொது மொழிபெயர்ப்புத் தயாரிக்க வேண்டும் எனக் கூட்டாக முடிவு செய்து, அதன் பூர்வாங்க வேலைகளை 1972 ஆம் ஆண்டு வாக்கிலேயே துவங்கியிருக்கிறார்கள். எல்லாப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் இடம்பெற்ற ஒரு மேல்மட்டக் குழு அமைத்து, மொழிபெயர்ப்பாளர்களைத் தீர்மானித்து, ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து, நிலையான வழிகாட்டு முறைகளைத் தொகுத்துக் கொண்டு, அதில் போகப் போக தேவைக்கேற்ப மாற்றங்களை அனுமதித்திருக்கிறார்கள். பணி மெதுவாக... மிக மெதுவாக முன்னேறியிருக்கிறது (முதல் மூன்று நூல்கள் தயாராக நான்கு ஆண்டுகள்!).

இரண்டு கத்தோலிக்க வல்லுநர்கள் இடையே ஒத்தக் கருத்தை உண்டாக்குவதே பெரிய சவால்! இதில் வெவ்வேறு சபையினர் இணைந்துவிவிலியம்போன்ற ஓர் ஆதார நூலை மொழிபெயர்க்கும்போது, அது என்ன மாதிரியான சங்கடங்களை உருவாக்கியிருக்கும் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகின்றது. எபிரேயர் திருமுகத்தை மொழிபெயர்த்த தந்தை R.J. இராசா,. S.J., “கூட்டத்திற்கு வந்த எல்லார் கையிலும் ஒரு A.K. 47 இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதுஎன்கிறார்.

முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ரூத்து. மொழிபெயர்த்தவர் தந்தை S. மிக்கேல் இருதயம் S.J., ஆண்டு 1974. பெங்களூருஆசிர்வாதுஇல்லத்தில் இயேசு சபையின் இறுதிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை ரூத்து நூலை மொழிபெயர்க்கச் சொல்லி, தந்தை இராசா பணிக்க... “அப்போது எங்களுக்குஆசிர்வாதுஇல்லத்தில் தனியறைகள் கிடையாது. எங்கள் ஆன்மிக வழிகாட்டியாக இருந்த தந்தை R. பெர்க், S.J., அவர்களுக்கு மட்டும் ஒரு தனியறை இருந்தது. அதில் அமர்ந்து நான் ரூத்து நூலை இரவில் மொழிபெயர்ப்பேன். தந்தை பெர்க் எனக்காக இல்லத்துக் கோவிலில் செபித்துக் கொண்டிருப்பார். இவ்வாறு ரூத்து நூலின் நான்கு அதிகாரங்களையும், நான்கு இரவுகளில் 1974 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மொழிபெயர்த்து முடித்தேன்என்று தந்தை மிக்கேல் இருதயம் எழுதுகிறார். அடுத்து அருள்திரு D. இராசரீகம் (Lutheran) அவர்கள், யோனா மற்றும் பழமொழி நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தார். திருத்திச் செம்மைப்படுத்தும் பணிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்! 1976 இல் மூன்றையும் சேர்த்து ஒரு வெள்ளோட்டப் பதிப்பாக அச்சிட்டு, உரோமிற்குப் போய் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மூன்று நூல்களின் பிரதிகளைத் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களிடம் கொடுத்து, போட்டோ எடுத்திருக்கிறார்கள். திருப்பாடல்கள் உள்பட பத்துப் பழைய ஏற்பாட்டு நூல்களை மொழிபெயர்த்த தந்தை S. மிக்கேல் இருதயம், S.J, ‘நினைவு மலரில்தமிழ் விவிலிய வரலாற்றைச் சுருக்கமாக ஓர் அட்டவணை வடிவில் தந்திருக்கிறார். பிரபல லூத்தரன் மிஷனரி சீகன்பால்கு, தரங்கம்பாடியில் அச்சு இயந்திரம் அமைத்து, 1714 ஆம் ஆண்டு வெளியிட்டஅஞ்சு வேத போஷ்த்தகம்தான் தமிழில் அச்சில் வந்த முதல் விவிலிய நூல் என்பதும், 1850 ஆம் ஆண்டு ஆங்கிலிக்கன் அருள்பணியாளர் பெர்சிவல் வெளியிட்டபழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடு’, இலங்கை தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலர் (தீவிர சைவர்) துணையுடன் மொழிபெயர்க்கப்பட்டது என்பதும் சில சுவாரஸ்ய தகவல்கள்.

தந்தை மிக்கேல் இருதயம் இந்தக் கட்டுரையின் இறுதியில், ‘கையாண்ட நூல்கள்எனக் கொடுத்துள்ள பட்டியலில் இடம்பெறும்புதிய ஏற்பாடு - புதுத் தமிழாக்கம் வெளியீட்டு விழா மலர், சென்னை (1970)’ என்ற நூல் யாரிடமாவது இருந்து, தபாலில் அனுப்பி வைத்து உதவினால், நான் பிரதி எடுத்துக் கொண்டு மறக்காமல் திருப்பி அனுப்புவதோடு, என் சொத்தில் பாதியையும் எழுதி வைப்பதாக வாக்களிக்கின்றேன்.

பொது மொழிபெயர்ப்புக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகப் பணி செய்த பெங்களூரு புனித பேதுரு பாப்பிறைக் குருமட விவிலியப் பேராசிரியர் அருள்திரு L. லெக்ராண்ட், M.E.P. அவர்கள், ‘Why New Bible Translations?’ என்று ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறப்பான கட்டுரைநினைவு மலரில்உள்ளது. எல்லா விவிலிய மொழிபெயர்ப்புகளும் முதலில் சந்தேகத்தோடுதான் பார்க்கப்பட்டன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் 70 வல்லுநர்கள் இணைந்து உருவாக்கிய எபிரேய விவிலியத்தின் கிரேக்க மொழிபெயர்ப்புப் (செப்துவாஜிந்த்) பற்றி ஒரு பழங்கால யூத குரு, “அது உருவாக்கப்பட்ட நாள், இஸ்ரயேல் வரலாற்றிலேயே மிக மோசமான நாள்என்று சொன்னாராம். எதிர்ப்புகள் தோன்றுவது இயல்பே. ஆனால், கடவுளின் வார்த்தை துடிப்புடன் செயலாற்ற, புதிய மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

எது முக்கியம்? சொல்லா? அது தரும் அர்த்தமா? வழக்கொழிந்த சொற்களைப் பிடித்துக் கொண்டு, அந்த வார்த்தைகளுக்கு ஏதோகடவுள்தன்மைஇருப்பது போலவும், அந்தச் சொற்களே தங்களுக்கு மீட்பு தந்து விடும் என்பது போலவும் நடந்து கொள்வது கூட ஒரு வகைசிலை வழிபாடேஎன்று Fr. லெக்ராண்ட் கூறுவது கவனிக்கத்தக்கது.

சிவகங்கை மேனாள் ஆயர் மேதகு சூசை மாணிக்கம், தஞ்சை மேனாள் ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ், சுல்தான்பேட்டை ஆயர் மேதகு பீட்டர் அபீர் ஆகிய மூவரும் இளமையாக, தலைகொள்ளா முடியோடு உள்ள பேராசிரியர் காலத்துப் புகைப்படங்களோடு, அவர்களின் அனுபவக் கட்டுரைகளும்மலரில்இடம்பெற்றுள்ளன. ஆயர் பீட்டர் அபீர், புதிய ஏற்பாட்டில் பிலிப்பியர் மற்றும் பிலமோன் கடிதங்களையும், பழைய ஏற்பாட்டில் குறிப்பேடு இரண்டாம் நூலையும் மொழிபெயர்த்துள்ளார். எஸ்ரா, நெகேமியா ஆகிய இரண்டு வரலாற்று நூல்களை மொழிபெயர்த்த ஆயர் அம்புரோஸ், ‘இறைவார்த்தை மனுவுரு எடுக்க, மரியாவின் உதவி தேவைப்பட்டது போல, இறைவார்த்தை தமிழ் உரு எடுக்க, மனித உதவி தேவைப்படுகிறதுஎனத் தனது அனுபவக் குறிப்பில் வியக்கிறார்.

உரோமையில் படித்துத் திரும்பிய கையோடு, பொது விவிலியத் தயாரிப்புப் பணிக்குள் இழுத்துக் கொள்ளப்பட்ட ஆயர் சூசைமாணிக்கம், முதலில் எரேமியா நூலின் பிற்பகுதியையும், திருவெளிப்பாடு நூலையும் மொழிபெயர்த்திருக்கிறார். பின்னர் இணைத்திருமுறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, பாரூக்கு நூலையும், தானியேலின் இணைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

விவிலியத்தில் இடம்பெறும் சிறப்புப் பெயர்களைத் தமிழாக்கம் செய்வதில் மொழிபெயர்ப்புக் குழுவினர் எதிர்கொண்ட சவால்களை அருள்திரு ஜோன்ஸ் முத்துநாயகத்தின் கட்டுரை சொல்கிறது. ஒலிபெயர்ப்பு (Transliteration) என்பதைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும், சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களும், விலக்குகளும் அளித்து பணியைத் தொடர்ந்திருக்கிறார்கள். ‘ஆபிரகாம்என்பதை முறைப்படிஅப்ரகாம்என்றும்,‘ஈசாக்குஎன்பதைஇஸ்காக்என்றும், ‘ஏவாஎன்பதைஅவ்வாஎன்றும் தான் ஒலிபெயர்த்திருக்க வேண்டும். ஆனால், எல்லாக் கிறிஸ்தவ மரபுகளும் வழிவழியாய் ஒரே உச்சரிப்பைப் பயன்படுத்துவதால், எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே விட்டிருக்கின்றார்கள். நல்ல வேளை! மரியா - ‘புதிய அவ்வாஎன்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கத்தோலிக்கர்களின் விவிலியம், தன்னாட்டு மயமாக்குதலை அடிப்படையாகக் கொண்டு திருத்தூதர்களின் பெயர்களைமொழிபெயர்ப்புசெய்திருந்தது. இராயப்பர், அருளப்பர், சின்னப்பர், சூசையப்பர்... எனத் தமிழ் கத்தோலிக்கர்களின் உணர்வுகளோடு கலந்து, ஒரு முதன்மைக் கத்தோலிக்க அடையாளமாக மாறியிருந்த இப்பெயர்களை ஒலிபெயர்ப்புக் கொள்கைக்காகத் தமிழக ஆயர்கள் விட்டுக்கொடுத்தார்கள். ‘பொது மொழிபெயர்ப்புப் பணியில் இது ஒரு பெருந்தன்மை மிக்க செயல்என முத்துநாயகம் சுட்டிக்காட்டுகிறார்.

நிறையக் கத்தோலிக்கர்களுக்கு இதில் வருத்தம்தான். இன்றும் பலர்... (குருக்கள் உள்பட) சின்னப்பர், அருளப்பர்... என்றே சொல்வதைக் கேட்க முடிகிறது. ‘அப்படிச் சொன்னால்தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறதுஎன்கிறார்கள். அவர்கள் தந்தை S. இராஜமாணிக்கம், S.J., எழுதியுள்ளகத்தோலிக்கப் பரம்பரையில் பழைய சிறப்புப் பெயர்கள்என்ற சிறிய கட்டுரையை வாசிக்க வேண்டும். 1554 ஆம் ஆண்டு வெளியான ‘Cartilha’ என்ற சின்னக் குறிப்பிட நூலிலேயேபேதுறு, பாவுலுஎன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவாம். பெயர்களை மொழிபெயர்ப்புச் செய்யும் பழக்கம் பின்னாள்களில்தான் வந்துள்ளது. தெலுங்கு தாக்கமும் அதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். வீரமாமுனிவர் ஆதாமுக்குஆதியப்பன்என்றும், அந்திரேயாவுக்குசூரன்என்றும் பெயரிட்டுள்ளார். இராபர்ட் தே நொபிலி, பேதுருவைமலையப்பன்என்று அழைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் ஒருவழியாகக் கடந்து வந்து விட்டோம். யோசித்துப் பாருங்கள்! இன்றுமலையப்பன்என்று கூப்பிட்டால், பேதுரு கோபித்துக்கொள்ள மாட்டாரா?

பழைய வார்த்தை விரும்பிகள், ‘Cartilha’ சின்னக் குறிப்பிடத்தில், சிலுவை அடையாள மன்றாட்டு சொல்லப்பட்டுள்ள விதத்தைக் கவனிக்க வேண்டும்: ‘பிதாவினுடேயும், புத்ரனுடேயும் சுத்தமான சித்தத்தினுடேயும் நாமமும், ஆமென். அப்படியே ஆக’. இன்று இப்படிச் சொல்லிக் கொடுத்தால், குழந்தைகள் பயந்து கொண்டு கோயிலுக்கு வரமாட்டார்கள். பொது மொழிபெயர்ப்பின் இதர சிறப்பு அம்சங்களான மரியாதைப் பன்மை, இருபாலருக்கும் பொருந்தப் பேசுதல், தெளிபொருள் மொழிபெயர்ப்பு, மாற்று கலாச்சாரப் போக்கு... போன்றவைக் குறித்து அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

செத்த மொழிக்குத்தான் புதிய மொழிபெயர்ப்புகள் தேவையில்லை. தமிழ் உயிருள்ள மொழி. அது வாழும் வரை புதிய மொழிபெயர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும்; இருக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +919342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம் அல்லது எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment