No icon

கண்டனையோ , கேட்டனையோ..

எங்கள் தலையை வெளியே எடுத்தருளும்

நிறையத் தகவல்களும், கொஞ்சம் வரலாறும் கலந்து, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு (1995) குறித்து, மிகுந்த தயக்கத்துடன் நான் எழுதியமலையப்பன் () இராயப்பன் () பேதுருகட்டுரையைப் பாராட்டி, வாசகர்களிடமிருந்து கணக்கற்றக் கடிதங்கள் (மொத்தம் மூன்று) வந்ததால், அதன் இரண்டாம் பாகத்தை ஆர்வத்துடன் எழுதத் தலைப்பட்டேன். Joking apart!இது போன்ற சற்றே கடினமான கட்டுரைகள் நம் வாழ்வு மாதிரியான வெகுசனப் பத்திரிகையில் செலவாணி ஆகுமா?’ என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. உங்கள் எதிர்வினைகள் அதைக் கலைத்துப் போட்டுள்ளன. தீவிர விசயங்களைக் கூட எளிய மொழியில், சற்று நகைச்சுவைத் தேன் தடவி எழுதினால்அதை ஆதரித்து வரவேற்க, ஒரு  கத்தோலிக்க வாசகர் வட்டம் இருக்கிறது என்பது மிகுந்த உற்சாகம் தருகிறதுகருத்துகள் அனுப்பிய அனைவருக்கும் என் வந்தனங்கள்! சென்ற கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்டதெளி பொருள் மொழிபெயர்ப்புகுறித்து முதலில் சிறிது பார்க்கலாம். ஆங்கிலத்தில்dynamic equivalence' என்று பெயர். இது பொது விவிலியத்தின் ஒரு முக்கிய அம்சம் என வல்லுநர்கள் சிலாகிக்கிறார்கள். யூஜின் நைடா என்கிற அமெரிக்கர் உருவாக்கிய இந்த மொழியியல் கோட்பாட்டின்படி, ஒரு நல்ல மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு அல்ல; சிந்தனைக்கே முக்கியத்துவம் தருகிறது (Thought for thought, instead of word for word). மூல மொழியில் சொல்லப்பட்ட கருத்து   சிதையாமல், மாறாமல் - பெறுமொழி கலாச்சாரத்திற்குப் பொருந்துகிற பாணியில் சொல்லப்பட்டால் போதும்; வார்த்தைகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் இல்லை.

தந்தை V.M. ஞானப்பிரகாசம், SJ  (சிறப்பு ஆலோசகர்) dynamic equivalence-க்கு ஓர் அழகான உதாரணம் சொல்கிறார். மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு வாழும் 30% மக்கள்பம்பாராஇனத்தவர். அவர்கள் பேசும்  ‘பம்பாராமொழியில், ‘கடவுள் நம்மை மீட்டார்என்ற சொற்றொடர், ‘கடவுள் நம் தலையை வெளியே எடுத்தார்என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாம்.  ‘என்ன மொழிபெயர்ப்பு இது? மீட்புக்கும், தலையை வெளியே எடுத்தலுக்கும் என்ன சம்பந்தம்? இதைவிட என் வீட்டுக்காரர் தெளிவாகப் பேசுவாரே!’ என்று திருமணமான வாசகிகள் நினைக்கலாம். விளக்குகிறேன். ‘பம்பாராசமூகத்தில் ஒரு காலத்தில்அடிமைகள்பழக்கம் இருந்தது. மற்ற இனத்தவர்களோடு நடக்கும் சண்டையில் பிடித்துக் கொண்டு வரும் ஆண்களை அடிமைகளாக்கி, ‘ஜாங்கோஎன்று பெயரிட்டு, கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவதோடு, அவர்களின் தலையை எப்போதும் ஓர் இரும்புக் கழுத்துப் பட்டியில் வைத்துப்  பூட்டியே வைத்திருப்பார்களாம். (காண்க: படம்). அடிமை அந்தக் கழுத்துப் பட்டியோடே நடப்பார், தூங்குவார்கனவு காண்பார். இதற்கு என்ன முடிவு? யாராவது வந்து பணம் கொடுத்து அவரை மீட்க வேண்டும். அப்போது பூட்டைத் திறந்து, கழுத்துப் பட்டியிலிருந்து அடிமையின் தலை வெளியே எடுத்து விடப்படும். ‘பம்பாராமொழியில் மீட்பு என்றால், ‘தலையை வெளியே எடுத்தல்ஏன் என்பது இப்போது புரிகின்றதா

ஒரே மூலச் சொல்லை வெவ்வேறு இடங்களில், சூழலுக்கு ஏற்ப வேறு வேறு சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் குறித்து Dr. ஜான் பிலிப்போஸ் (CSI), ‘How well do you understand your Bible?’ என்ற கட்டுரையில் சொல்கிறார். தமிழில் இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. பிரபலமானபச்சைஉதாரணத்தைச் சொல்கிறேன். ‘பச்சை’  என்ற சொல் அடிப்படையில் பச்சை வர்ணத்தைக் குறிக்கிறது. பச்சைக் கிளி! ஆனால், இதுவே, பச்சைக் குழந்தை என்றால், மிக இளமையான குழந்தை, பச்சைப் பொய் - முழுமையான பொய், பச்சைத் தமிழன் - அசல் தமிழன், பச்சையாகப் பேசுதல் - அசிங்கமாகப் பேசுதல் என இடத்திற்கு இடம் அர்த்த வேடம் மாறி ஆச்சர்யம் தருகிறது. இந்த நுட்பம் தெரியாமல் ஒருவர், பச்சைக் குழந்தை என்பதை, ‘green childஎன்றும், ‘பச்சைப் பச்சையாய்ப் பேசுறான் சார்என்பதைHe speaks very green, green sir’ என்றும் மொழிபெயர்த்தால் அபத்தமாக இருக்கும் அல்லவா! விவிலிய மொழிபெயர்ப்பில், Dr. ஜான் பிலிப்போஸ்sarxஉதாரணத்தைச் சொல்கிறார். இந்தக் கிரேக்கச் சொல்லுக்கு அடிப்படையில்தோல் நீக்கப்பட்ட விலங்கின் கறிஎன்பதே பொருள். உணவு தயாரிக்கப் பயன்படுத்துவது. ஆனால், லூக்கா 24: 39 இல் இதுமனித உடல் சதைஎன்றும் (‘எனக்கு எலும்பும், சதையும் இருப் பதைக் காண்கிறீர்களே!’), உரோமையர் 8:4 இல்ஊனியல்புஎன்றும் (‘ஊனியல்புக் கேற்ப நடவாமல்...’), உரோமையர் 11:14 இல்இனத்தவர்என்றும் (‘என் இனத் தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு...’) பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்சொன்ன எல்லா இடங்களிலும்சதைஎன்ற ஒரு சொல்லையே பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? என்று யோசித்துப் பாருங்கள்! அதுபோலவே கிரேக்க மற்றும் எபிரேய மொழியில் உள்ளidioms’ எனப்படும் சிறப்புச் சொல்லாடல்கள். 1சாமு 1:5 இல்close the wombஎன்று ஒரு சொற்றொடர் வருகிறது. சீர்திருத்தத் திரு அவை விவிலியம், அதை வார்த்தைக்கு வார்த்தை அடிப்படையில்,  ‘கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்என்று மொழிபெயர்த்திருக்க, பொது மொழிபெயர்ப்பு, ‘ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்என்று தெளிபொருளாகச் சொல்கிறது. பொது மொழிபெயர்ப்பு விவிலியம் அதிகம் படித்தவர், அதிகம் படிக்காதவர், குழந்தைகள், பெரியவர்கள்கலைஞர்கள், வியாபாரிகள், நகரவாசிகள், கிராமத்தார் என எல்லாத் தரப்பினரும் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு பொது மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. கலைச்சொற்கள், வட்டார வழக்குகள் தவிர்க்கப்பட்டுள்ளன (மறைநூல் அறிஞர்கள் இயேசுவைப் பார்த்து, ‘நீ செய்யேது ஒன்னும் சரியில்லே கேட்டியா?’ என்று சொன்னால், நாகர்கோவில்காரர்களுக்கு உவப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு விளங்காது). ‘இலக்கியத் தரமா? புரிதலா?’ என்று வரும்போது, புரிதலுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. விவிலியத்தை ஜெர்மனுக்கு மொழிபெயர்த்த மார்ட்டின் லூதர், சில நாள்கள் ஒரு கசாப்புக் கடையில் தங்கி, விலங்குகள் பலியிடுதல் குறித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னவென்பதைக் கற்றுக்கொண்ட பின்புதான், லேவியர் நூலை மொழிபெயர்த்தாராம். அன்றாட மனிதனின் அன்றாடச் சொற்கள் கொண்டே பொதுவிவிலியம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொது விவிலிய உருவாக்கத்தில் தமிழ் வல்லுநர்-ஆலோசகராகப் பணியாற்றி, ‘நினைவு மலரில்’, ‘பொது மொழிபெயர்ப்பின் தமிழ்மணம்என்ற தலைப்பில் ஒருகமகமகட்டுரை எழுதியுள்ள பேராசிரியர் முனைவர் A. அந்தோனி குருசு (திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றபோது, ஒரு வருடம், பேராசிரியர் குருசு அவர்களிடம் நான் பொதுத் தமிழ் கற்றேன் என்று இங்கே பெருமையடித்துக் கொள்ள முடியாமல் அவையடக்கம் என்னைத் தடுக்கிறது) அவர்கள் திருவிவிலியத் தமிழின் சிறப்புகளாக எளிமை, நேரடித்தன்மை, இலக்கணத் தூய்மை, சமத்துவ நடை, வட சொல்லாட்சிகளுக்குப் பதிலாக நறுந்தமிழ் சொற்கள் எனப் பலவற்றைப் பட்டியலிட்டு விட்டு, திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஓர் இலக்கண மீறலையும் குறிப்பிடுகிறார். எதிர்மறைச் சொற்கள் தமிழில் எழுவாய்க்கு ஏற்றவாறு அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ‘அவன் அல்லன், அவள் அல்லள்; அவர் அல்லர்; அது அன்று; அவை அல்லநீ அல்ல; நீர் அல்லீர்என்றே இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற நடை, சீரான வாசிப்பிற்குத் தடையாக இருக்கும் என்பதால், மொழியியல் வல்லுநர்களின் ஆதரவுடன் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒரு மரபை ஒட்டி, எல்லா எழுவாய்களுக்கும்அல்ல’, ‘இல்லை, எனும் இரண்டு எதிர்மறை வடிவங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். இது நல்ல முடிவு என்றுதான் தோன்றுகிறது. தொடர்ந்துஅவன் அல்லன்’, ‘அவள் அல்லள், என்று வாசிக்கும் பெரும் அல்லலிலிருந்து காப்பாற்றிய தமிழ் ஆசான்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம்!

அப்போதைய TNBCLC இயக்குநர், தந்தை  V. மரியதாசன், ‘A Brief  History of the Intercon fessional Tamil Bible Projectஎன்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், பழைய ஏற்பாட்டு நூல்களோடு ஆரம்பித்த மொழிபெயர்ப்புப் பணி, பின்னர் விரிவடைந்து, 1988 இல் FrL. லெக்ராண்ட், MEP, அவர்கள் தமிழ்நாடு ஆயர்கள் மத்தியில் நிகழ்த்திய ஓர் உரைக்குப் பின், புதிய ஏற்பாட்டு நூல்களையும் பொதுமொழிபெயர்ப்புச் செய்வது என்று முடிவாகி, அதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டதை விவரிக்கிறார். கத்தோலிக்க ஆயர்கள் சார்பில், Fr. C. எரோணிமுஸ் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, மூன்று வருடங்களில் எல்லாப் புதிய ஏற்பாட்டு நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சுக்குத் தயாராகினபுதிய ஏற்பாடு மொழிபெயர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகத் திறம்படச் செயல்பட்டதோடு, பழைய ஏற்பாட் டில் எரேமியா நூலின் முதல் பகுதியையும், புதிய ஏற்பாட்டில் யோவான் நற்செய்தியையும் மொழிபெயர்த்த தந்தை எரோணிமுஸ், தன்நினைவு மலர்கட்டுரையில், புதிய மொழிபெயர்ப்பின் இரண்டு சிறப்பு அம்சங்களாகமரியாதைப் பன்மைமற்றும்இருபாலருக்கும் பொருந்தப் பேசுதலைக்குறிப்பிடுகிறார். முன்னர் பயன்பாட்டில் இருந்த கத்தோலிக்க விவிலியத்தில், கடவுள், இயேசு, திருத்தூதர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் எனச் சிலருக்கு மட்டுமே மரியாதைப் பன்மை பயன்படுத்தப்பட்டது. இயேசுவின் தாய் மரியா கூட ஒருமையில்அவள்என்றுதான் குறிப்பிடப்பட்டார். பொது மொழிபெயர்ப்பில் இந்த நிலை திருத்தப்பட்டு, எல்லாருக்கும் மரியாதைப் பன்மை நீட்டிக்கப்பட்டது - உடல்நல மற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட (.ம்.: மாற்கு 1:46, ‘பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்’). கடவுளின் திட்டத்தை நேரடியாக எதிர்த்து நிற்கும் ஒரு சிலரே ஒருமையில் குறிப்பிடப்படுகிறார்கள். .ம்: யூதாசு ( ‘யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக்கொண்டு வெளியே போனான்யோவா 13: 30).

ஆணாதிக்கச் சமூகச் சூழல் காரணமாக, விவிலியத்தின் பல இடங்களில் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவான சொற்றொடர்கள், ஆண்கள் மேல் மட்டும் ஏற்றிக் கூறப்பட்டுள்ளன. .ம்: சகோதரர்களே, ஒருவன், மனிதன். ஆண்- பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பொது மொழிபெயர்ப்பில் இந்த ஆணாதிக்கச் சொல்லாட்சிகள் நீக்கப்பட்டு, இருபாலருக்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மத்தேயு 13: 9 இல்  ‘கேட்கச் செவியுள்ளோன் கேட்கட்டும்என்பது, ‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்என்று மாற்றப்பட்டுள்ளது. லூக்கா 6:30 இன்உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடுஎன்னும் வாக்கியம், மரியாதைப் பன்மையையும், இருபாலருக்கும் பொருந்தப் பேசுதலையும் மனத்தில் கொண்டு, ‘உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள்என்று மாறியுள்ளது. ‘பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தில் குறைகளே இல்லையா?’ என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் உண்டு! விடுபட்ட வரிகள், விடுபட்ட சொற்கள், பொருந்தாத தலைப்புகள், ஒற்றுப் பிழைகள்... என இவைகளெல்லாம் களையப்பட்டு, ‘திருத்திய பதிப்புதயார் செய்யப்பட்டுள்ளது. அது வெளிவரும் நேரத்தை ஒட்டி, திருத்திய பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒரு விரிவான கட்டுரை எழுதலாம் எனத் திட்டம் உள்ளது.

திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு (1995)  தமிழ்ப் பேசும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நினைத்துப் பெருமைப்படத்தக்க ஒன்று. இன்றைய தமிழ் இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஓர் இணையக் கட்டுரையில், ‘கடந்த இருபது வருட காலத்தில் தமிழில் நிகழ்ந்த பிரமாண்ட மான தமிழ்ச்சாதனைகளில் ஒன்று இந்த மொழியாக்கம்என்று சொல்வது கவனிக்கத்தக்கது.

விவிலிய பொதுமொழிபெயர்ப்புப் பற்றி தமிழ் நாடு ஆயர்கள் இறைமக்களுக்கு எழுதிய விரிவான சுற்று மடலின் முழு வடிவத்தைநினைவு மலரில்பிற்சேர்க்கையாகக் கொடுத்துள்ளார்கள். அனைத்துக் கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஆயர்கள் மடலின் இறுதி பத்தியில், ‘மேலும் நீதிக்கான போராட்டங்களில் நமது தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவச் சகோதர-சகோதரிகளுக்கான உரிமைகளைப் பெற இணைந்து போராடி வருகின்றோம். நமது கூட்டு முயற்சியின் விளைவாக, வருகின்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் இப்போதுள்ள அரசு ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் எனப் பிரதமர் உறுதி அளித்துள்ளார்என்று எழுதியுள்ளார்கள். வெளியிடப்பட்டது: திரு வருகைக் காலம், 1995.

இதை வாசித்தபோது எனக்குத் தோன்றியது இதுதான். இந்தச் சுற்று மடல் வந்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. 6 பிரதமர்கள் மாறிவிட்டார்கள். ஆயர்கள் மாறிவிட்டார்கள். ‘தாழ்த்தப்பட்டஎன்ற சொல் தவிர்க்கப்பட்டு, ‘தலித்என்ற சொல்லாட்சி வந்துவிட்டது. ஆனாலும், தலித் கிறிஸ்தவர்களுக்கான சம உரிமைகள் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லைஇந்தப் பாரபட்சமான நிலை நம் கழுத்தில் பொருத்தப்பட்ட இரும்புப் பட்டியாய் இறுக்குகிறது.  ‘பம்பாராமொழியில் வேண்டுவோம்: ‘ஆண்டவரே, விரைவில் எங்கள் தலையை வெளியே எடுத்தருளும்!!’

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை  +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமோ அல்லது எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்!)

Comment