சனாதனம் சனநாயகம்
- Author முனைவர் இ. தேவசகாயம் --
- Wednesday, 13 Sep, 2023
‘சனாதனம்’ எனும் சொல் இன்று மிக வேகமாக இந்திய மக்களிடம் ஊடுருவி, வெகுவான ஒரு விவாதப் பொருளாகி வருகிறது.
இந்தியச் சமூக அமைப்பு சந்தித்து வரும் எத்தனையோ வகை அமைப்புசார் சவால்கள் நம்மை உருக்குலைத்து வரும் சூழமைவில், சனாதனம் பற்றிய விவாதம் தேவைதானா?
இந்தியச் சமூகத்தின் இயக்கு சக்தி சனாதனமே என்று தமிழக ஆளுநர் கருத்தைத் தெரிவித்துச் சர்ச்சையைத் துவங்கி வைத்தார்.
‘சனாதனமா? சனநாயகமா?’ என்ற விவாதத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமா அவர்கள் திருச்சி மாநகரில் மிகப்பெரிய மாநாட்டைக் கூட்டி சனாதனத்தின் தோலுரித்தார். அதே நேரத்தில் அருள்பாவை தந்த வடலூர் வள்ளலாரின் கருத்துகளைச் சனாதனக் கோட்பாட்டோடு ஒப்பிட்டுப் பேசியதால் அசிங்கப்பட்டுப்போன இன்னொருவர் பற்றிய கதையையும் நாம் அறிவோம்.
‘சனாதனம்’ என்பது வெறும் சொல்லல்ல; ‘சனாதனம்’ ஒரு கருத்தியல் என்ற நிலையில் இக்கருத்தியலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த வரலாறு திராவிடத்திற்கும், திராவிட இயக்கத்தின் பெரியாருக்கும் உண்டு. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் இளைய அமைச்சர் ஒருவர், ‘சனாதனத்தை அவமதித்துவிட்டார்’ என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு, தமிழக எல்லையையும் தாண்டி ‘இந்திய தேசம்’ முழுமையாகப் பரவி வருகிறது.
சனாதனம் பற்றிய விவாதம் ஆரோக்கியமான சூழலைத் தாண்டி, கட்சி அரசியலின் ஒரு பகுதியாகத் தனிநபர் பழிப்புக்கும், இழிவுக்கும் கருவியாகி வருவதோடு, வகுப்புவாதப் பகையரசியலின் ஒரு பகுதியாக்கும் சூழ்ச்சிக்கும் காரணியாக்கி வருவதைப் பார்க்கிறோம். ஏற்கெனவே இந்தியாவில் வகுப்புவாதிகளால் திட்டமிட்டு வளர்க்கப்பெறும் பகையரசியல் வளர்ச்சிக்குச் சனாதனம் கருவியாவதைப் பார்த்து வருகின்றோம்.
சனாதனம் எனும் கருத்தியலை, ஒரு சமயக் கண்கொண்டு பார்த்தல் தவறான விளைவைத் தரும் என்பதால், அப்பார்வையைத் தவிர்க்கிறோம். சனாதனத்தை விமர்சிப்போரை இந்துமத எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கும் வெகுவேகமாக வளர்க்கப்பட்டு வருகையில், மத அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் உண்டு. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர் என்பதோடு, கூடவே பார்ப்பனியக் கோட்பாட்டையும் கடுமையாக எதிர்த்தவர். பார்ப்பனியக் கோட்பாடுகளைக் காக்க உதவிய இந்து மதத்தையும் சாடியவர் பெரியார். எனவே, திராவிட அரசின் ஓர் இளைய அமைச்சர் சனாதனத்தைச் சீண்டிப் பார்த்தார் என்பதால், அவரை இந்து மதத்திற்கு எதிரானவராகச் சித்தரிக்கும் போக்கை நாம் ஏற்கவில்லை. தாக்குதலுக்குள்ளான அமைச்சரும், தான் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்லர் என்று அறிவித்துள்ளதையும் அறிந்துகொள்வோம்.
சனநாயகம் - அது என்ன? சனாதனமும், சனநாயகமும் இணைந்து செல்ல முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே சனாதனத்தின் தேவை அல்லது தேவையின்மை பற்றிப் பேச இயலும்.
சுதந்திரம் பெற்ற இந்தியா தனக்கென ஒரு கருத்தை அல்லது அடையாளத்தை (Identity or idea) உருவாக்க முயன்றபோது கிடைத்த பெரும் பேறுதான் சனநாயகம்! சனநாயகம் என்னும் விழுமியம் வேர்கொள்வதற்கு ஏற்றச் சூழமைவு எதுவுமே அற்ற இந்தியச் சமூகத்தில், சனநாயகத்தை ஊன்றியவர்களை நாம் நன்றியோடு நினைவில் கொள்வோம்.
வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்த சாதியம், அதன் இறுகிப்போன படிநிலை அமைப்பு (Hierarchy) இதனை நியாயப்படுத்தி நிலைப்படுத்தியிருந்த வர்ணக் கோட்பாடுகள் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தியுள்ள வர்க்க, வர்ண முரண்பாடுகள் என்பனவற்றின் எந்தக் கூறுகளிலும் சனநாயகப் பண்பின் எந்த வாசனைக் கூறும் இயலா நிலையில், இந்திய நாட்டில் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தியாவின் அடையாளமாகச் சனநாயகத்தை முன்மொழிந்தது. அரசியல் நிர்ணய சபையின் 300 உறுப்பினர்களில் பலருக்கும் சனாதனம் பற்றிய தெளிவும், நம்பிக்கையும் உண்டெனினும், சனநாயகத்தைக் கருத்து வேறுபாடின்றி முன்மொழிந்தனர். இந்தியச் சமூக அமைப்பு வலிந்து நியாயப்படுத்தி வந்த வர்ண தர்மத்திற்கு, சனநாயகம் முரண்பட்டதென்று தெரிந்தும் சனநாயகத்தை வழிமொழிந்தனர். இந்திய அரசியல் நிர்ணய சபையின் (Debates) விவாதங்களை வாசிப்போர் இதனை அறிவர். இந்தியாவின் அடையாளம் சனநாயகமாக அறிவிக்கப்பட்டால் சனநாயகத்தின் உள்ளடக்கமாம் சமமின்மை அல்லது சமத்துவம் இந்திய வர்ணத் தர்மத்திற்கு முரணானதில்லையா? சனநாயகம், சமத்துவம் என்பனவற்றோடு சமயச் சார்பின்மையும் இந்தியாவின் அடிப்படை அடையாளமாக இணைக்கப்பட்டால், அங்குதான் பழமையான இந்து மதத்திற்குக் குழி பறிக்கப்படும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்திய உறுப்பினர்களும் இருந்தனர். எனினும், அன்றைய தலைவர்கள் இந்தியாவைச் சனநாயக, சமயச் சார்பற்ற சமத்துவ, இறையாண்மையோடு கூடிய குடியரசாக அறிவித்தனர்.
இந்தியாவிற்கான இந்தப் புதிய அடையாளம், இந்தியாவின் மதவாத அரசியலார்க்கு உகந்த அடையாளமாக இருந்ததில்லை. 1925 ஆம் ஆண்டு நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவான ஆர்.எஸ்.எஸ்., அதன் முதல் தலைவர் ஹெக்டேவர், பின்னாளில் தலைமையேற்ற கோல் வார்க்கர் ஆகியோருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெரிய முரணாகவே தெரிந்தது. எனவேதான் ஆர். எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலாளராகிய கோல்வால்க்கர், இந்திய அரசியலமைப்பை இந்துக்களுக்கு எதிரானது (Unhindu) என்றார்.
சனநாயகம், சமயச் சார்பின்மை, இறையாண்மை, குடியரசு என்பன எப்படி இந்துக்களுக்கு எதிரானதாகும்? இவ்விழுமியங்கள் இந்துக்களுக்கு எதிரானவை என்றால், இந்துக்களுக்கு உகந்த விழுமியங்கள் யாவை? இந்துவுக்கான அடையாளம் (Identity) எது? இந்துவும், இந்தியாவும் ஒன்றானால், இந்தியா எதனடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்? சனாதனம் இந்துமதக் கோட்பாடு என்றால், அது இந்து மதத்தின் பிரச்சினை. ஆனால், இந்து என்பதும், இந்தியா என்றழைப்பதும் ஒன்றானால், அதனை ஏற்க வேண்டுவது கட்டாயமல்ல. இந்தியா வேறு; இந்து வேறு என்ற வேறுபாட்டை ஏற்றுக்கொள்ளாத வரை சனாதனம் சந்தேகத்துக்குரியதே.
இந்தியா இந்துக்களின் நாடு. இந்து மதக் கொள்கைகளை, இந்து மதமாச்சாரியங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்தியர்கள் அல்லர் என்பது உணர்த்தும் பொருள் என்ன? இந்துமதக் கொள்கை என்றும் மாறாத (Eternal)) சனாதனத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதிலும், அதனை நம்புவதிலும் எவர்க்கும் முரண்பட வாய்ப்பில்லை.
ஆனால், சமயச் சார்பற்ற சனநாயகக் குடியரசின் கொள்கை, ஒரு மதம் ஏற்றுக்கொள்ளும் சனாதனத்தில் அமைய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதில்லையா?
மதச்சார்பற்ற நாடு ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கைகளைச் சார்ந்து செயல்படும் என்பது, இந்து மதம் சாராத ஏனைய மதக்குழுவினரைப் பாகுபடுத்தல் ஆகாதா? சனநாயக, சமயச் சார்பற்றக் குடியரசை நம்புவதாக உறுதியேற்று ஆட்சி அமைத்தவர்கள் அப்பட்டமாக மீறுதல் முறையா?
சனநாயகம் பன்மையை மதிப்பது; பன்மைச் சமூகங்களின் சம பங்கேற்பை ஏற்பது. சனநாயகம் குடிமக்களை அவர்கள் சார்ந்த இனம், மொழி, சமயம் எனும் அடிப்படையில் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது. எனவே, சனநாயகப் பண்புகளை உத்தரவாதப்படுத்தும் பாராளுமன்ற சனநாயகம் தரும் தேர்தல் வழி ஆட்சி கட்டிலேறி, அதே சனநாயகத்தை உடைத்தல் அறம் மீறிய செயலல்லவா?
நாடாளுமன்றச் சனநாயகத்தை வலுப்படுத்த புதிய கட்டடம் கட்டுதலும், அக்கட்டடத்தின் துவக்க விழாவுக்குச் சமயாச்சாரிகள் தலைமையில் பூஜை செய்வதும் சனநாயக நிறுவனங்களுக்குத் தரும் மரியாதையா? இந்திய அரசமைப்புச் சட்டத்தை வேதமெனப் போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய சனநாயகத்துக்கு முரணான சனாதனத்தை மறுக்காதிருப்பது ஏன்?
“இந்து சமயம் என்றால்,… ஏனைய சமயங்கள் நம்பிக்கையும், தொழிலையும் அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், ‘சனாதன தர்மா’ என்பது வாழ்வை (Life) அடிப்படையாகக் கொண்டது. இச்சமயம் நம்பிக்கை அடிப்படையில் அமைவது அல்ல, இது வாழ்வு”.
“இந்தியா உறுதியாக எழும்; இந்தியா தர்மத்தால் மட்டுமே வாழ்கிறது. மதத்தைப் பெரிதுபடுத்துதல் என்பது நாட்டைப் பெரிதுபடுத்துதலே”.
“சனாதன தர்மா வீழ்ச்சி அடைகையில் தேசமும் வீழ்ச்சியடைகிறது. சனாதன தர்மா என்பது தேசியம்” (Nationalition).
“சனாதனத் தர்மத்திற்கும், தேசத்திற்குமான தொடர்பு என்பது, ஒரு வாகனத்திற்கும், அதன் உறுப்புகளுக்குமான தொடர்பை ஒத்தது”.
“சனாதனம் (eternal) என்று அழைக்கப்பெறுவதே நம் சமயம். இந்து தேசம், இந்து சமயத்தைக் காத்து வருகிறது. இமய மலையாலும், கடலாலும் சூழப்பட்ட இந்தப் புராதன நிலம், ஆரிய இனப் பெருமையைக் காலங்காலமாய்க் காத்து வரும் பெருமையடைந்தது.”
(அரவிந்தர் அவர்களின் கூற்று நூல்: De colonizing the Hindu Mind. Dr. Kolurad Elst. பக்: 440,441,442).
சனாதனத்தைத் தேசியத்தோடும், தேசத்தின் இருப்போடும் உருவகிக்கும் அரவிந்தரின் சிந்தனைச் சாரம், சனாதனத்தின் உள்ளடக்கத்தை நமக்கு நன்குணர்த்தும் என்பதாலேயே அப்படியே தரப்பட்டது.
இது இந்து தேசம்; இந்துக்கள் மட்டுமே வாழ்வதற்கான தேசம் (Hindus Constitute No Nation). இத்தேசத்தை இயக்குவது சனாதனம். சனாதனம் நித்தியமானது, மாறாதது! மாறா இயல்புடைய சித்தாந்தம் யாருக்குரியது? சனாதனம் ஒரு தர்மம். வர்ணம் ஒரு தர்மம். வர்ணத்தின் அடிப்படையிலான சாதியம் தர்மம். இத்தர்மம் படிநிலை அமைப்பை உடையது. படிநிலை அமைப்பு சமத்துவத்திற்கு எதிரானது.
சமத்துவத்திற்கு முரணான சனாதனத்தைச் சனநாயகம் ஏற்றுக்கொள்ளுமா? நீண்ட விவாதத்திற்குத் தயாராவோமா?
Comment