No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 19

பன்முகத் தன்மை அவசியமா?

சென்ற வாரத் தொடரானதப்பிப் பிழைப்பதே தலையெடுக்கும்பகுதியைப் படித்துவிட்டு, கலவையான கருத்தோட்டங்களைப் பலர் பகிர்ந்தனர். அதில் குறிப்பாக ஒருவர், ‘போட்டி நிறைந்த உலகம்தானே! நிறுவனங்களில் எப்படிப்பட்ட போட்டிகள் இருக்கும்?’ எனக் கேட்டிருந்தார். போட்டிகள் இல்லாத இடம் எதுவும் இல்லை. நிறுவனங்களில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவரவர் எடுக்கும் நிலைப்பாடுகளில் பல்வேறு போட்டி நிலைகள் இருக்கும். அப்போட்டி ஆரோக்கியமானதா? அல்லது நம்மை அழித்தொழிப்பதா? என்பதுதான் கேள்வி.

நிறுவனத்தில் பணியாளர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியானது, தன்னையும், நிறுவனத்தையும் உயர்த்துவதாக இருந்தால் வரவேற்கலாம்; இல்லையெனில், அதைச் சரிசெய்து இணக்கமான சூழலை உருவாக்குவது மனிதவளத் துறையின் கடமை. கொடுத்த இலக்கை அடைய தனிப்பட்ட ஒருவரின் முயற்சியை விட, குழு முயற்சிதான் முழுமையான வெற்றியைத் தரும்.

மொத்தத்தில், வெற்றி என்பது தொடர் ஓட்டம். அதில் பலரின் ஒத்துழைப்பு மிக அவசியம். இந்த அவசியத்தின் அவசியத்தை உணரும்போது, போட்டி மனப்பான்மை ஆரோக்கியம் மிக்கதாக இருக்கும். இல்லையெனில், வெறுப்புணர்வையும், பகை உணர்வையும் மட்டுமே ஏற்படுத்தும்.

விளையாட்டுப் போட்டிகள் வைப்பதன் நோக்கமே ஒருவருக்கு ஒருவர் உதவி மற்றும் புரிந்து (‘உதவிபுரிந்துஎன ஒரே வார்த்தையில் கூட சொல்லலாம்!) மனிதப் பற்றை வெளிப்படுத்துவதுதான். ஆதலால்தான் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் நான் எடுக்கும் பயிற்சி வகுப்புகளை விளையாட்டு / செயல்பாடு (Activity Based) அடிப்படையில் அமைத்துக்கொள்வேன். அது எளிய மற்றும் வலிமையான புரிதலை ஏற்படுத்தும்.

நம் வாழ்வில் தொடர் வெற்றியை ஏற்படுத்த ஒரு திறமை போதுமா? இல்லை, பல்வேறு திறமைகள் வேண்டுமா? இங்கு நாம் பேச வேண்டியது பன்முகத் திறமைகள் பற்றித்தான். ஒரே வேலையில்ஓகோவென ஆவோரும் உள்ளனர்; பல்வேறு திறமைகள் இருந்தும் முறையான மடைமாற்றம் இல்லாத காரணத்தால் ஒன்றும் இல்லாமல் இருப்பவரும் உள்ளனர். திறமையைக் கசக்கிக் காசாக்கும் திறன்தான் இங்கு மதிக்கப்படுகிறது. இல்லையெனில், மூடி வைக்கப்பட்ட அழகுச் சிலை போலத்தான்.

ஒரு திறமையைக் கைக்கொண்டு, அதில் முழுக் கவனம் செலுத்தி முன்னேறுவது ஒரு ரகம். பல்வேறு திறமைகளைத் தன்னுள் வைத்து மிகச் சிறந்த ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக் கொள்வது இன்னொரு ரகம்.

நம் கண்முன்னே எத்தனையோ தலைவர்களைப் பார்த்துள்ளோம்; அவர்களது அளப்பரிய ஆற்றல் நம்மைத் திகைக்க வைக்கும். ‘எப்படி இவர்களால் மட்டும்?’ என மெய்சிலிர்க்க வைக்கும். ‘ஏன் நம்மால் முடியாதா?’ ‘முடியும்என்கிறார் சார்லஸ் டார்வின். எப்படி? பன்முகத்தன்மை என்பது கடவுளிடம் இருந்து வந்தது என்பதைவிட, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்துள்ளார். இம்மண்ணில் வாழும் திறமையும், தகுதியும் இயற்கை நமக்குத் தானாகவே தந்துள்ளது, அதை முறைப்படுத்தி, முயன்று முன்னேறுவது அவரவர் கடமை. திறனைத் தந்தது இயற்கை; வளர்த்தெடுப்பது அறிவியல்... அவ்வளவுதான்!

இன்னும் சொல்லப்போனால் விதைக்குள் இருக்கும் உயிர்த்தன்மை இயற்கை; அது முளைத்தெழுந்து வெளியே வருவது அறிவியல். இங்கு அறிவியல் என்பது வளர்சிதை மாற்றம் மற்றும் சூழல். இப்போது நன்றாகப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதல்ல வாதம். கடவுள் கற்பிதம் வேறு, அறிவியல் கற்பிதம் வேறு. இதற்கு மேல் இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

பல திறமைகள் ஒருங்கே அமைந்த பலரைப் பார்த்து  நாம் வியந்து போகின்றோம். அதற்காக அவர்கள் எவ்வளவு முயற்சிகளையும், பயிற்சிகளையும் கடந்து வரவேண்டி இருக்கிறது. நாமும் அதற்குத் தகுதியானவர்கள்தாம். மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்ட் டாவின்சி போன்றோரெல்லாம் பல திறமைகளைத் திறம்படக் கற்று வெளிப்படுத்தியவர்கள். நிறுவனங்களில் இம்மாதிரியான பல் திறமை உள்ளவர்களுக்குத் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. எல்லாவற்றிலும் அவர்களது பங்களிப்பு உண்டு.

இவர்களுக்கு ஒரு சிக்கலும் உண்டு. ஏதாவது ஒரு சிறு தவற்றை அவர்கள் செய்யும்போது, அல்லது கொடுக்கப்பட்ட ஒரு வேலையைச் சற்றுத் தாமதமாகச் செய்யும்போது, ‘ஒரு வேலையில உருப்படியா கவனம் வைக்கணும்; நாய் வாய் வச்ச மாதிரி எல்லாத்துலயும் வாய் வச்சா இப்படித்தான்எனும் சுடுசொல் வரும். கண்டும் காணாமல் புறந்தள்ளி, அதற்கான படிப்பினைகளை மட்டும் கவனத்தில் கொண்டு கடந்துவிடுவது நல்லது.

நிறுவனத்தில் உயர் நிலையில் இருக்கக்கூடிய பலரை நான் பார்த்துள்ளேன். பல்வேறு விசயங் களில் / செயலில் அவர்களது பங்களிப்பும், செயல்பாடும் இருக்கும். இதற்காகவே பல்வேறு வசை பாடல்கள் அவர்கள்மீது விழும். எதையும் திறம்படச் செய்ய முடியாதவர்களின் செயல் இது என நினைத்து, நமக்கான முதன்மைக் கடமையில் தவறாது, சிறப்புறத் தொடர்ந்து செயல்படுவதுதான் அவர்களுக்கு நாம் தரும் பரிசாக இருக்கும்.

இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு இன்னொரு நிறுவனத்திற்கு வேலை செய்வது என்பது அதுவும் வியாபாரப் போட்டி உள்ள இன்னொரு நிறுவனத்திற்குப் பகுதி நேரமாக வேலை செய்வது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதே நேரத்தில், அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரத்தில் உங்களது திறனை, பங்களிப்பைச் செய்வதை யாரும் தடுக்கப் போவதில்லை.

இப்போது Moonlight எனும் பிரச்சினை ஓடிக்கொண்டு இருக்கிறது. நிலா எப்படி மாதத்தில் சில நாள்கள் ஒளி மிகுந்தும், சில நாள்கள் ஒளி குறைந்தும் தென்படுகிறதோ அதுபோல, சில பணியாளர்கள் குறிப்பாக இந்தத் தொற்று காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் விருப்ப நிலையினால் (Work from Home) இம்மாதிரி நிலா போல சில நாள்கள் வேறு நிறுவனப் போட்டியாளர்களுக்கு வேலை செய்யும் போக்கு உள்ளது.

இங்குதான் ஒரு கேள்வி வருகிறது. திறமையானவன்தானே இப்படித் தவறு செய்கிறான்? அப்படியல்ல, கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தாண்டி, யார் இதுபோல செய்தாலும் தவறுதான்.

திறமை என்பது நம்மை அங்கீகரிக்க;

பல்திறமை என்பது நம்மை அடையாளப்படுத்த என்பதை

நினைவில் கொள்வோம்.

நமக்கான முன்னேற்றத்தைத் தடுக்கும் சிலரை என்ன செய்வது? அசுர பலம் கொண்டு எதிர்ப்பதை விட, அதிகார மற்றும் அரசியல் பலம் கொண்டு எதிர்ப்பது மிக எளிது. ஆம், இது பற்றி விரிவாக அடுத்த வாரம்அரசியல் சுவைப்போம்எனும் தலைப்பில் பேசுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment