
கண்டனையோ, கேட்டனையோ...
கதவு சொல்லும் கதைகள்!
- Author ஜார்ஜி --
- Thursday, 26 Oct, 2023
பல வருடங்களுக்கு முன் இணையத்தில் பார்த்து பிரமித்த ‘Door’ என்ற ஆங்கிலக் குறும்படம் இப்போது கூகுளில் காணவில்லை. நினைவிலிருந்து சொல்கிறேன். படம், ‘Obsessive Compulsive Disorder’ என்று சொல்லப்படும் ‘மன அழற்சி நோயால்’ பாதிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பற்றியது. ஐந்து அல்லது ஆறு நிமிடங்கள் நீளத்தில், மிகக் குறைவான பாத்திரங்கள் கொண்டு, வார்த்தைகள் எதுவும் இல்லாமல், நடிப்பு, இசை, மற்றும் மாறும் கேமிரா கோணங்கள் எனும் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி, ஒரு ‘O Henry’ சிறு கதையின் மாயாஜாலத்தை நிகழ்த்திய, ‘Door’ நான் ‘கண்ட, கேட்ட’ சிறந்த உலகக் குறும்படங்களில் ஒன்று என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
ஒரு படுக்கை தலைமாட்டில் இருக்கிற அலாரம் அலறுவதில் படம் ஆரம்பமாகிறது. கதாநாயகன் அடித்துப் பிடித்து எழுந்து அவசரக் கதியில் அலுவலகம் கிளம்புகிறான். கதவை நன்றாகச் சாத்தி, தாழ்ப்பாளைப் போட்டு, பூட்டி, பூட்டை நன்றாக ஆட்டி, வீட்டைப் பத்திரப்படுத்தி விட்டோம் என்பதை உறுதி செய்துகொண்டு படிக்கட்டில் இறங்குகிறான். சிறிது தூரம்தான்... ஐந்தாறு படிக்கட்டுகள் இருக்கும். அதற்குள் அவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. ‘கதவைச் சரியாகத்தான் பூட்டினோமா?’ திரும்பவும் ஏறிப் போகிறான். தாழ்ப்பாளை ஆட்டிச் சரிபார்த்துவிட்டு புறப்படுகின்றான். காம்பவுன்ட் கேட்டைத் தாண்டியதும் மீண்டும் சந்தேகம் வருகிறது. திரும்பக் கதவுக்கு ஓடுகிறான். அடுத்த முறை பேருந்து நிலையத்திலிருந்து. அலுவலகத்திற்குத் தாமதமாகப் போய், மேனேஜரிடம் திட்டு வாங்குகிறான். இது தினமும் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் மேனேஜர், ‘நாளையிலிருந்து நீ வேலைக்கு வராதே’ என்று சொல்லி விடுகிறார். கதாநாயகன் “இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள்” என்று அவரிடம் மன்றாடிக் கேட்டு வீட்டிற்கு வருகின்றான். அந்த இரவு முழுவதும் அவனுக்குப் பயங்கர மன உளைச்சல். ‘எப்படி இந்தச் சிக்கலிலிருந்து மீள்வது?’
அடுத்த நாள் காலை!
வழக்கம்போல் அலாரம் அடிக்கிறது. அவன் நிதானமாக எழுந்து தயாராகின்றான். வழக்கமான காரியங்கள், அதே வரிசைப் பிரகாரம். எந்தப் பிழையுமின்றி நடந்து முடிந்தபின், கதவைப் பூட்டும் அந்த அதிமுக்கியக் கட்டம் வருகின்றது. ‘இன்றோடு இந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது முடிவு கட்டியாக வேண்டும்!’ கதவைச் சாத்தி, தாழ்ப்பாளைப் போட்டு, பூட்டி, பிறகு பூட்டைப் பிடித்தபடியே கதாநாயகன் சிறிது நேரம் நிற்கிறான். பின்னர் ஏதோ முடிவெடுத்தவனாய் மீண்டும் சாவியைப் போட்டு, பூட்டைத் திறந்து, தாழ்ப்பாளை விலக்கி, கதவை அகலத் திறந்து விடுகிறான். ‘குப்’பென்று ஒரு கற்றை வெளிச்சம் அவன் முகத்தில் வந்து விழுகிறது. பெரிதாகப் புன்னகைக்கிறான். அடுத்து அவன் செய்வதுதான் ஆச்சர்யம்! அதுவரை கதவைப் பூட்டிச் சரி பார்ப்பதிலேயே குறியாயிருந்தவன், இன்று திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு அலுவலகம் கிளம்புகிறான். கேட்டில் நின்று கொண்டு மீண்டும் ஒரு முறை தன் வீட்டைத் திரும்பிப் பார்க்கிறான். கதவு அகலமாகத் திறந்து கிடக்கிறது. அதே புன்னகை! இப்பொழுது ஒரு துள்ளல், நடையில் வந்து ஒட்டிக்கொள்கிறது. ஆயுள் தண்டனை ரத்தாகி, சிறையிலிருந்து வெளிவந்த கைதியைப் போல மகிழ்ச்சியாக, கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு சாலையில் ஓடுகின்றான். டாப் ஆங்கிளிலிருந்து கேமிரா கீழிறங்கி அவனைத் தழுவிக் கொண்டு மேலே போய், ஸ்கை ஸ்க்ரேப்பர்ஸின் உச்சிகளை உரசிவிட்டு, நீல வானத்தில் குத்திட்டு நிற்க, சுபம்.
அபாரம்! ‘Door’ குறும்படம் சில நிமிடங்களில் எத்தனை விசயங்களைச் சொல்லிவிடுகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்.
‘மனசுழற்சி’ எனும் ஆளுமைக் கோளாறு உள்ள ஓர் ஆள் எப்படி அந்தச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான் என்று காட்டப்படுகிறது. It is by bravely trying the opposite. இருட்டு உனக்குப் பயம் தருகிறதா? அப்படியென்றால், தொடர்ந்து இருட்டி லேயே நட, இரு. Befriend your enemy. இருட்டைப் பற்றிய பயம் உனக்கு அறவே போகும் வரை, அதோடு அதிகம் பழகு, நட்பு பாராட்டு. இது ஒரு வகையான உளவியல் சித்தாந்தம். அதைத் தான் இந்தக் குறும்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கதவு சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பது பற்றிய தொடர் சிந்தனையால் அவதிப்படுகிற அவன், கதவைத் திறந்துவிட்டே போவதன் மூலம் விடுதலை அடைகிறான். He takes a plunge. விளைவு, கை (கதவு) மேல் பலன்!
இன்னொரு தளத்தில் கதையை நகர்த்திக் கொண்டு போனால், அங்கு கதவு ஒரு குறியீடாகிறது. மூடியுள்ள கதவு, மூடியுள்ள மனத்திற்கு ஓர் உருவகம். மூடப்பட்டுள்ள எதுவும் எளிதில் கெட்டுப்போய் விடுகிறது. விவேக் ஒரு படத்தில் பிச்சைக்காரியாக நடிக்கும் கோவை சரளாவைப் பார்த்து, “அது என்ன மூணு நாளா மூடி வச்ச பிரியாணிய தொறந்தது மாதிரி அப்படியொரு நாத்தம்...” என்று சொல்வார். உங்கள் மனத்தை மூடியே வைத்திருக்காதீர்கள். நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். திறந்து விடுங்கள். புதுக் காற்று, புது வெளிச்சம் கொஞ்சம் படட்டும். அது நலன் தரும். நவீன மருத்துவம் நமக்குச் சொல்வதும் இது தான். மனத்தை இலேசாக வைத்திருங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது: உங்கள் மனக் கதவுகளைத் திறந்து, யாரிடமாவது வெளிப்படையாகப் பேசுவது.
கொலை, குண்டுவெடிப்பு, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதைப் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஓர் உளவியல் நிபுணரிடம் பேச வேண்டும் (counselling session) என்பது மேலை நாடுகளில் கட்டாயம். நம் நாட்டில் இது போன்ற ‘ஆற்றுப்படுத்துதல்களுக்கு’ யாரும் முக்கியம் தருவதில்லை. எது நடந்தாலும், முகத்தைக் கல் மாதிரி வைத்துக்கொண்டு, எதுவும் நடக்காதது மாதிரி நடப்பதுதான் இங்கே ‘அழகு’ என்று சொல்லப்படுகிறது. ‘ஆண் பிள்ளை அழலாமா?’ வலிக்காத மாதி ரியே நடிக்கணும். தவறு! ‘மனக் கதவைத் திறந்து பேசுங்கள்’ என்கிறது ‘Door’ குறும்படம்.
பேசுவது நிபுணராகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நண்பன், தோழி, ஆசிரியர், ஆன்மிகக் குரு என்று நம்பகத்தன்மை கொண்ட யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ‘If you want to talk about it, I am here for you’ என்ற வசனத்தை ஆங்கிலத் திரைப்படங்களில், நாடகங்களில் நீங்கள் அடிக்கடி கேட்கலாம். சாலையில் பேப்பர் பொறுக்குகிறவன் கண்டவற்றையும் எடுத்து, தன் கோணிப்பைக்குள் அமுக்கி வைப்பது போல, எல்லா விசயங்களையும் போட்டு மனத்தில் அடைத்து வைக்காதீர்கள். மனத்தின் கொள் திறனுக்கு ஓர் எல்லை இருக்கிறது. So, open up!
இன்னொரு கோணத்தில் கதவைத் திறப்பது என்பது மாற்றத்திற்கான ஓர் அடையாளமாக இருக்கிறது. நம் முன்னாள் போப்பாண்டவர் ஒருவர் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார் தெரியுமா? திருந்தந்தை 23-ஆம் ஜான். 77 வயதில், சில மாதங்களில் இறந்து விடுவார் என்ற நம்பிக்கையில், கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இடைக் கால ‘stop-gap’ போப். ஆனால், அவர் திரு அவையில் கொண்டு வந்த மாற்றம் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் திறந்து வைத்து அவர் சொன்ன இந்த வாக்கியம் உலகப் பிரசித்தம்: “Come, let us open the windows of the Church, so some fresh air comes in...”, “வாருங்கள்... திரு அவையின் சாளரங்களைத் திறப்போம்... கொஞ்சம் புதிய காற்று உள்ளே நுழையட்டும்...” இன்று திரு அவையில் நாம் காணும் பல்வேறு மாற்றங்களுக்கு அன்று திருத்தந்தை 23-ஆம் ஜான் திறந்து வைத்த சன்னல்களும், கதவுகளும்தான் காரணம்.
திருத்தந்தை பிரான்சிஸ் இன்னும் சில கதவுகளைத் திறக்க ஆசைப்படுகிறார். விடுவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
வில்லியம் ஹோல்மன் ஹன்ட் (William Holman Hunt) என்ற இங்கிலாந்து நாட்டு ஓவியர் வரைந்த, ‘The Light of the World’ என்கிற உலகப் புகழ்பெற்ற ஓர் ஓவியம் இருக்கிறது (காண்க படம்). கையில் ஒரு அரிக்கேன் விளக்கை வைத்துக்கொண்டு, முள்முடி அணிந்த இயேசு, கொடிகள் மண்டிய, துருப்பிடித்த கீல்கள் கொண்ட, வெளியே கைப்பிடி இல்லாத ஒரு கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் இந்த ஓவியம், திருவெளிப்பாடு 3:20 இறைவார்த்தையின் அடிப்படையில் வரையப்பட்டது. திருவெளிப்பாடு
3:20-ஐ வாசித்திருக்கின்றீர்களா? திருவிவிலியத் தில் எனக்கு மிகவும் பிடித்த ‘Top-10’ வாக்கியங்களை யாராவது பட்டியலிடச் சொன்னால், முதல் ஐந்துக்குள்ளாகவே திவெ 3:20-ஐ வைப்பேன். “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.”
வில்லியம் இந்த ஓவியத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார். பாலஸ்தீன நாட்டிற்குப் போய் அங்குள்ள நிலம், வீடுகளின் அமைப்பு, நிலவொளி எல்லாவற்றையும் நேரில் பார்த்துப் படித்து வந்தாராம். 21-வது வயதில் ஆரம்பித்து, 1853-ஆம் ஆண்டு தன் 29-வது வயதில்தான் ஓவியத்தை நிறைவு செய்திருக்கிறார். ஏறக்குறைய எட்டு ஆண்டுகளின் உழைப்பு இது. சில நாள்களிலேயே பிரபல்யம் அடைந்து, ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்திருக்கிறார்கள். ‘Sermon in a Frame’ - அதாவது ‘ஒரு சட்டகத்தில் மறையுரை’ என்ற பெயர் கிடைத்தது. பிற நாட்டினவரும் பார்க்க விரும்பியதால் 1905-1907 ஆண்டுகளில் கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து எனப் பல நாடுகளுக்கு இந்த ஓவியம் பயணம் செய்திருக்கிறது. உலக வரலாற்றில் அதிகப் பயணம் செய்த கலைப் படைப்பு இந்த ஓவியம் என்று சிலாகிக்கப்படுகிறது.
இது ஓர் உருவக ஓவியம். படத்தின் ஒவ்வோர் அம்சத்திற்கும் ஓர் அர்த்தம் சொல்லப்படுகிறது. இரண்டு வெளிச்சங்கள் இந்த ஓவியத்தில் இருக்கின்றன. வண்ண ஓவியத்தில் தெரியும் (விரும்புபவர்கள் கூகுள் சென்று பார்க்கலாம்) அரிக்கேன் வெளிச்சம் மனசாட்சியையும், இயேசுவின் தலையைச் சுற்றியுள்ள வெளிச்சம் மீட்பின் ஒளியையும் குறிக்கிறது. மூடப்பட்டுள்ள கதவு மனித ஆன்மாவைக் குறிக்கிறது. துருப்பிடித்த ஆணிகளும், கொடிகளும் இந்தக் கதவு பல ஆண்டுகளாகத் திறக்கப்பட வில்லை என்பதைக் காட்டுகின்றன. வெளியே இல்லாத கைப்பிடி, உள்ளே இருப்பவர் விரும்பிக் கதவைத் திறந்தால்தான் யாரும் உள்ளே செல்ல முடியும் என்பதை உணர்த்துகின்றது.
அந்தக் கதவு நீங்களும், நானும்தான்! இயேசு வெளியே நின்று தட்டிக் கொண்டிருக்கிறார்?
என்ன செய்யப் போகிறோம்?
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்சப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)
Comment