No icon

உயிருள்ள கல்லறைகள்

நவம்பர் 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள். நமக்காக வாழ்ந்து மரித்த நம் முன்னோர்களை நன்றியுடன் நினைத்துப் பாhர்க்கும் உன்னதமான திருவிழா! அவர்கள் வாழ்ந்து காட்டிய நல்ல விழுமியங்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கும் பொருளுள்ள விழா! உறவினர்களை ஒன்றுபடுத்தும் ஓர் அருள்சாதன விழா!

கல்லறையில் அடக்கம் செய்வது ஆபிரகாம் காலத்திலிருந்து தொடங்கி, இன்று வரை ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படுகிறது. அன்னை தெரேசாவின் கல்லறைக்குச் சென்றால் எளிமை, சேவை எனும் மதிப்பீடுகளின் அதிர்வுகளை உணரலாம். பூண்டி மாதா கோவிலில் தந்தை லூர்து சேவியர் அவர்களின் கல்லறையில் பக்தி எனும் அதிர்வலைகளை உணரலாம். சருகணியில் லெவே தந்தையின் கல்லறைக்குச் செல்லும் போது தியாகம் எனும் மதிப்பீடு நம் உள்ளத்தை வருடுவதை உணரலாம். எந்த இலட்சியத்திற்காய் வாழ்ந்தார்களோ, அந்த இலட்சியத்தை நினைவுபடுத்தும் ஆலயமாக, அருளடையாளங்களாக இன்றைய கல்லறைகள் விளங்குவதைப் பார்க்கலாம்.

உயிருள்ள கல்லறை வாழ்வு என்பது, நாம் வாழும்போதே மனித விழுமியங்களை, மனசாட்சியை, திறமைகளை மறுத்து, மறந்து, மழுங்கடித்து, அவைகளுக்குக் கல்லறைக் கட்டி வாழ்க்கையைக் கடத்துவது. இவ்வகை உளவியல் மரணங்களால் உருவாவதே உயிருள்ள கல்லறை வாழ்வாகும்.  

‘வெந்ததைத் தின்போம், விதி வந்தால் சாவோம்’ என்று எந்தவித இலட்சியமுமின்றி வாழ்வது உளவியல் மரணமாகும்; நடைபிண வாழ்வாகும். ‘மனித வாழ்வின் நோக்கமே, நோக்கமுள்ள வாழ்வு தான்’ என்கிறார் ராபின் ஷர்மா. இலட்சியமின்றி வாழ்க்கை நடத்துவது உயிருள்ள கல்லறை வாழ்வாகும்; உளவியல் மரணமாகும். பத்தோடு பதினொன்றாய், அத்தோடு நாமொன்றாய் எவ்விதத் தடமும் பதிக்காது வாழும் வாழ்க்கையாகும். இறையாட்சியை இலட்சியமாகக் கொண்ட இறைமகன் இயேசுவின் வாழ்வு உயிர்ப்பு வாழ்வாகும் (லூக் 10:6). இலட்சியப் பிடிப்புடன் வாழ்ந்திட கல்லறைத் திருநாள் நமக்கு அறைகூவல் விடுக்கின்றது.

“வாழ்வின் சோகம் மரணம் அல்ல; மாறாக, வாழும்போதே நம்முள் இருப்பதைச் சாகவிடுவது மரணமாகும்” என்கிறார் உளவியலாளர் நாரிமன் காலிங்ஸ். இறைவன் படைத்த திறமைகளைக் கண்டுகொள்ளாது, கண்டு கொண்டும் அதைப் பயன்படுத்தி வளர்த்துக்கொள்ளாது வாழ்வது உயிருள்ள கல்லறை வாழ்வாகும்; உளவியல் மரணமாகும். ஆனால், தனக்குத் தந்த ஒரு தாலந்தைப் பயன்படுத்தாத பயனற்ற வாழ்வு வாழ்ந்திடும் ஊழியனை வெளியிருளில் தள்ளும்படி பணிக்கிறார் (மத் 25:30). தந்தை தந்த திறமைகளைப் பயன்படுத்தாது வாழ்வது உளவியல் மரணமாகும்; உயிருள்ள கல்லறை வாழ்வாகும்; திறமைகளைக் கண்டுணர்ந்து, வாய்ப்புகளைப் பயன்படுத்தி உயிர்ப்பு வாழ்வு வாழ்ந்திடுவோம்.

குடும்ப உறவையும், பிறரன்பையும் மறந்து, மதுவிற்கும், மாதுவிற்கும் அடிமையாகி, தனக்கும்- பிறருக்கும் சுமையாக வாழ்வதும் ஊதாரி மைந்தரைப் போல் (லூக் 15:16) வாழ்வதும் உயிருள்ள கல்லறை வாழ்வாகும். மனமாற்றம் அடைந்து அன்பில் வாழ்ந்து, தியாகத்தில் பிறரை வாழ்விக்கவும் அழைப்பு விடுக்கிறது இந்தக் கல்லறைத் திருநாள்.

‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு, வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக அமைந்து, சொகுசு உலகத்தில் (comfort zone)  வாழ்வதும் (லூக் 16:19) மரணத்தை முத்தமிடுவதாகும். இத்தகைய வாழ்வைப் பணக்காரனும், ஏழை இலாசரின் கதையிலும், அறிவற்ற செல்வனின் (லூக் 12:19) உவமையிலும் இயேசு சாடுகிறார். நாற்றமெடுக்கும் தேங்கிய சாக்கடைகளாய் இல்லாது, ஓடுகின்ற நதிகளாய்ப் பிறருக்குப் பயன்படுவோம். பாதுகாப்பின்மையையும், சிலுவைகளையும் சமுதாய முன்னேற்றத்திற்காக எதிர்கொள்வோம்.

பிறருடன் தன்னை ஒப்புமைப்படுத்தி, தன்னைத் தாழ்வாய் எண்ணி, இறைவன் தனக்குத் தந்த கொடைகளையும், திறமைகளையும் எண்ணாது, பிறரைக் குறை சொல்லித் தீர்ப்பிட்டு, எவ்வித மாற்றமும், முன்னேற்றமும் இன்றி முடங்கிய வாழ்வு வாழ்வது உளவியல் மரணமாகும். இத்தகைய மனப் போக்கை இறைவன் பரிசேயரும், வரிதண்டுவோரும் உவமையில் (லூக் 18:10) எடுத்துரைக்கிறார்.

பணம், பதவி, புகழ் போன்றவற்றை மட்டும் நம்பி, ஏழை எளியோரின் வாழ்வைச் சுரண்டி, பிறருடைய உழைப்பைப் பயன்படுத்தி, சாதி, மத, இன வேறுபாட்டுடன் உயர்வு-தாழ்வு காட்டி, சமுதாயத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டும் காணாமல் வாழ்வது உயிருள்ள கல்லறை வாழ்வாகும்.

ஆமோஸ் இறைவாக்கினர் கூறுகையில், “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கிறீர்களே! வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும், இரு காலணிகளுக்கு வறியோரையும் வாங்கலாம்” (ஆமோ 8:4,6) என்ற மனிதாபிமானமற்ற வாழ்க்கையும் உயிருள்ள கல்லறை வாழ்வாகும். எனவே, ஈரமான உணர்வுகளுடன் சமூக நீதிக்காய்க் குரல் கொடுப்போம்.

எனவே, இந்தக் கல்லறைத் திருநாளில் உறுதி ஏற்போம். இந்நாள் வரை வாழ்ந்த உயிருள்ள கல்லறை வாழ்வை விடுத்து, உயிர்த்தெழுவோம் புதிய மனிதர்களாய்!

Comment