No icon

வாழ்வு வளம் பெற – 12

ஏதோ ஒன்று எல்லாரிடமும்...

எனது இருக்கை இருந்த அந்த இரயில் பெட்டியில் ஓர் இளம் தம்பதியும், அவர்களது மகனும் இருந்தனர். இன்னொரு முதியத் தம்பதியும் அங்கே இருந்தனர். இருவருக்கும் வயது அறுபதுக்கு மேல் இருக்க வேண்டும்.

இளைய மனைவி தனது மடிக்கணினியில் பார்த்துப் பார்த்து, பார்த்தவற்றில் சிலவற்றை எதிரே அமர்ந்திருந்த கணவரிடம் சொல்ல, கணவர் கைபேசியில் யார் யாரையோ தொடர்பு கொண்டு பேசினார். மடிக்கணினியை மூடிவிட்டு மனைவியும், கைபேசியைத் தள்ளி வைத்துவிட்டு கணவரும் சிறிது ஓய்ந்திருந்த நேரத்தில் கணவரிடம், “ஏதோ ஒரு நிறுவனத்தில் நீங்கள் இருவரும் முக்கியப் பொறுப்பில் இருப்பது போலத் தெரிகிறது. என்ன நிறுவனம்?” என்று கேட்டேன்.

உற்சாகம் அவரது குரலில் தெரிந்தது. “நேரா நேரம் சமைத்த உணவைப் பயனாளிகளுக்கு விரைவில் கொண்டு போய்ச் சேர்க்கும் நிறுவனம் எங்களுடையது” என்றார்.

“அதுக்குத்தான் இந்த ஸொமாட்டோ, ஸ்விக்கி மாதிரி பெரிய பிரபல நிறுவனங்கள் இருக்கே?”

“இல்ல. அவங்க ஏதாவது உணவு விடுதியில் சமைத்ததைக் கொண்டு போய் விநியோகிக்கிறாங்க. உணவு விடுதிகள் சமைத்துப் பரிமாறும் உணவு சிலருக்கு ஒத்துக்கொள்றதில்ல இல்லையா? வீட்டுச் சமையல் என்றால் நம்பி நன்றாகச் சாப்பிடலாம் அல்லவா! சமையலில் தேர்ந்த பெண்கள் தங்கள் வீடுகளில் சமைத்துத் தருவதைத்தான் நாங்கள் விநியோகிக்கிறோம்” என்றார்.

“உணவை எப்படி ஆர்டர் பண்ணுவது?”

“அதற்கென்றே ஒரு செயலி இருக்கிறது. உங்கள் கைபேசியில் அதைப் பயன்படுத்தி என்னென்ன வேண்டும் என்பதைச் சொல்லி விடலாம்.”

இது அதுவரையில் நான் அறிந்திராத ஒரு பயனுள்ள தகவல்!

மதிய உணவு முடிந்ததும் முதிய தம்பதியரில் கணவர் எதிரே இருந்த படுக்கையில் படுக்க, அவரது மனைவி எழுந்து போய் அவர் காலருகே அமர்ந்து கொண்டு, இன்னொரு படுக்கையைக் காட்டி, “நீங்கள் சிறிது ஓய்வெடுக்க விரும்பினால் இங்கே படுத்துக்கொள்ளலாம்” என்றார். ‘நன்றி’ சொல்லிவிட்டுப் படுத்தேன்.

இருபது நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. படுத்திருந்த என்னைத் தட்டி எழுப்பினார் பயணச்சீட்டுப் பரிசோதகர். “சாரி சார்” என்றார். எழுந்து உட்காரச் சொல்கிறார் என்பது புரிந்தது. எழுந்து அமர்ந்தேன். பரிசோதகர் கையில் இரு பைகள் இருந்தன. அவருக்கு அருகில் ஏறத்தாழ முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி களைப்போடு நின்றார். அவர் நிறைமாதக் கர்ப்பிணி என்பது எங்கள் அனைவருக்கும் புரிந்தது. அவர் சொன்னார்: “சார், இந்த அம்மா முன்பதிவு செய்யவில்லை. முன்பதிவு செய்யாதவர்களுக்கு உள்ள இரயில் பெட்டி ஒன்றில் எப்படியோ ஏறி இடம் பிடித்து நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்ததும், ‘எவ்வளவு நேரம் அவரால அப்படியே நிற்க முடியும்?’ என்ற கேள்வி எனக்குள் வந்தது. அதனாலதான் அவங்களை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கேன். இந்த இரண்டும் அவர் தூக்கி வந்த பைகள். நீங்களெல்லாம் சம்மதித்து, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா இவர் இங்கே அமர்ந்து பயணம் செய்யலாம். நீங்க என்ன சொல்றீங்க?” என்று எங்களைப் பார்த்துக் கேட்டார் பயணச்சீட்டுப் பரிசோதகர்.

எல்லாரும் “தாராளமா வரட்டும்” என்று சொல்ல, அந்தப் பெண்ணின் பைகளைக் கீழே வைத்து உள்ளே தள்ளிவிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து, “நான் வரேன்மா” என்று சொல்லி விட்டு நகர்ந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் பைகளை ஒரு பயணச்சீட்டுப் பரிசோதகரே தூக்கி வந்து, அவருக்கென்று இடம் தேடிப் பிடித்து அமரச் செய்திருக்கிறார். வியப்பாக இருந்தது.

வேகமாக நடந்து அவர் பின்னே சென்று அவரை நிறுத்தி, “சார், அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்களே, அவங்க உங்களுக்குச் சொந்தமா?” என்று கேட்க, அவர் சொன்னார்: “என்ன சார்? இந்த நிலையில இருக்கிற ஒரு பெண்ணுக்கு உதவ அவங்க சொந்தக்காரங்களா இருந்தாகணுமா, சொல்லுங்க” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டதே என்று இரண்டாவது மாடியிலிருந்த அறையிலிருந்து வேக வேகமாகக் கீழே படிகளில் இறங்கி ஓடியபோது இடறி விழுந்தேன். மேலே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் கைகொடுத்துத் தூக்கி விட்டுச் சொன்னார்: “சார், படியில இப்படி ஓட்டமும், நடையுமா இறங்கினா ஒரு ரெண்டு மூணு நிமிஷத்தை மிச்சம் பிடிக்கலாம். இப்படி ஓடி வரும் போது விழுந்து காலை உடைச்சிக் கிட்டீங்கன்னா, ஆஸ்பத்திரியில எத்தனை நாள் இருக்கணும்னு யோசிச்சீங்களா?” என்று கேட்டார்.

யார் என்று தெரியாத அந்தப் பெண் அன்று சொன்ன அந்தச் சொற்கள் இன்றுவரை நினைவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், அவற்றில் இருக்கும் உண்மையும், ஞானமும்தானே!

தன் மகனோடு தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைப் பற்றி ஒரு தந்தை எழுதியிருக்கிறார். பள்ளியில் நடந்த கண்காட்சிக்காக மரத்தில் ஒரு சிறிய வீடு செய்யப் போகிறேன் என்று மகன் போன அறையிலிருந்து இரண்டு மணி நேரம் கழித்து அவன் சத்தமாய் அழும் குரல் கேட்டது. தாயும்-தந்தையும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அவன் கை விரல்களிலிருந்து இரத்தம் கொட்டியது. “மரத்தை அறுக்கும் போது ரம்பம் கைல பட்ருச்சு” என்று சொல்லி அவன் அழுதான். கட்டுப் போட்டாலும் இரத்தம் கொட்டுவதை நிறுத்த முடியவில்லை. எனவே, அவனை காரில் உட்கார வைத்து அவசர அவசரமாகக் காரைக் கிளப்பி மருத்துவமனைக்கு விரைந்தார் தந்தை. இரத்தப்போக்கை விரைவில் நிறுத்தாவிட்டால் மகனுக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் தந்தை பதற்றத்தோடு செயல்பட்டதை மகன் கவனித்தான்.

தந்தை மிக வேகமாகக் காரை ஓட்டினார். முன்னே போன வாகனங்களை எல்லாம் முந்தினார். ஒரு சிவப்பு விளக்கு இருந்ததைக் கூட பொருட்படுத்தாமல் தாண்டிப் போனதும், மகன் கவலையோடு அவரைப் பார்த்துச் சொன்னான்: “அப்பா, நீங்க இப்ப நிதானமா, கவனமா ஓட்டலன்னா நான் கைய வெட்டிக்கிட்டதை விட மோசமான விபத்து நிகழ வாய்ப்பு இருக்கு. இதுல நான் மட்டுமில்ல. நம்ம ரெண்டு பேருமே ரொம்ப பாதிக்கப்படுவோம்.”

தன் பன்னிரண்டு வயது மகன் சொன்னதில் இருந்த உண்மையையும், ஞானத்தையும் உணர்ந்த தந்தை சுதாரித்துக் கொண்டார்.

நாம் கவனமாய்த் தவிர்க்க வேண்டிய சிலரைத் தவிர, மற்றவர்களோடு பேசுவது நமக்குப் பல விதங்களில் பயனளிக்கும் என்பதை உளவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

செல்வர்களோ-ஏழைகளோ, படித்தவர்களோ- பாமரர்களோ யாராக இருந்தாலும், அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒன்றில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். படிப்போ, சிந்தனையோ, அனுபவமோ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒன்று நமக்கு இன்றோ, நாளையோ அவசியமானதாக, மிகப் பயனுள்ளதாக அமையலாம்.

ஒரு நபரின் தோற்றத்தைப் பார்த்து, ‘இந்த ஆளிடம் நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்க முடியும்?’, ‘எனக்குத் தெரியாத ஒன்றையா புதிதாகச் சொல்லிவிடப் போகிறார்?’ என்பது போன்ற கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு, திறந்த மனத்தோடு சக மனிதர்களிடம் பேசி, அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டால் நம் வாழ்க்கை மேலும் வளம் பெறும்.

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)

Comment


TOP