No icon

யூபிலி கி.பி. 2025: எதிர்நோக்கின் திருப்பயணிகள் பொருள்-நோக்கம்-தயாரிப்பு-பங்கேற்பு

கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றம் 2021-2024-க்கான 16-வது பொதுப் பேரவையின் முதல் அமர்வு கடந்த அக்டோபர் மாதம் உரோமையில் நிறைவுற்றது. இரண்டாவது அமர்வுக்கான தயாரிப்புகள் தொடங்கியிருக்கிற வேளையில், நம் தாய்த் திரு அவை மற்றொரு கொண்டாட்டத்தை முன்மொழிந்து, அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள நம்மை அழைக்கிறது. இயேசு கிறிஸ்து பிறந்த, 2025 ஆண்டின் நிறைவுக் கொண்டாட்டமாக, ‘எதிர் நோக்கின் திருப்பயணிகள்’ எனும் மையக்கருத்துடன் யூபிலி கி.பி. 2025-ஐ நோக்கி நாம் பயணம் செய்கின்றோம். யூபிலி கி.பி. 2025-இன் பொருள், இந்த யூபிலி கொண்டாடப்படுவதன் நோக்கம், அதற்கான தயாரிப்பு, யூபிலியில் நம் பங்கேற்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

1. யூபிலி கி.பி. 2025: பொருள்

அ. விவிலியத்தில் யூபிலி

‘யூபிலி’ எனும் ஆங்கிலச் சொல் ‘யோபேல்’ (தமிழில், ‘ஆட்டின் கொம்பு’) என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து வருகிறது. 50-வது ஆண்டின் தொடக்கத்தில், அதாவது 49 ஆண்டுகள் (7 முறை 7 ஆண்டுகள்) நிறைவில் ஆட்டின் கொம்பை எக்காளமாகக் கொண்டு ஊதி அதை அறிவிப்பது விவிலிய மரபு. லேவி 25:8-13-இல் குறிப்பிட்டுள்ளபடி அடிமைகளை விடுதலை செய்தல், கடன்களை மன்னித்தல், சொத்துகளை மீண்டும் உரியவரிடம் சேர்த்தல் போன்றவை யூபிலிக் கொண்டாட்டத்தின் கூறுகளாகக் கருதப்பட்டன. யூபிலி ஆண்டில் செய்ய வேண்டிய செயல்களாக மோசே சட்டம் பின்வருவனவற்றை முன்மொழிகிறது: அ) ஓய்வு (நிலத்திற்கு ஓய்வு அளிக்க வேண்டும்); ஆ) திரும்பிப் பார்த்தல் (வாழ்க்கை, கால்நடை, அடிமைகள், நிலம் என அனைத்தையும் கணக்குப் பார்த்து திறனாய்வு செய்து பார்க்க வேண்டும்); இ) புதுப்பித்தல் (சமூகம் என்னும் குழுமத்தின் ஓட்டம் மீண்டும் பூஜ்யத்திலிருந்து தொடங்க வேண்டும்); ஈ) ஒப்புரவு (கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் உறவுகளைச் சரிசெய்ய வேண்டும்).

எசாயா இறைவாக்கு நூலில் யூபிலி பற்றிய மற்றொரு புரிதலைப் பார்க்கின்றோம். “ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார்” (எசா 61; காண். லூக் 4) என முழங்குகிறார் எசாயா. ‘ஆண்டவர் அருள்தரும் ஆண்டு’ எனும் சொல்லாடல் யூபிலியைக் குறிக்கிறது எனப் பொருள்கொள்ளலாம். யூபிலி ஆண்டில் ஆண்டவராகிய கடவுளின் அருளும், இரக்கமும் அறிவிக்கப்பட வேண்டும்.

மேற்காணும் இரண்டு விவிலியப் பாடங்களின் பின்புலத்தில், ‘யூபிலி’ என்பதைக் ‘கடந்த காலத்தைத்’ திரும்பிப் பார்த்து (விடுதலை பெற்று), ‘நிகழ் காலத்தில்’ நின்றுகொண்டு (ஆறுதல் பெற்று), ‘எதிர்காலத்தை’ நோக்கி நகர்வது (முன்னேறிச் செல்வது) எனப் புரிந்துகொள்ளலாம். மேலும், யூபிலிக் கொண்டாட்டத்தில் ஆண்டவராகிய கடவுளின் காலத்தைக் கொண்டாடுகிறோம். ஏனெனில், ‘காலங்கள் அவருடையன; யுகங்களும் அவருடையன’; ‘கடவுள் அனைத்தையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்து முடிக்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்’ (சஉ 3:11).

ஆ. திரு அவை வரலாற்றில் யூபிலி

திரு அவையில் மூன்று வகையான யூபிலிக் கொண்டாட்டங்கள் உள்ளன: அ) எண்வரிசை (சாதாரண) யூபிலி - ஒவ்வோர் இருபத்தைந்து ஆண்டிலும் கொண்டாடப்படுவது; ஆ) சிறப்பு (அசாதாரண) யூபிலி - சூழலுக்கேற்றாற்போல அறிவிக்கப்படுகிற யூபிலி. எடுத்துக்காட்டாக, ‘தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாய்’ எனும் தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்து, 2015-16-ஆம் ஆண்டு நாம் கொண்டாடிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு; இ) மாபெரும் யூபிலி - ஒவ்வோர் ஆயிரமாண்டிலும் வருகிற யூபிலி. மாபெரும் யூபிலி 2000 என நாம் கொண்டாடினோம்.

எண் வரிசை (சாதாரண) யூபிலி திருத்தந்தை 8-ஆம் போனிஃபாசு அவர்களால் 1300-வது ஆண்டில் தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட வேண்டும் என்ற யூபிலியை, ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை என 1343-இல் மாற்றுகிறார் திருத்தந்தை 6-ஆம் கிளமெண்ட். 1470-இல் திருத்தந்தை 2-ஆம் பவுல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி கொண்டாடப்பட வேண்டும் என அறிவிக்கிறார். திருத்தந்தை 9-ஆம் பயஸ் 1933-ஆம் ஆண்டை மீட்பின் 1900-ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் எனச் சிறப்பு யூபிலி ஒன்றை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, யூபிலி 2033 என்பதை அருங்கொடை அமைப்புகள் முன்மொழிந்து வருகின்றன. ஆனால், திரு அவை இதைப் பற்றிய எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மாபெரும் யூபிலி 2000 மூன்றாண்டுகள் தயாரிப்புடன் - 1997 (மகனாகிய கடவுள் ஆண்டு), 1998 (தூய ஆவியாராகிய கடவுள் ஆண்டு), 1999 (தந்தையாகிய கடவுள் ஆண்டு) - கொண்டாடப்பட்டது.

இ. யூபிலி 2025: மையக் கருத்தும், இலச்சினையும்

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்பதே யூபிலி 2025-இன் மையக் கருத்தாகும். யூபிலி 2025 கொண்டாட்டங்கள் பற்றி மறைபரப்புப் பணிக்கான பேராயத்தின் பதிலி-தலைவர் பேராயர் ரினோ ஃபிஸிகெல்லா அவர்களுக்கு எழுதுகிற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘எதிர்நோக்கு எனும் நெருப்பை நாம் தொடர்ந்து பற்றியெரியச் செய்ய வேண்டும். பெருந்தொற்று, போர்கள், கடினமான பொருளாதாரச் சூழல்கள், தான்தோன்றித்தனமான அரசியல் போக்குகள் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டுமெனில், எதிர்நோக்கு எனும் திரியை அணையாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார். எதிர்நோக்கை மீட்டெடுக்கவும், தக்க வைக்கவும், மற்றவர்களுக்கு வழங்கவும் நம்மை அழைக்கிறது யூபிலி 2025.

‘ஜாக்கோமோ த்ரவிஸானி’ எனும் இத்தாலிய ஓவியரால் வரையப்பட்டுள்ள யூபிலி 2025 இலச்சினையில், நான்கு மனித உருவங்கள் முதன்மையாக இருக்கின்றன. நான்கு வண்ணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு உருவங்கள் இவ்வுலகத்தின் நான்கு மூலைகளையும், நான்கு திசைகளையும் குறிக்கின்றன. ஒருவர் மற்றவரைச் சகோரத்துவத்திலும், ஒன்றிப்பிலும் தழுவிக்கொள்ளும் உருவங்கள், இறுதியாகச் சிலுவையைப் பற்றிக் கொள்கின்றன. கிறிஸ்தவ மரபில் சிலுவை என்பது எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கிறது. ஏனெனில், இறப்புக்குப் பின்னும் வாழ்வு உண்டு என்ற செய்தியைச் சிலுவை வழங்குகிறது. நான்கு மனித உருவங்களின் அமைப்பு படகு போலவும் உள்ளது. படகு என்பது திரு அவையின் அடையாளம். நீல நிறத்தில் காணப்படும் அலைகள் இந்த உலகின் உறுதியற்ற, வலுவற்ற சூழலைக் காட்டுகிறது. நான்கு உருவங்கள் தழுவிக் கொண்டிருக்கும் சிலுவையின் அடிப்பாகத்தில் நங்கூரம் உள்ளது. கடலின் அமைதியற்ற சூழலில் அமைதியுடன் நிலைகொள்ள உதவுகிற நங்கூரமும் எதிர்நோக்கின் அடையாளமாக உள்ளது. ஒட்டுமொத்த இலச்சினையிலும் ஓர் இயக்கம் உள்ளது. இந்த இயக்கம் தனிநபர்களின் தனித்த பயணம் அல்ல; மாறாக, அவர்கள் குழுமமாக இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயணம். இலச்சினையின் கீழ்ப்பகுதியில் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ (இலத்தீனில், ‘பெரேக்ரினாந்தெஸ் இன் ஸ்பெம்’) எனும் மையக் கருத்தும், மேல்பகுதியில், ‘யூபிலி கி.பி. 2025’ எனும் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஈ. யூபிலிக் கொண்டாட்டத்தின் கூறுகள்

யூபிலி 2025 கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கிற மறைபரப்புப் பணிக்கான திருப்பேராயம், உலகின் மறைபரப்புப் பணிக்கான அடிப்படைக் கேள்விகளுக்கான அமைப்பு, யூபிலியின் ஏழு கூறுகளை முன்மொழிகின்றன: அ) திருப்பயணம் (பயணம், எல்லைகளைத் தாண்டுதல், ஒட்டுமொத்தத் திரு அவையோடு, உலகோடு இணைந்து நடத்தல்); ஆ) புனித கதவுகள் (அடையாளம், இயேசுவே வாயில், உரோமையில் நான்கு பேராலயங்களுக்கு, ஆலயத்தின் இதயத்துக்குள் நுழைதல்); இ) ஒப்புரவு (கடவுளை நம் வாழ்வின் மையமாகக் கொள்தல், சமூக நீதியை மீட்டெடுத்தல், ஒப்புரவு அருளடையாளம் பெறுதல்); ஈ) இறைவேண்டல் (கடவுளின் திருமுன்னிலையில் மனம் திறத்தல், அவருடைய அன்பை ஏற்றுக்கொள்தல்); உ) வழிபாடு (திரு அவையில் இணைந்த வழிபாடு); ஊ) நம்பிக்கை அறிக்கை (திருமுழுக்குப் பெற்றவரின் அடையாளம், திருத்தூது நம்பிக்கை அறிக்கை, நிசேயா அறிக்கை), (எ) பாவமன்னிப்பு பலன் (கடவுளின் இரக்கத்தை அனுபவித்தல், நம் துன்பங்களை ஒப்புக்கொடுத்தல்).

2. யூபிலி கி.பி. 2025: நோக்கம்

யூபிலி 2025 மூன்று காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது:

அ) இயேசுவைக் கொண்டாடுதல். இயேசு பிறந்த 2025-ஆம் ஆண்டுக் கொண்டாட்டமாக யூபிலி அமைவதால், இயேசுவே நம் கொண்டாட்டத்திற்கான முதல் காரணம். அவருடைய பிறப்பு, வாழ்க்கை, பணி, போதனை, வல்ல செயல்கள், பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை நாம் நினைவுகூர்கின்றோம். மேலும், தனிப்பட்ட முயற்சிகள் வழியாக அவரை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும், அவரை இன்னும் அதிகமாக அன்பு செய்யவும், இன்னும் நெருக்கமாகப் பின்பற்றவும் தூண்டுகிறது யூபிலி ஆண்டு.

ஆ) திரு அவையைக் கொண்டாடுதல். நம் தாயும், ஆசிரியருமான திரு அவையைப் பற்றி அறிந்து கொள்ளவும், நம் ஒன்றிப்பைக் காட்டவும், பங்களிப்பைச் செலுத்தவும் இந்த ஆண்டில் நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இ) நம்மைக் கொண்டாடுதல். நாம் ஒவ்வொருவரும் சிறப்பான கொடைகளையும், வரங்களையும், அழைப்புகளையும், பணிகளையும், வாழ்க்கை முறைகளையும், மதிப்பீடுகளையும் பெற்றுள்ளோம். இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து நம்மையே புதுப்பித்துக்கொள்ளவும், கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் உறவுகளை ஆழப்படுத்தவும் நம்மை யூபிலி ஆண்டு அழைக்கிறது. நம் திரு அவை மேற்கொண்டுள்ள கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றம் எனும் பயணத்தில், தோழமை, பணி, பங்கேற்பு என நம்மையே இணைத்துக்கொள்வது நலம்.   (தொடர்ச்சி அடுத்த இதழில்...)

Comment