No icon

வாழ்வு வளம் பெற – 14

துரத்தும் சாபங்கள்

கற்களைக் கையில் வைத்துக் கொண்டு, பற்களைநறநறவென்று கடித்துக் கொண்டு, பழி சுமத்தப்பட்டு முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் பலிகடாவைக் கல்லால் எறிந்து கொல்லக் காத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வாழ்க்கை வளம் பெற வாய்ப்புள்ளதா? உங்களுக்கு நீடித்த மகிழ்வும், நிறைவும் என்றாவது சாத்தியமா?

மணிப்பூரில் நடந்த இனக் கலவரங்களில் இருகுகிஇனப் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாய் அழைத்துச் சென்று அவமானப்படுத்தி, வல்லுறவு கொண்டு தூக்கி எறிந்த கூட்டத்தில் இருந்த மனிதர்களின் மனத்தில் மகிழ்வும், வாழ்க்கையில் வளமும் வசப்படுமா?

அற உணர்வு சிறிதுமில்லா கயமையும், வெட்கத்திற்குரிய கோழைத்தனமும் கொண்டோரே இத்தகைய கும்பல்களில் சேர்ந்து கொண்டு, அகப்பட்டுக் கொண்ட அப்பாவிகளைத் தாக்குகின்றனர்.

அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆள்வோரும், அவர்களின் ஏவலர்களும் மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். ஆனால், கடவுள் மறப்பதில்லை. திக்கற்றோருக்குத் துணையாக இருக்கும் கடவுளின் கோபத்தையும், சாபத்தையும் இவர்கள் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

ஒரு குற்றமும் அறியாத தன் தம்பி ஆபேலைவா, வயல்வெளிக்குப் போவோம்என்று ஏமாற்றி அழைத்துச் சென்று கொன்ற கயவன் காயின். அவனைக் கடவுள் இடைமறித்து விசாரணை செய்கிறார். திமிரோடு பதில் கூறும் காயினிடம் கடவுள் சொல்லும் சொற்களை நாம் கவனிக்க வேண்டும். “உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறதுஎன்று கூறிய கடவுள், அவன் சந்திக்கப் போகும் விளைவுகளை விவரிக்கிறார். “இது தாங்க முடியாத தண்டனைஎன்று புலம்பும் காயினின் கதிதான் இத்தகைய கும்பல்களில் இருப்போருக்கும்.

இவர்களை இயக்குவது என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் இதனைகும்பல் மனப்பான்மை’ (mob mentality) என்கின்றனர். இத்தகைய கும்பலில் சேர்ந்து கொள்ளும் நபர்கள் சுயமாகச் சிந்திப்பதில்லை. எனவே, தங்கள் செயல்களின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று இவர்கள் யோசிப்பதில்லை. இறைவன் தந்த சிந்திக்கும் திறனை அந்தக் கும்பலை வழிநடத்தும் சிலரிடம் அடமானம் வைத்து விட்டு, அவர்கள் சொல்வதைச் செய்கின்றனர்.

அவனைச் சிலுவையில் அறையும்என்று கூவிய கும்பலை நினைத்துப் பாருங்கள் (மாற்கு 15:11-14).

இப்போது அவர்கள் செய்யும் இந்த ஈனச் செயல்களின் எதிர்கால விளைவுகளைப் பற்றியும் இவர்கள் அப்போது யோசிப்பதில்லை.

தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள மக்களாட்சியின் அடிப்படைகளையே குழி தோண்டிப் புதைக்கத் துணிந்த ஓர் அதிபர், கடைசி முயற்சியாக தன் பக்தர்களை அழைக்கிறார். உடனே கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டுகேப்பிட்டால்எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை அவர்கள் தாக்குகின்றனர். இது நடந்தது 2021, ஜனவரி 6 அன்று. இவர்களில் சிலர் வழக்கைச் சந்திக்க நீதிமன்றத்தில் நின்றபோது இதைத்தான் சொன்னார்கள்: “விளைவுகளைப் பற்றி நான் அன்று யோசிக்கவில்லை.”

கும்பலில் சேர்ந்துகொள்வது ஓர் அரிய வாய்ப்பை இவர்களுக்கு வாக்களிக்கிறது. ‘மற்ற நாள்களில் ஒரு சக மனிதனை அடித்துத் துன்புறுத்தினால், ஓர் அப்பாவிப் பெண்ணை வல்லுறவு செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், இப்போது கும்பலில் ஒருவனாக நீ கரைந்துவிடலாம். உன் பெயரும், முகமும் தெரியாதவாறு ஒளிந்து கொள்ளலாம்என்பதுதான் கும்பல் இவர்களுக்குத் தரும் வாக்குறுதி.

ஓர் அப்பாவிப் பெண்ணைத் துன்புறுத்த நினைக்கும் கயமையும், அதை ஒளிந்து, மறைந்து செய்யலாம் என்ற கோழைத்தனமும் சேர்ந்துதான் இவர்களை இந்தக் கும்பல்களில் சேர்க்கின்றன. பிறர் துன்புறுவதை இரசித்துப் பார்த்து அதில் இன்பம் காணும்சாடிஸம்’ (sadism) என்ற மன விகாரமும் சிலருக்கு இருக்கலாம். மொட்டைக் கடிதங்கள் எழுதும் வீரர்களும் இந்த இனத்தைச் சார்ந்தவர்கள்தான்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் அப்பாவியைத்தான் ஒரு கும்பல் துன்புறுத்த முடிந்தது. இன்று உலகெங்கும் உள்ள இந்தக் கோழைக் கும்பல்கள் அனைத்தும் சேர்ந்து ஒரே அப்பாவியைத் துன்புறுத்துவது சாத்தியம். ஒரே நபரைப் பழிசுமத்தி, அவமானப்படுத்தி பல நாடுகளில் உள்ள கும்பல்கள் அக்களிப்பதை, குதூகலித்துக் கொக்கரிப்பதை இன்று பார்க்கலாம்.

மோனிகா லெவின்ஸ்கி என்ற அமெரிக்கப் பெண்ணை நினைவிருக்கிறதா? வெள்ளை மாளிகையில் பணியாற்றிய இந்த இளம்பெண் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மீதிருந்த காதலால், தான் செய்த காரியங்களை நெருங்கிய சினேகிதி என்று நம்பிய ஒரு பெண்ணிடம் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். மோனிகாவுக்குத் தெரியாமல் அந்த வஞ்சகி, அவரது தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து, அந்த ஒலிநாடாக்களை விற்க, நாடு மட்டுமல்ல, உலகே இந்தப் பேதைப் பெண்ணைப் பரிகசித்து இகழ்ந்தது.

இப்படியொரு வேதனையான கூத்தைச் சாத்தியமாக்கியுள்ளது என்னவென்று நமக்கு நன்கு தெரியும். இணையமும், வாட்ஸாப், ‘எக்ஸ்என்று இப்போது அழைக்கப்படும் முன்னாள் டுவிட்டர், இன்ஸ்டாக்ராம், ஸ்நாப்சேட் போன்ற சமூக ஊடகங்களும், இத்தகைய ஈனக் கும்பல்களை உலகெங்கும் உருவாக்கியுள்ளன.

தங்கள் தலைவர் சொல்லும் கவர்ச்சியான பொய்யை ஒருவர் பொய் என்று சொன்னால், தங்கள் தலைவரைக் குற்றம் சாட்டினால், இணையத்தில் உடனே அவர்மீது பாய்ந்து, ‘உன்னைக் கொல்வோம், உன் மகளை வல்லுறவு செய்வோம்என்றெல்லாம் அச்சுறுத்தும் கும்பல்கள் இன்று எங்கும் உள்ளன. இவர்கள் இணையத்தில் செய்யும் இந்த வன்முறையைசைபர்புல்லியிங்’ (cyber bullying) என்று அழைக்கின்றனர்.

அந்தரங்கம் என்பது ஒவ்வொருவருக்கும் கடவுள் தந்த கொடை! நமது உடல், நமது உள்ளம் சார்ந்த, நமக்கே உரிய பவித்திரமான இடம் இது. நாமே விரும்பி இந்தத் தனி இடத்திற்கு அழைக்கும் நபர்களைத் தவிர, வேறு யாருக்கும் இந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைய உரிமை இல்லை. இப்படி நுழைவோரைச் சமயம் கண்டிக்க வேண்டும்; சட்டம் தண்டிக்க வேண்டும்.

ஆனால், இந்த அற ஒழுங்கினைப் புறந்தள்ளி, ஒருவரின் அனுமதியின்றி அவரது அந்தரங்கத்தில் நுழைந்து அட்டகாசம் செய்யும் வன்முறையாளர்கள் இன்று எந்தத் தயக்கமும் இன்றி இதைச் செய்கிறார்கள்.

இளவரசி டயானாவையும், அவரது நண்பரையும் அவர்களது அனுமதியின்றி புகைப்படம் எடுக்க கார்களிலும், பைக்குகளிலும் துரத்திய தொந்தரவாளர்களும் அந்த அப்பாவி இளவரசியின் சாவுக்கு ஒரு முக்கிய காரணம்.

நாகரிகமற்ற இந்தச் செயலை ஏன் இத்தனை பேர் செய்கிறார்கள்? இப்படி அறத்தை மீறி, அந்தரங்கத்தை மீறி எடுக்கப்படும் படங்களைப் பெரும் விலை கொடுத்து வாங்க பல ஊடக நிறுவனங்கள் தயாராக உள்ளன.

எனவே, இன்றைய சூழலில் இந்தக் கும்பல்காரர்கள் பல வடிவங்களில் வருகின்றனர். சிநேகிதி என்பதால் தன்னிடம் பகிர்ந்ததை நட்பிற்குத் துரோகம் செய்து, அவருக்குத் தெரியாமல் பதிவு செய்யும் வஞ்சகர்கள், காசுக்காக இவற்றை விற்கும் வியாபாரிகள், அவற்றை வாங்கி வெளியிடத் தயாராய் இருக்கும் வெட்கமற்ற ஊடகங்கள்... இவர்கள் அனைவரையும் கடவுளின் கோபமும், பலியான அப்பாவிகளின் சாபமும் துரத்திக் கொண்டே உள்ளன. இவையே மன நிம்மதியையும், வாழ்க்கை வளத்தையும் அண்ட விடாமல் துரத்தி விடுகின்றன.

மனநலத்தையும், வாழ்க்கை வளத்தையும் தக்க வைத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

சூழ்நிலை என்னவாக இருந்தாலும், யார் அழைத்தாலும் பிறரைத் துன்புறுத்துகிற, பிறரை அவமானப்படுத்துகிற கும்பலில் சேர பிடிவாதமாய் நாம் மறுத்து விட்டால், பல பாவங்களில் இருந்தும், அவற்றின் விளைவுகளில் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்வோம். முடிந்தபோது கும்பலில் சிக்கிக் கொண்ட அப்பாவிகளைப் பாதுகாக்க முயற்சி செய்யலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த இந்து-முஸ்லிம் கலவரங்களின் போது ஓர் இந்துத் தீவிரவாதக் கும்பலில் ஓர் அப்பாவி முஸ்லிம் சிக்கிக் கொண்டதைப் பார்த்ததும், ஓடிப்போய் அத்தனை பேரையும் விலக்கி, துரத்தி அந்த இஸ்லாமியச் சகோதரரைப் பாதுகாப்பாக அழைத்துக் சென்றவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

அங்கிருப்போரை வெறும் கும்பலாகப் பார்க்காமல், ஒரு மந்தையின் ஆடுகளாகப் பார்க்காமல் தனி மனிதர்களாகப் பார்த்து, தங்களைப் பற்றிச் சிந்திக்க அவர்களைத் தூண்டலாம். இதைத்தானே இயேசு செய்தார்? “உங்களுள் பாவம் இல்லாதவர்...” (யோவான் 8:7). தங்களையும், தங்களின் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதும் கும்பல் கலைந்து விடும்.

கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் அப்பாவிக்கு ஆறுதலாக, ஆதரவாக இருக்கலாம். கும்பல்காரர்களின் கடுஞ்சொற்களுக்கு மாற்றாக இதமாக, இனிதாகப் பேசி அவர்களுக்குத் தெம்பூட்டலாம். இதைத்தானே இயேசு செய்தார்! (யோவான் 8:10)

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)

Comment