No icon

இவர்களால் முடிந்ததென்றால்! - 22

நாம் மனிதர்களா?

வ்வொரு நாளின் விடியலிலும் நாம் கண் விழிக்கும்போது, அன்றைய நாளில் என்னென்ன நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளப் போகின்றோம் என்பது யாருக்கும் தெரியாது. திட்டமிட்ட நிகழ்வாக இருந்தாலும்கூட, நாம் திட்டமிட்டபடி நிகழும் என்ற நிலை யாருக்கும் இல்லை. நவீன தீர்க்கதரிசிகளுக்கும், முன்கணித்துச் சொல்கிறோம் என்று ராசிபலன் பார்ப்போருக்கும்கூட இது பொருந்தும்.

நடக்கப் போகும் நிகழ்வுகள் அனைத்தும் மகிழ்ச்சியானவைகளாக இருக்குமா? இருக்காது! அனைத்தும் நினைவில் நிற்கக் கூடியவையா? இல்லை! அனைத்தும் நமக்குப் பயன்படக் கூடியவையா? இல்லை! கண்டிப்பாக இல்லை!! நடப்பவை அனைத்தையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லாவற்றையும் பொன்னெழுத்துகளால் பொறித்து வைக்க முடியுமா? முடியாது!

ஆனால், நினைவில் நிறுத்தக்கூடிய, பிறரோடு பகிரக்கூடிய, அனைவருக்கும் பயன்படக்கூடிய, ஆச்சரியப்படக்கூடிய சில நிகழ்வுகள் எப்போதாவது நடப்பதுண்டு. அவை பல நுட்பமான வாழ்வியல் விழுமியங்களைப் பார்ப்போருக்கு மட்டுமல்ல; ஊடகங்கள் மூலமாகத் தெரிந்து கொள்வோருக்கும்கூட கற்பிப்பது உண்டு.

பிறரது பொருள்களையும், உடைமைகளையும் திருடுவது சிலருக்குக் கைவந்த கலை. பிறரின் பெயருக்கும், புகழுக்கும், கற்புக்கும் தீங்கு விளைவிப்பது சிலருக்குப் பொழுதுபோக்கு. வேகமாக வாகனங்களை ஓட்டி, விபத்துகளை நிகழ வைப்பது சிலருக்கு வீர விளையாட்டு. எந்த ஒரு செயலுக்கும் பல காரணங்களை அடுக்குவது மனித இயல்பு.

விபரீதங்கள் உருவாகும்போது, விபத்துகள் நடக்கும்போது, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்போது... இவை நடக்க யாரோ ஒருவர் அல்லது சிலர் காரணமாக இருப்பர். ‘நான் தான் இதைச் செய்தேன்; என்னால்தான் இந்த விபரீதம் நடந்ததுஎன்று பொறுப்பேற்கக் கூடிய மனம் இந்தப் பரந்த உலகில் எத்தனை பேரிடம் இருக்கின்றது? அடி, உதை, போலீஸ் காவல் என்று தண்டிக்கப்பட்ட பிறகே வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார்கள். எதிர்மறை நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் இடங்களில் மிக மிகக் குறைந்த அளவு மனிதாபிமானம் கூட மனிதர்களாகிய நம்மிடம் இல்லையே! நாம் உண்மையாகவே மனிதர்களா?

தான் செய்த கொலையை, தவறை, பாவத்தை மறைத்து, பிறர்மீது புரட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் கும்பல் இங்கு உண்டு. கொரோனாவைப் பார்த்தும் மனம் இரங்காத இரக்கமற்ற ஜீவன்களும் மனிதர்களே! மனிதன் தன்னலவாதி என்பதும், அவனே தன்னலத்தின் அளவு என்பதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஆறறிவு படைத்த மனிதர்கள் கற்றுத்தர வேண்டிய பல நுட்பமான பாடங்களைப் பறவைகளும், விலங்குகளும் நமக்குக் கற்றுத் தருகின்றன. மனிதநேயம், மனிதர்களிடம் இருக்க வேண்டிய மகத்தான பண்பு. அது எப்படிப்பட்டது என்பதைப்  பல வேளைகளில் வாய் பேசாத விலங்குகள் நமக்கு வாழ்ந்து காட்டுகின்றன.

சமீப காலத்தில் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் ஐந்தறிவு படைத்த ஒரு நாய் செய்த செயல் மிக அதிகமாகப் பகிரப்பட்ட ஒரு செய்தி என்றால் அது மிகையாகாது.

கர்நாடக மாநிலம் தாவண்கெரே மாவட்டத்தில் திப்பேஷ் என்ற 21 வயது வாலிபன் இருசக்கர வாகனத்தில் தனது சகோதரியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு, வீடு திரும்பிய போது, ஒரு நாய் அவனது வாகனத்தின் குறுக்கே வந்துள்ளது. நாய்மீது மோதாமல் இருக்க. திபேஷ் வாகனத்தைத் திருப்பியுள்ளான். அவனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் உருண்டது; சம்பவ இடத்திலேயே அந்த வாலிபன் இறந்து விட்டான்.

இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதுதானே என்று நாம் எண்ணலாம். ஆனால், அந்தக் கோர விபத்துக்குக் காரணமான நாய் செய்த செயலை யாராக இருந்தாலும் சுலபமாக மறக்க மாட்டார்கள். ஏனெனில், தன்னால் மோட்டார் சைக்கிள் விபத்தில் திப்பேஷ் பலியானதை உணர்ந்த அந்த நாய்அவனது வீட்டைக் கண்டறிந்து நேரில் அங்கு வந்து, வீட்டு உறவினர்கள் போல வீட்டுக்குள் நுழைந்து சுற்றித் திரிந்துள்ளது.

பின்னர் அந்த நாய் திப்பேஷின் தாயின் அருகே சென்று அவர்மேல் தனது முன்னங்கால்களைத் தூக்கிப்போட்டு, அவரது மடியில் சோகத்துடன் படுத்துக் கொண்டது.

இக்காட்சிஉங்கள் மகனின் உயரிழப்புக்குக் காரணமான என்னை மன்னியுங்கள்; இந்தத் துக்கத்தில் நானும் பங்கேற்க வந்திருக்கிறேன்என்று அந்த நாய் கூறுவது போல இருந்ததாம்!

அந்தச் சோகத்திலும் நாயின் செயலால் நெகிழ்ந்த தாய், அந்த நாயின் தலையைத் தடவிக் கொடுத்தாராம். இந்த நிகழ்வை ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்ததால் இது அனைவருக்கும் தெரிய வந்தது. இதற்குப் பெயர் என்ன? இதை ஒரு மனிதன் செய்தால் அது மனிதாபிமானம்!

கடவுள் எனக்கு அதைத் தரவில்லை; இதைத் தரவில்லைஎன்று புலம்புவோருக்கு ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். எல்லாருடைய இதயங்களும் ஒரே அளவு (அவரவர் கையளவு). ஆனால், அவர்களின் கருணை, அன்பு, மனிதநேயம் ஒரே அளவில் இருக்கின்றனவா?

மனிதர்களாகப் பிறந்திருக்கின்றோம். இதயத்தையும் கொண்டுள்ளோம். பிறருக்கு உதவுகின்றோமோ? இல்லையே! குறைந்த பட்சம் பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழலாமே! தேவையில்லாத, உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைப் பரப்பாமல் வாழலாமே! பிறரை அவமானப்படுத்தியிருந்தால், வதந்திகளைப் பரப்பியிருந்தால், பொய்ச்சாட்சி சொல்லியிருந்தால் அவற்றைச் சரிசெய்ய முயல்வோம். நம் செயலுக்குப் பிறர் தண்டிக்கப்படுவதைப் பார்ப்பதைவிட, உண்மையை ஒப்புக்கொண்டு, அச்சூழ்நிலையை ஓரளவாவது மாற்றியமைக்க நம்மால் முடியும்.

ஐந்தறிவு பிராணியால் முடிந்ததென்றால், மனிதர்களான நம்மாலும் முடியும். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பது தவறு அல்ல; அது மனிதநேயச் செயலே!

பெற்றோர் என்ன நினைப்பார்களோ

என்ற பதற்றம் வேண்டாம்;

துணைவர் என்ன எண்ணுவாரோ

என்ற தயக்கம் வேண்டாம்;

உடன்பிறந்தோர் துச்சமாக நடத்துவார்களோ  என்ற அச்சம் வேண்டாம்;

அயலார் கேவலமாகப் பார்ப்பார்களே

என்ற தாழ்வெண்ணம் வேண்டாம்!

 (தொடரும்)

Comment