நம்மைப் பாதுகாக்கும் புனித யோசேப்பு
‘அப்பா’ என்ற வார்த்தைக்குள் பன்முக ஆளுமைப் பண்புகள் புதைந்து கிடக்கின்றன. ‘அப்பா’ என்றால் துணிச்சல், தூண், நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது. அப்பாவுக்குத் தெரியாத உலகத்தைப் பிள்ளைகள் பார்க்க வேண்டுமென்று பாடுபடுபவர். தந்தை என்ற வார்த்தைக்குள் இரக்கம், கனிவு, கரிசனை, கருணை, அன்பு, பாசம், நட்பு அனைத்தும் விரவி, பரவி, பற்றிப் படர்ந்து கிடக்கிறது. எனவேதான் “ஒரு தந்தையின் இதயத்தோடு இயேசுவைப் புனித சூசையப்பர் அன்பு செய்தார்” என்று திருத்தந்தை ‘தந்தையின் இதயத்தோடு’ (Patric Corde) என்கிற திருத்தூது மடலில் குறிப்பிடுகிறார்.
மனித குலத்திற்கு மாதிரித் தந்தையாகத் திகழ உதவிய கன்னி மரியாவின் துணைவரின் குறிப்பிடத்தக்கப் பண்புகளைத் திருத்தந்தை பட்டியலிடுகிறார். அருமையான தந்தை, அன்பும் கனிவும் உள்ள தந்தை, பணிவுள்ள தந்தை, ஏற்றுக்கொள்ளும் தந்தை, படைப்பாற்றல் மிக்க துணிவுள்ள தந்தை, உழைப்பாளர் தந்தை, நிழல் மறைவிலுள்ள தந்தை... இப்படிப்பட்ட நல்ல பண்புகளைக் கொண்ட தந்தையர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். இத்தகைய நல்ல பண்புகளே புனித யோசேப்பை முன்மாதிரியாகவும், முன்னுதாரணமாகவும் முன்னிறுத்துகிறது என்று திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
தவக்காலத்தில் சிறப்பிக்கப்படும் இருபெரும் விழாக்களில் ஒன்றாகப் புனித யோசேப்பின் விழா அமைகிறது. திருத்தந்தை ஆறாம் பவுல் சீரமைத்த நாள்காட்டியின்படி, மரியாவின் கணவரான புனித யோசேப்புத் திருநாள் மார்ச் 19-ஆம் தேதி பெரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. புனித யோசேப்பு பொதுமக்களால் அதிகம் கவனிக்கப்படாத, அதே நேரத்தில் காலமறிந்து செயல்படும், மறைவான வாழ்வு வாழ்ந்த, கனிவும், இரக்கமும் உள்ள தந்தை. ஒப்பற்ற பாதுகாவலராகவும், பாதுகாப்பவராகவும் விளங்கும் உண்மையும், நேர்மையும் நீதியும் உள்ள தந்தை என்று சொன்னால் அது மிகையாகாது.
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1870-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி புனித யோசேப்பு அவர்களை, உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலராக அறிவித்தார். புனித யோசேப்பு, ‘உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலர்’ என்று அறிவிக்கப்பட்ட 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘ஒரு தந்தையின் இதயத்தோடு’ (Patris Corde) என்ற திருத்தூது மடலைத் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார். புனித யோசேப்பு உலகளாவியத் திரு அவையின் பாதுகாவலராக விளங்குகிறார் என்பதைத் திரு அவை தெளிவுற விளக்குகிறது.
புனித யோசேப்பு இன்று கற்புக்குப் பாதுகாவலராகவும், திருமணமானவர்களின் பாதுகாவலராகவும், குடும்பங்களின் பாதுகாவலராகவும், நல்ல மரணமடைவதற்கான பாதுகாவலராகவும், தொழிலாளர்களின் பாதுகாவலராகவும், நிறுவனங்களின் பாதுகாவலராகவும் விளங்குகிறார். இவற்றையெல்லாம் தாண்டி புனித யோசேப்பு உலகின் பாதுகாவலராகவும், உயிர்களின் பாதுகாவலராகவும், இயற்கையின் பாதுகாவலராகவும், இறை மைந்தர் இயேசுவின் பாதுகாவலராகவும் விளங்குகிறார்.
புனித யோசேப்பு கடுமையாக உழைத்து, தனது குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்தார். கடவுள் தன்னிடம் ஒப்படைத்த மனைவி மரியாவையும், மகன் இயேசுவையும் பாதுகாக்கும் பாசமிகு கணவராகவும், தந்தையாகவும் செயல்பட்டார். ‘மரியாவின் கன்னிமையை வன்முறையால் பறிக்காத, வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாக்கின்ற நேர்மையாளர் யோசேப்புக்கு அவர் மனைவியாக்கப் பெற்றார்’ என்று மரியாவின் வாழ்வில் யோசேப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் ஹிப்போ ஆயரான புனித அகுஸ்தின். அப்படியென்றால், எந்த அளவுக்குத் தனது மனைவியை அவர் கண்ணுக்குள் கண்ணாக வைத்து, நெஞ்சுக்குள் நெருக்கமாக வைத்து நேசித்தார், நேசித்திருக்கிறார் என்பதைப் புரிய முடிகிறது.
ஒரு நாட்டின் பஞ்சத்தைச் சமாளிக்கப் பழைய ஏற்பாட்டு யோசேப்பின் பொறுப்பில் கோதுமைக் களஞ்சியம் ஒப்படைக்கப்பட்டது. உலக மீட்புக்காக இறங்கி வந்த விண்ணக அப்பமாகிய இயேசு, புதிய ஏற்பாட்டு யோசேப்பின் பாதுகாவலில் மிகவும் பாசத்தோடும், பரிவோடும் ஒப்படைக்கப்பட்டார் என்று புனித பெர்நார்து எடுத்துரைக்கிறார். எல்லாவற்றையும் அமைதியாக இருந்து உற்றுக் கவனித்து, கனிவோடும், கரிசனையோடும் பாதுகாப்பாளராகச் செயல்பட்டவர் புனித யோசேப்பு.
நமது அனைத்துத் தேவைகளிலும் கடவுளிடம் உதவி பெற்றுத் தரும் சுதந்திரத்தைப் புனித யோசேப்பு பெற்றிருக்கிறார். அவரது பாதுகாவலை மன்றாடுபவர்கள் எவரும் அதை அடையாமல் இருந்ததில்லை என்று புனித பெர்நார்து அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். எனவேதான் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றிய திரு அவைத் தலைவர்கள் அவரை உலகத்திற்கும், உயிர்களுக்கும் பாதுகாவலர் என்பதை உரக்கச் சொல்லிச் சென்றார்கள்.
“புனித யோசேப்பு, மண்ணகத்தில் வாழும் மனிதர்களுக்கும், உயிர்களுக்கும் மட்டுமல்ல; மாறாக, விண்ணோருக்கும் பாதுகாவலராக விளங்குகிறார்” என்று புனித லெயோனார்து சுட்டிக்காட்டுகிறார். வானதூதர்கள் மற்றும் விண்ணோருக்கு அரசியாக இருக்கின்ற இறையன்னை மரியாவைத் திருமணம் செய்த புனித யோசேப்பும் விண்ணோர் அனைவருக்கும் அரசராக இருக்கிறார். புனித யோசேப்பின் பாதுகாவலும், பரிந்துரையும் மிகவும் போற்றத்தக்கது என்பதை ‘புனித யோசேப்பே, உமது பாதுகாவல் மிகவும் மேலானது, வல்லமைமிக்கது’ என்று தொடங்கும் பழமையான பரிந்துரைச் செபம் வழியாக அறிய முடிகிறது.
1989-ஆம் ஆண்டு ‘மீட்பரின் காப்பாளர்’ என்ற திருத்தூது உரையை வெளியிட்ட திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், திரு அவையை ஆபத்துகளிலிருந்து காப்பதற்கு மட்டுமின்றி, நற்செய்தி அறிவிப்புக்கு மேற்கொள்ளப்படும் அச்சம் நிறைந்த முயற்சிகளிலும் புனித யோசேப்பின் பாதுகாவலை மன்றாட வேண்டுமென்று கூறினார்.
இன்று சிறுபான்மையினர் என்ற பார்வையிலும், போர்வையிலும் ஆயிரமாயிரம் அச்சுறுத்தல்களும், சவால்களும் நம்முன் நிற்கின்றன. இச்சூழலில் நாம் நமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குப் புனித யோசேப்பின் பாதுகாவலை இடையறாது நம்பினோம் என்றால், அவர் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி, நம்மைத் துன்பத் துயரங்களிலிருந்து மீட்பார் என்பது திண்ணம்.
இன்றைய காலக்கட்டத்தில் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்பது காலத்தின் கட்டாயமாகவும், கதறலாகவும் மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, வெப்ப நிலை மாற்றம், பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்ற மிகவும் மோசமான நிலையை இத்தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கனிம வளங்கள் கண்மூடித்தனமாகக் கடத்தப்படுகின்றன. விளைநிலங்களும், மலை வளங்களும் அழிக்கப்பட்டு, பயனற்ற தொழில் நிறுவனங்கள் உயர்ந்து, வளர்ந்து நிற்கின்றன. இந்த மண்ணுலகத்தில் மனிதர்களும், உயிர்களும், பயிர்களும் வாழ முடியாத அளவுக்குச் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
உலகத் திரு அவைக்குப் பாதுகாவலராக விளங்கும் புனித யோசேப்பு, எப்போதும் லீலி மலரைக் கையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார் என்றால், அவர் படைப்பின்மீது அதிக அக்கறை வைத்திருக்கிறார் என்பது உண்மை. அவர் சுற்றுச்சூழலின் பாதுகாவலராகவும் விளங்குகிறார். எனவே, கனவின் மன்னன் புனித யோசேப்பின் பரிந்துரையையும், பாதுகாப்பையும் எந்நாளும் வேண்டுவோம். புது வாழ்வு வாழ்வோம்!
Comment