No icon

இவர்களால் முடிந்தது என்றால்...!

அகம்பாவம் என்னும் குதிரை

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனையோ விதமான இயல்புகள் உள்ளன. இந்த இயல்புகளில் நேர்மறை இயல்புகளை விட, எதிர்மறைத் தன்மை கொண்ட இயல்புகள் பெரும்பான்மையோரிடம் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் அமைந்திருக்கும். இந்த எதிர்மறைப் பண்புகளுக்குத் தலைவன்அகம் பாவம்என்னும் குதிரை. இந்த அகம்பாவம் அல்லதுதான்என்ற கர்வம் தலையில் ஏறி அமர்ந்துவிட்டால், தலைக்கனம் தானாக ஒருவருக்கு வந்துவிடும்.

கடவுள் இருக்கின்றார்என்ற நம்பிக்கையோடு செல்லும் வழிபாட்டுத் தலங்களில் கூட உயர்ந்த ஆசனங்கள் கிடைக்குமா? என்று தேடுவோரும், இருக்கும் குறைவான இருக்கைகளை, உண்டியலில் காணிக்கை கூட போடாமல் இருக்கைகளை ரிசர்வ் செய்து வைப்போரும் உள்ளனர். இப்படிப்பட்ட மனநிலையோடு பலரும் கோவிலுக்கு வருவதால், கடவுளிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ளாமலேயே திரும்பிச் செல்கின்றார்கள்.

ஆணவத்தை விடவேண்டும் என்று ஒருவன் வழிபடும் இடமான ஆலயத்துக்குச் சென்றானாம். தன்னிடமுள்ள அகம்பாவம் மாற வேண்டும் என உருகி உருகிச் செபித்து, உருண்டு புரண்டு, நேர்த்திக்கடன் அனைத்தும் முடித்து வெளியே வரும் போது ஒன்று நினைத்தானாம்: ‘என்னை விட சிறப்பாக வழிபடுபவன் யாராவது இருக்க முடியுமா?’ என்று. எத்தனை சந்நிதானங்களில் உருண்டு புரண்டாலும், அகம்பாவத்தோடு கோவில்களுக்குச் செல்வோர் எதையும் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் எழுப்பும் செபங்களைக் கடவுள் கேட்பதேயில்லை என்று சிலர் புலம்புவதுண்டு. ஏன், நாம் கூட அவர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லவா?

அகம்பாவம் என்னிடம் இல்லை’ என்று சிலர் நினைப்பது மட்டுமல்ல, பேசவும் செய்வார்கள். ஆனால், உருவாகும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அது அவர்களது கட்டுப்பாட்டையும் கடந்து, ‘நான் இருக்கின்றேன்என்று காட்டிவிடும். அத்தனை வில்லத்தனம் வாய்ந்தது இந்த அகம்பாவம்!

அரசன் ஒருவனுக்கு ஓர் ஆசை இருந்தது. கடவுள் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும் என்பதே அந்த ஆசை. இதை எப்படி அடைவது? என்று சிந்தித்த அரசன், உதவி வேண்டி ஒரு முனிவரை நாடிச் சென்றான். தனது நீண்ட நாள் ஆசையை மன்னன் முனிவரிடம் சொல்ல, அவர் அவனிடம்நான் எதைச் சொன்னாலும் செய்வாயா?” என்று கேட்க, அவன்நிச்சயமாகஎன்று பதில் சொன்னான். முனிவர் அவனிடம்ஏழு நாள்கள் உன் சொந்த நாட்டில் நீ பிச்சை எடுக்க வேண்டும்என்றாராம். அதிர்ச்சியடைந்த மன்னன்வெட்கமாக இராதா? மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்றெல்லாம் பலவாறு எண்ணியபடி அங்கிருந்து புறப்பட்டான்.

மீண்டும் ஒரு வாரம் கழித்து முனிவரிடம் வந்தான் அந்த மன்னன். முனிவர் அவனிடம்பிச்சை எடுத்தாயா?” என்று வினவ, “ஆம்என்றான் மன்னன். அப்போது முனிவர் அந்த அரசனிடம், “அப்படியானால் கடவுள் உன்னோடு வாழப் போகிறார்என்று சொல்ல, அரசன்இல்லை, அவர் என்னோடு வந்து விட்டார்; ஏழு நாள்களில்நான் அரசன்என்ற ஆணவம் என்னில் அடங்கி விட்டது. அந்த ஏழு நாள்களில் தாழ்ச்சி என்னிடம் வந்து விட்டது. கடவுள் இப்போது நிலையாக என்னோடு இருக்கின்றார்என்றானாம்.

அகம்பாவம்நாம் நினைப்பதைப் போன்று செல்வந்தர்களுக்கும், பதவிகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமல்ல, சாதாரண அடித்தட்டு மக்கள் எனச் சமூகம் அடையாளப்படுத்தும் அனைத்து மக்களிடமும் வெளிப்படும். ஒவ்வொரு சமூக மட்டத்திலும், ஒவ்வோர் உறவு வட்டத்திலும், ஒவ்வொரு பணித்தளத்திலும், ஏன் ஒவ்வொரு வீட்டிலும் இதை நாம் உணர முடியும். இந்த இயல்பு மக்களைக் கொண்ட பணித்தளங்களும், குடும்பங்களும் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றையாவது நம்மால் அடையாளம் காட்ட முடியுமா?

தன்னைப் போல் வாழ்ந்த ஒருவர், தன்னோடு சரிசமமாகப் பேசிப் பழகிய ஒருவர் திடீரென முன்பு போல் பேசுவதற்கும், பழகுவதற்கும், பதில் சொல்வதற்கும் தயங்குகின்றார்கள் என்றால், அவருக்கு ஏதோ புதிதாகப் பணம் கிடைத்திருக்க வேண்டும் அல்லது பதவி உயர்வு வந்திருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பயன்படுத்தி விட்டு நாளை குப்பையில் போடக்கூடிய ஒரு சாதாரண பொருள் கூட மனிதனின் இயல்பை மாற் றும் சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்டவற்றால் உருவாகும் தலைக்கனம்தான், அவனை அல்லது அவளை இயல்பாகப் பேச, பழக விடாமல் தடுக்கின்றது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, ‘பணமும், பதவியும் வந்த பின், மனிதனுக்கு வரும் வியாதி பார்வை குறைபாடுஎன்பர். இதையும் நாம் ஜீரணித்தே ஆக வேண்டும்.

தலை வணங்காமல் இருப்பது தலைமைப் பண்பு அல்ல; இது தனிப்பட்ட மனிதனின் தத்துவ இயல்பு. இந்தப் பண்பு உடையவர்கள் சமுதாயத்துக்கோ, நிறுவனத்துக்கோ, குடும்பத்துக்கோ நன்மையான ஈவுகளைக் கொடுக்க மாட்டார்கள். கணவனின் வருமானத்தை விட, மனைவியின் வருமானம் உயரும்போது மனைவிக்குத் தலைக்கனம் வந்து விட்டால், அந்தக் குடும்பத்துத் தலைவனும், குழந்தைகளும், அங்கே வாழ்பவர்களும் அந்தோ பரிதாபத்துக்குரியவர்கள். தலைக்கனம் உடையவர் கள் அதிகாரிகளாக உயரும்போது, கீழே பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும் துர்ப்பாக்கியர்களே! இப்படி நாம் எழுதத் தொடங்கினால் மாதத் துவக்கத்தில் குடும்பங்களில் மளிகைக்கடைப் பொருள்கள் வாங்க நாம் போடும் பட்டியலை விட நீண்டதாகவே இருக்கும்.      எவ்வளவு வலுவான இரும்புத் தூண் ஆனாலும், உள்ளே உருவாகும் துரு அதனை சாய்த்துவிடும்; எவ்வளவு வலிமையான மனிதன் ஆனாலும், அவனுள் வந்துவிடும் அகம்பாவம் அவனை அழித்து விடும்.

தலைவர் காமராஜரைப்பெருந்தலைவர்என்பர். காரணம், பல அரசியல் தலைவர்களை உருவாக்கியவர் என்பதால் மட்டுமல்ல, தலைக்கனம் சற்றும் இல்லாத தலைவராக அவர் வாழ்ந்ததாலும்தான். இதனால்தான் புலவர் ஒருவர் அவர் இறந்த பின்பு,

வாழ்ந்த போது இல்லை உனக்குத் தலைக்கனம்;

மாண்டபோது இல்லை உனக்கு மடிக்கனம்

என்று புகழ்ந்து பாடினார். உயிரோடு இருக்கும் போதும், பதவிகளில் நிலைக்கும் போதும் முகத்துக்கு நேராகப் பலர் புகழ்வர். இந்தப் புகழ்ச்சி நிலையானதல்ல! இறந்த பின்பும் புகழ் நிலைக்க வேண்டுமா? இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வதைப் போலஒருவர் உயர்வடைய விரும்பினால், அடக்கம் உடையவனாக இருக்க வேண்டும்.” சுருங்கச் சொன்னால், இறைமகன் இயேசு செய்து காட்டியசீடர்களின் பாதங்களைக் கழுவும்நிலைக்கு மனம் பக்குவப்பட வேண்டும்பெரிய பணி செய்யும் இடங்களிலும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருப்போரிடமும் கூடவே!

முடியுமா? அந்த அரசனுக்கு முடிந்தது! நமக்கு...? ஆணவம் ஆண்டவன் சந்நிதியில் கூட தன்னை மையப்படுத்தும்! தலைக்கனம் வாழும் குடும்பத்தில் கூட தன்னைத் தனிமைப்படுத்தும்! அகம்பாவம் தனித்தே வாழும்படி தன்னைச் சிறைப்படுத்தும்! கர்வம் தலை வணங்காதபடி தன்னைப் பார்த்துக் கொள்ளும்!’     

(தொடரும்)

Comment