கண்டனையோ... கேட்டனையோ...
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
- Author ஜார்ஜி --
- Thursday, 09 May, 2024
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது, நம் ஊரில் ரேஷன் கார்டு வாங்குவதைவிட எளிது. அதிகபட்சம் ஒரு மணி நேரம். துப்பாக்கிகளைச் சகாய விலைக்கு விற்பனை செய்யும் தனியார் கடைகள் மலிந்த விநோத நாடு அது. வாங்கும் நபருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்; ஒரு சிறிய பின்னணி சோதனையில் தேற வேண்டும்; நாட்டில் குடியிருக்க முறையான அனுமதி இருக்க வேண்டும்; பணம் இருக்க வேண்டும் (அறிவு, நிதானம் முதலியன இருக்க வேண்டும் என்று அவசியமில்லை).
அமெரிக்காவின் பள்ளிக்கூடங்களில், மால்களில், ஆலயங்களில், விளையாட்டு மைதானங்களில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு, துப்பாக்கிகளை அவர்கள் இப்படிக் கையேந்தி பவன் மாடலில் விற்பனை செய்வதும் முக்கியக் காரணம்.
2023-ஆம் ஆண்டு மட்டும் 617 வெகுசன துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. ஏறக்குறைய ஒரு நாளுக்கு இரண்டு வீதம்.
தொடக்கத்தில் இச்சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி சிறிது சிறிதாக விலகி, அதில் உள்ள அபத்தம் பழகிப்போய், இப்போதெல்லாம் அமெரிக்கர்கள் mass shootings செய்திகளை ‘பெப்சி’ குடித்துக்கொண்டே பார்த்துவிட்டுச் சேனல் தாவுகிறார்கள். Wall Street-ஐ அசைக்காத எதுவும் அவர்களை அசைப்பதில்லை.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிலைமை கொஞ்சம் வேறு.
1999, ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி கொலராடோ மாநிலம், லிட்டில்டன் என்ற ஊரில் உள்ள கொலம்பைன் அரசுப் பள்ளிக்கூடத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. நிகழ்த்தியவர்கள் 12-ஆம் வகுப்பு படிக்கும் மீசை முளைக்காத இரண்டு சிறுவர்கள். டைலன் (Dylan) மற்றும் எரிக் (Eric). வயது முறையே 17 & 18.
நடந்தது இதுதான்: அன்று காலை 11.20 மணிக்கு இரு நண்பர்களும் ஆளுக்கொரு பயணப் பையோடு பள்ளியின் உணவகத்திற்குள் நுழைந்தார்கள். பைகளில் இன்டர்நெட் பார்த்து அவர்களே தயார் செய்திருந்த வெடிகுண்டுகள் இருந்தன. ஹார்டுவேர் கடையில் எளிதில் கிடைக்கும் சாமான்களைக் கொண்டு ஆர்வமும், திறமையும் இருக்கிற எவரும் செய்துவிடக் கூடிய propane வகை குண்டுகள் அவை. பைகளை யாருக்கும் தெரியாமல், உணவகத்தில் ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு இருவரும் வெளியேறினர். அது மதிய உணவு நேரம். நிறைய மாணவர்கள் அங்கு வருவார்கள். அந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து, அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். ஆனால், குண்டுகள் வெடிக்கவில்லை.
சிறிது நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு, இருவரும் துப்பாக்கிகளோடு பள்ளிக் கட்டடத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே வராந்தாவில் நின்று கொண்டும், பேசிக்கொண்டும் இருந்த மாணவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள். முதலில் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன. Prom எனப்படும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இரண்டு நாள்களுக்கு முன் நடந்து முடிந்திருந்தது. நிறையப் பேர் இதைச் சீனியர் மாணவர்கள் செய்யும் குறும்பு விளையாட்டு என்றுதான் தொடக்கத்தில் நினைத்தார்கள். அவர்கள் கையில் இருப்பது ஒருவர் மற்றவர்மீது பெயின்ட் அடித்து விளையாடப் பயன்படுத்தும் பொம்மைத் துப்பாக்கி (paintball guns) என்று எண்ணி, சிலர் அவர்களை நோக்கித் தைரியமாகச் சென்றிருக்கிறார்கள்.
முதலில் அடிபட்டது லான்ஸ் கிர்க்ளின் என்ற பத்தாம் வகுப்பு மாணவன். உடலில் நான்கு முறை சுடப்பட்டுக் கீழே விழுந்து கிடந்தான்.
மாணவர்கள் குறுக்கும், நெடுக்குமாக அலறிக் கொண்டு ஓட, கீழே கிடந்த லான்ஸ், “யாராவது உதவி செய்யுங்கள். Help, please”என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.
அவனுக்கு மேல் டைலன் நின்று கொண்டிருந்தான்.
டைலன், “உதவி வேண்டுமா?”
லான்ஸ், “யெஸ், ப்ளீஸ்!”
டைலன், “நிச்சயமாக, நண்பா!” என்று சொல்லி மீண்டும் துப்பாக்கியால் லான்ஸின் முகத்தில் சுட்டான்.
டைலன், எரிக் இருவரும் அடுத்து, முதல் மாடியிலிருந்த நூலகத்திற்குச் சென்றார்கள். அங்கே 52 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள், இரண்டு நூலக அலுவலர்கள் பதுங்கியிருந்தார்கள். அவர்களில் கறுப்பின மாணவர்களையும், விளையாட்டு வீரர்களையும் தேர்ந்தெடுத்து இருவரும் சுடத் தொடங்கினார்கள். கொலம்பைன் பள்ளியில் விளையாட்டு மாணவர்கள் வெள்ளைக் கலர் தொப்பி அணிவது வழக்கம். பலர் தங்கள் தொப்பிகளைக் கழற்றி மறைக்க முயற்சி செய்தார்கள்.
ஒரு மேசைக்குக் கீழே ஒளிந்திருந்த மூன்று மாணவர்களை டைலன் இழுத்து வெளியே போட்டான். அதில் ஐசேயா ஷோயல்ஸ் என்ற மாணவனும் ஒருவன். 12-ஆம் வகுப்பு படிக்கிறவன். கறுப்பினத்தவன்.
டைலன், “இதோ பார், நான் ஒரு நீக்ரோவைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று எரிக்கிடம் சொன்னான்.
இருவரும் மேலும் அநாகரிகமான வார்த்தைகளைக் கூறி, ஐசேயாவைக் கிண்டல் செய்தார்கள். பிறகு டைலன் ஐசேயாவைச் சுட்டுக் கொன்றான்.
நூலகத்தில் மட்டும் இருவரும் சேர்ந்து 12 பேரைக் கொன்றார்கள். பத்து பேரைக் காயப்படுத்தினார்கள்.
பிறகு கைக்குண்டுகளை எறிந்துகொண்டும், உற்சாகமாக “It's is so awesome” என்று சொல்லிக் கொண்டும் மீண்டும் உணவகத்திற்குச் சென்றார்கள். பள்ளியைப் பலமுறை சுற்றி வந்தார்கள். வகுப்பறைகளில் யாரும் இருக்கின்றார்களா? என்று பார்த்தார்கள். இதற்கிடை யில் போலீஸ் வந்துவிட, அவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே சில சுற்றுகள் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
டைலன், எரிக் இருவரும் பின்வாங்கி மீண்டும் நூலகத்திற்குத் திரும்பியபோது இறந்து கிடந்தவர்கள் நகர முடியாதபடி காயப்பட்டவர்கள் தவிர மற்ற எல்லாரும் தப்பியிருந்தார்கள்.
12.08 மணிக்கு நண்பர்கள் இருவரும் துப்பாக்கியால் தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.
எல்லாமும் ஓர் அரை மணி நேரத்தில் நடந்து முடிந்து விட்டன. டைலன், எரிக், ஓர் ஆசிரியர் உள்பட மொத்தம் 15 பேர் அன்று கொலம்பைன் பள்ளியில் இறந்து போனார்கள். 21 பேர் காயமடைந்தார்கள். முகத்தில் சுடப்பட்ட லான்ஸ் கிர்க்ளின், 25 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பிழைத்துக் கொண்டான்.
2024, ஏப்ரல் 20 அன்று கொலம்பைன் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 25-ஆம் ஆண்டு நினைவையொட்டி அமெரிக்காவின் கத்தோலிக்கச் சேனல் EWTN, இரண்டு நபர்களைப் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. ஒருவர் ஃப்ராங்க் டி ஏஞ்சலிஸ். அப்போது கொலம்பைன் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர். இன்னொருவர் அருள்சகோதரி மேரி ஜியானா. இயற்பெயர் ஜெனிக்கா தார்ன்பி. அப்போது 11-ஆம் வகுப்பு படித்த 16 வயது இளம் பெண். கொலம்பைன் கொலை சம்பவத்தை இவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? இருவர் மனத்திலும் உதித்த சிந்தனைகள், அதன்பின் அவர்கள் எடுத்த முடிவுகள், தேர்வுகள், அமைத்துக் கொண்ட வாழ்க்கை குறித்துச் சுருக்கமாகப் பேசும் இந்த EWTN பேட்டி, அண்மையில் நான் கண்டு, கேட்டுப் பயனுற்ற மிகச் சிறந்த காணொளி என்று உறுதியாகச் சொல்வேன்.
அருள்சகோதரி மேரி ஜியானா அளித்தப் பேட்டியின் சில பகுதிகள் ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்காக இங்கே...
“9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு படித்த இரண்டு வருடங்களில் ஒரு நாள் கூட ஜெனிக்கா நூலகம் போகாமல் இருந்ததிலை. ஒரே ஒரு நாள்தான் அவள் அங்குப் போகாமல் இருந்தாள். அந்த நாள் ஏப்ரல் 20, 1999 அன்று, ஜெனிக்கா ஓவிய வகுப்பில் அமர்ந்திருந்தாள். திடீரென்று எனக்குள் வெளியே செல்ல வேண்டும் என்ற ஓர் உந்துதல். எனக்கு வகுப்பில் அமரப் பிடிக்கவில்லை.
‘நான் வெளியே போகப் போகிறேன். என்னை யாரும் இங்கு உட்கார வைக்க முடியாது’.
தன் தோழியிடம் ‘வா, ஓர் உணவகத்திற்குச் சென்று படிக்கலாம்’ என்று சொல்லி அழைத்தாள். இருவரும் ‘பார்க்கிங்’ பகுதிக்கு வந்து, தார்ன்பியின் புதிய காரில் கிளம்பினார்கள்.
பள்ளி வளாகத்தை விட்டு இன்னும் அவர்கள் வெளியே சென்றிருக்கவில்லை. திடீரென்று ஒரே சத்தம். நான் காரின் ரிவியூ கண்ணாடியில் பார்க்கிறேன். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக் கட்டடத்தை விட்டு அலறிக் கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை தீ பயிற்சியாக (Fire drill) இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், எங்களுக்கு உறுதியாய் தெரியவில்லை.
உணவகத்தில் இருக்கும்போதுதான் ஜெனிக்காவிற்கு எல்லாத் தகவல்களும் கிடைக்கின்றன. குறிப்பாக, கொல்லப்பட்ட 15 பேரில், 12 பேர் நூலகத்தில் இருந்தவர்கள் என்பது. நினைத்துப் பார்க்கும்போது, என்னைத் தாண்டிய ஒன்று அன்று அங்கே நிகழ்ந்துள்ளது எனத் தோன்றுகிறது. ஜெனிக்காவின் உறவினர்களில் ஒருவர், ‘கடவுள் உனக்கு ஏதோ திட்டம் வைத்துள்ளார்’ என்று கூறினார். ஜெனிக்காவிற்குக் குழப்பமாக இருந்தது. ஆனாலும், அதைப் பற்றித் தொடர்ந்து யோசித்தார்.
‘ஏன் அன்று எனக்கு அந்த உந்துதல் ஏற்பட்டது? ஏன் அன்று நான் நூலகத்திற்குச் செல்லவில்லை. கடவுளே, ஏன் என்னை உயிர் தப்ப வைத்தீர்? ஏன்? ஏன்?’
16 வயதில் ஜெனிக்கா எந்த நம்பிக்கையும் அற்றவராக இருந்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குப் பின் ஒரு தோழியின் அழைப்பின் பேரில், ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்குச் சென்றார். அவருக்குக் கத்தோலிக்கம் பிடித்திருந்தது. 18 வயதில் நற்கருணை ஆராதனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 19 வயதில் திரு முழுக்குப் பெற்று, கத்தோலிக்கக் கிறிஸ்தவராக மாறினார்.
கல்லூரி முடித்தபின் ஜெனிக்கா சில காலம் மறைபரப்புப் பணி செய்தார். அப்போதும் ‘ஏன்? ஏன்?’ என்று அவர் மனத்தில் இன்னும் விடை கிடைக்காத நிறைய கேள்விகள் இருந்தன. ஒரு நாள் ஃபாதர் பெனடிக்ட் க்ரோஷல் என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் இந்த வரிகளை ஜெனிக்கா வாசித்தார்: ‘Instead of asking God why something happened, ask him, what would you have me do?’ ‘ஏன் இது நிகழ்ந்தது?’ என்று கடவுளிடம் கேட்பதைவிட, ‘இறைவா, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேள்.
ஜெனிக்கா கேட்கத் துவங்கினார்: ‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?’
பதில் விரைவில் கிடைத்தது. துறவற அழைத்தல்! 2010-ஆம் ஆண்டு ஜெனிக்கா தார்ன்பி, ‘இயேசு கிறிஸ்துவின் சீடர்கள்’ என்ற கன்னியர் சபையில் சேர்ந்தார். ‘மேரி ஜியானா’ என்ற புதிய பெயரை எடுத்துக்கொண்டார். 2018-இல் தன் இறுதி வார்த்தைப்பாட்டைக் கொடுத்து, ஒரு பரிபூரணத் துறவியாக மாறினார். இன்று கத்தோலிக்கம் தரும் நம்பிக்கையின் சாட்சியாக விளங்கும் அருள்சகோதரி மேரி ஜியானா, 16 வயதில் கார்களை நேசித்த, ‘பார்ட்டி’களை விரும்பிய, எந்த மறுவுலக நம்பிக்கையும் அற்ற, நிச்சயமான சாவிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரு நவ உலக யுவதி என்பது ஆச்சரியமே.”
ஆண்டவரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
Comment