No icon

வழிபாட்டுத் தலங்களுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிபெற, ஒரு பொதுவான செயல்பாட்டு வழிமுறைக்கான அரசாணை வெளியீடு

புதிதாகப் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கட்டுவதற்கும், ஏற்கெனவே வழிபாட்டில் இருக்கின்ற பள்ளிவாசல்கள், தேவாலயங்களைச் சீரமைத்துப் புதுப்பிப்பதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் இருக்கின்ற சிரமங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்ல தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளைத் தாங்கள் அறிவீர்கள்.

பல்வேறு மாவட்டங்களில் தடையில்லாச் சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த விண்ணப்பங்களின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால் மதச்சிறுபான்மையினர் படுகின்ற சிரமங்களையும், வேதனைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து, வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு அனுமதிபெற ஒரு பொதுவான செயல்பாட்டு வழிமுறையினை (Standard Operating Procedure) அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை வைத்தோம்.

நமது கோரிக்கையினைக் கவனமாகக் கேட்ட நமது முதலமைச்சர் தாயுள்ளத்தோடு அதனைப் பரிசீலித்து, அதற்கான நடைமுறையினை உருவாக்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரைப் பணித்தார். தலைமைச் செயலர் அவர்களும், உள்துறை, பொதுத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர்களைக் கலந்து, ஒரு பொதுவான நடைமுறை செயல்திட்டத்தினை உருவாக்கியுள்ளார்கள். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியரும் மற்றும் அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளைத் தெரிவித்துள்ளார்கள்.

வரும் காலங்களில் வழிபாட்டுத் தலங்கள் புதிதாகக் கட்டுவதற்கும், ஏற்கெனவே இருக்கும் தலங்களைச் சீரமைத்துப் புதிதாகக் கட்டுவதற்கும் இந்த நடைமுறைகள்தாம் பின்பற்றப்படும்.

வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தமாகத் தடையில்லாச் சான்றிதழ் கேட்டுப் பெறப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள் முப்பது நாள்களுக்குள் விசாரணை செய்து, முடிவுகளைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். முப்பது நாள்களுக்குமேல் அக்கோரிக்கைகளை நிலுவையில் வைத்திருக்க முடியாது. விரைவில் இக்கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களைப் பழுதுபார்க்கவோ, புதுப்பிக்கவோ அல்லது முழுமையாக இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டவோ மாவட்ட ஆட்சியரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் இதற்கென அதிகாரம் பெற்றிருக்கும் அமைப்புகளிடமோ அல்லது உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்தோ நடைமுறையில் இருக்கும் பொதுப் பயன்பாட்டுக் கட்டடங்களின் விதிகளின்படி திட்ட ஒப்புதல் (Plan Approval) பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிதாக வழிபாட்டுத் தலங்கள் கட்டுபவர்கள் அரசின் அனுமதி பெற்ற பின்னரே கட்டடப் பணிகளைத் தொடங்க வேண்டும். பல நேரங்களில் கட்டட வேலைகளைத் தொடங்கிவிட்டு அல்லது முழுமையாகக் கட்டி முடித்துவிட்டு அரசு அனுமதி பெற ஆணையத்தின் உதவி கேட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அனுமதி வழங்க அரசு விதிகளில் இடமில்லை.

அரசின் இந்த நடைமுறைகள் சொந்த இடங்களில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குத்தான் பொருந்தும். அரசுப் புறம்போக்கு இடங்களில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குப் பொருந்தாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட நாள்களாகக் கவனிக்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வினை வழங்கியுள்ள நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமைச் செயலர் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- சா. பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர்

Comment