
வாழ்க்கையைக் கொண்டாடு – 43
சீரான வாழ்வும்; சிறப்பான உயர்வும்
‘வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர் யாராவது உண்டா?’ எனும் கேள்வியை முன் வைத்தால், சரியான பதில் வருமா? என்பது ஐயம்தான். அதேநேரத்தில், ‘சிறப்பாக வாழ்ந்தவர் யார்?’ எனும் கேள்வி வரும்போது, ஏராளமான கைகள் உயரும்.
சிறப்பானதில் சிறப்படைந்தவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். அந்தச் சிறப்பினை எல்லாரும் அடைய முடியுமா? முடியும்! அதற்கு நாம் செய்ய வேண்டிய முதன்மையான செயல், வாழ்க்கையையும், வேலையையும் சரியான முறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
வேலையையும், வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தி வாழ்வது என்பது அவசியம். இவை சரிவர அமையாவிட்டால், அது நம் உடல்நலனை மட்டுமல்ல, மனநலனையும் பாதித்து மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை உருவாக்கிவிடும். மனிதவளத் துறையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. தானும் சமநிலை கண்டு, நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும் வேலையையும், வாழ்க்கையையும் சரிவரக் கையாள வைக்கும் உத்தியைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.
பரபரப்பான பணிச் சுமையும், சவாலான வேலைகளும் பல நேரங்களில் மனதுக்குப் பிடித்தாலும், நாம் அந்த வேலையின் போக்கில் தொடர்வதற்காகக் கொடுக்கும் விலை மிக அதிகம். வாழ்க்கையைச் சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்ல, வேலை என்பது மிக அவசியம் தான். அது நம் வாழ்க்கையைச் சுகமாக்கத்தானே அன்றி, சுமையாக்குவதற்கு அல்ல என்பதை நாம் உணரும் தருணத்தில்தான் வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே நாம் உருவாக்கி வைத்திருக்கும் சிக்கல்கள் உடையும்.
பொருளாதாரத் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, நமது உடல் நலனில் காட்ட வேண்டிய அக்கறை படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. இங்குதான் சிக்கலும் உருவாகிறது. ‘குடும்பத்திற்காகத்தானே உழைக்கிறேன்’ என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், தன் நலம் இழப்பது எப்படிச் சரியாகும்? ஏனெனில், வேலையில் ஒருவர் அதிகமாக மூழ்கும் நேரத்தில், முதலில் மறப்பது தன் உடல் நலத்தைதான். இப்படிப்பட்ட சூழலில் இதைச் சரிசெய்ய பல்வேறு விழிப்புணர்வுகளைப் பல்வேறு நிறுவனங்களில் மனிதவளத் துறையில் உள்ளவர்கள் ஏற்படுத்தினாலும், அதைச் சரிவரப் புரிந்து கொள்ளாது, பகடி செய்யும் கூட்டம் உண்டு. அதன் புரிதல் நிலை வர சற்றுக் காலம் எடுக்கும்; அந்தக் காலம் வரும்போது எடுக்கும் எல்லா முயற்சிகளும் கைகொடுக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் கீழ்க்காணும் மூன்று படிநிலைகள் நேரத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அளப்பரிய நன்மைகள் உண்டு. அவை...
• தனக்கான நேரம்: தன் தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட தேவைகள் எவை என்பதை அறிந்து, அதற்கான நேரத்தை ஒதுக்கி, நம்மை நாமே புனரமைத்துக் கொள்ளும் இந்தச் செயல் முதன்மையானது.
• குடும்பத்திற்கான நேரம்: தனக்கான நேரத்திற்கு அடுத்தபடியாக அமைவது குடும்பத்திற்கான நேரம். தனிப்பட்ட வாழ்வுக்கு அதிக நேரம் ஒதுக்கி, குடும்பத்திற்குக் குறைந்தபட்ச நேரத்தை ஒதுக்கினால், அங்குப் பிரச்சினை தலைவிரித்து ஆடும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. குடும்பம் சிறக்க நாம் வேலை செய்கிறோம். அந்தக் குடும்பத்திற்காகக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்காமல் இருப்பது நமக்குக் குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்தும்.
• சமூகத்திற்கான நேரம்: இதற்கு எல்லாரும் நேரம் ஒதுக்குவார்களா? என்பது கேள்விக்குறிதான். மனிதனாய்ப் பிறந்து, வாழ்ந்து, உயர்ந்து சிறப்படைவது என்பது வெறுமனே நம்மோடும், நம் குடும்பத்தோடும் முடிவதல்ல. சமூகத்தைப் பிரிந்து தனித்து வாழும் திறன் இருந்தாலும், அது முழுமையான அல்லது நிறைவான வாழ்வு கிடையாது. சமூகத்தோடு இணங்கி விருப்பு, வெறுப்புகளை உணர்ந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லும்போதுதான் நாம் ஒரு முழுமை பெற்ற வாழ்வினை வாழ்ந்த பெருமிதம் ஏற்படும்.
மேற்கண்ட மூன்றில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது? முதல் இரண்டிற்கும் நீங்கள் கொடுத்தாலே போதுமானது; ஆனால், மூன்றாவதற்கும் நேரம் ஒதுக்கிச் செயல்படுவது உன்னதமானது. உடல்நலன், மனநலன், குடும்ப நலன் இவற்றோடு சமூக உறவு பேணுதல் மற்றும் சமூகத்திற்குத் தன்னால் முடிந்த பங்களிப்புக் கொடுத்தல் என்பது நம் வாழ்வைப் பொருளுள்ள வகையில் மாற்றி அமைக்கும்.
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் ஒருங்கிணைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவது இயலாத காரியம் என ஒதுங்கிவிட வேண்டாம். எல்லாவற்றையும் சிறப்புறச் செய்ய எவரோ ஒருவரால் முடிகிறது எனும்போது, ‘அது ஏன் என்னால் முடியாது?’ என்ற கேள்வி எழும்போது அதற்கான வாசலும் திறக்கக் காத்திருக்கும். அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது நாம் சிறப்புறச் செயல்பட நினைக்கும் அல்லது முடியும் என நினைக்கும் எல்லாவற்றிலும் ‘எனக்கான எல்லை எது?’ என்பதை நிர்ணயித்தல் மிக மிக அவசியம்.
‘களவையும் கையாளத் தெரிந்தால் கவலையில்லை’ எனும் சொல்லாடல் உண்டு. அந்த அடிப்படையில், எல்லாவற்றையும் நாம் அணுகும் முறையில் அமைந்துள்ளது அதற்கான தீர்வு. ஆடம்பர வசதிகள் வேண்டாம்; அடிப்படை வசதிகளே போதுமானவை என எல்லைகளை வரையறுத்து வாழ்வோரும் உள்ளனர். ‘எது வந்தாலும், சமாளித்து ஒரு கை பார்த்துவிடுவேன்’ என எகிறி அடிப்போரும் உள்ளனர். இதில் நாம் எந்த வகையினர் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்வது ஓர் இரகம்; வாழ்க்கைப் பிழைப்புக்காக வாழ்வது என்பது மற்றோர் இரகம். இது சரிவரப் புரியும்போது சீரான வாழ்வும், சிறப்பான உயர்வும் எளிதாகும். கயிற்றின் மேல் நடக்கும் சிறு குழந்தைக்கு முன்னுரிமை எது? முதலுரிமை எது? என்பது தெரிந்திருக்கும். அதுபோல நமது வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையில் எது முன்னுரிமை? எது முதலுரிமை? என்பதைச் சரிவர வரையறை செய்து வைப்பது நல்லது.
வாழ்க்கை என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட அற்புதமான கொடை. இதைச் சிறப்பான முறையில் வடிவமைத்துக் கொள்வதில் தனிப்பட்ட பொறுப்புதான் அதிகம். இந்த வாழ்க்கையைச் சிறப்பாக மேம்படுத்த வேலை என்பது அவசியமாகிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதற்காக அதையும், அதற்காக இதையும் விலக்கி வைப்பதைவிட, இரண்டையும் ஒருசேர ஒருங்கிணைத்துச் செல்வதுதான் சிறப்பான செயலாக அமையும். அதற்குக் கொஞ்சம் ஒட்டுமொத்தமான புரிதல் அவசியம்.
இழப்பதும், பெறுவதும் வாழ்க்கையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இழப்பின் போது பொறுமையும், பெறும்போது பெருமையும் கொள்ளும்போது, வாழ்க்கை எல்லையில்லா மகிழ்வை வாரித் தருகிறது.
எதிலும் நாம் முழுமை அடைய முடியாது; ஆனால், சிறப்படைய முடியும்.
தொடர்ந்து பயணிப்போம்...
Comment