No icon

‘ஷோ’காட்டுறீங்களா... ‘ஷோ’

எத்தனையோ கோஷங்கள், அறிவிப்புகள், வாக்குறுதிகள், கள ஆய்வுகள், நெருடல்கள், கணிப்புகள்... இத்தனையையும் தாண்டி ஓட்டுப் போட்டுவிட்டு, ‘நாம ஓட்டுப் போட்ட ஆளு ஜெயிக்குமா? இல்ல, ஓட்டு மெஷின்ல ஓட்ட மாத்தி ஏமாத்திருவாங்களோ?’ என்று பார்க்கக் காத்திருக்கிறோம்இச்சூழலில் நாம் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டியவைகளாகச் சில உள்ளன. அவை தேர்தல் நேரத்தில் நடந்த கட்சித் தாவல்கள், புது இணைப்புகள், புதுத் தோன்றல்கள். இதில்ரோடு ஷோமிகவும் உற்று நோக்கத்தக்கது. எல்லாத் தலைவர்களும் மக்களுக்குஷோகாட்டினார்கள்.

ஆங்கிலத்தில்ஷோ’ (showஎன்றால்காட்டு’ (காட்சி) என்று பொருள். மக்களுக்குஷோகாட்டும் அளவிற்கு இன்றைய தலைவர்கள் செய்த நன்மைகள் நாட்டில் பெருகிக் கிடக்கின்றனவா? ஒரு பெரும் வெற்றியை, பெரும் கொண்டாட்டத்தை, நன்றியின் வெளிப்பாட்டை, நினைவைக் கூட்டம் கூடி வாழ்த்துவதும், எல்லாருக்கும் வெளிப்படுத்துவதும் இயல்பு. இங்கு என்ன இருக்குன்னு இந்தக் காட்டு காட்டுறாங்கன்னு தெரியல?

தேனிருக்கும் பூக்கள் எதுவும் தேனீக்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்லையே! செய்த நன்மையை மக்கள் நினைவில் கொண்டு ஆதரவு தரலாம்; ஒரு வேளை மக்களைத் தொடர் நினைவிழப்பில் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இத்தகைய விளம்பரங்கள் தேவைப்படலாம். பிரச்சாரங்கள், வீதிவீதியாய், வீடுவீடாய்த் துண்டு அறிக்கைகள், எத்தனையோபட்டுவாடாக்கள்’... இன்னும் எத்தனையோ நூதனமான வாக்குச் சேகரிப்புகள் என மக்கள் நலனில் அக்கறை கொண்டு களமிறங்கியவர்களுக்கு, மக்கள் அவதியுறும்போது களத்திலிறங்கி போராடவும், உதவி செய்யவும் மனம் வராதோ?

மணிப்பூர் ஷோவைக் கவனிக்காதவர்களுக்கு இந்தரோடு ஷோபலனளிக்குமா? ஏற்றிய வரிகளும், பெருகிய கொள்ளைகளும் எண்ணிலடங்காதவை. இளமைகள் மழுங்கடிக்கப்பட இணையதளத்தில் பல புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. வகுக்கப்பட்ட சட்டங்களும் வசதியுள்ளோருக்காக வளைக்கப்படுவது போலத் தோன்றுகின்றது. நம்பிக்கை கொண்டவர்களின் ஏமாற்றமே இந்நாட்டில் வாக்குப் பதிவின் அளவு முழுமையைப் பெறத் தடையாக உள்ளது. சதிசெய்து பல வாக்காளர்கள் பட்டியலில் வராமலும், வந்த பட்டியல் பல குளறுபடிகளோடு வந்ததும் வாக்குச் சதவிகிதம் குறையக் காரணமாக அமைந்திருக்கலாம்.

சீட்டு முறையில் வாக்களிக்கும் முறைக்கும், மிஷினில் வாக்களிக்கும் முறைக்கும் வேறுபாடு இருக்கிறதா?

சீட்டு முறையில் வாக்குப் பதிவு செய்து பெட்டியில் போட்டுவிட்டு வரவேண்டும். மிஷினில் ஓட்டுப் போடும்போது விளக்கு மாறி எரிதல், விவி பேட்டில் சின்னம் மாறி தெரிதல், இது போக பல மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த இடர்பாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது. சீட்டு முறையில் வாக்குப் பதிவை எண்ணிக்கை செய்ய தாமதமாக வாய்ப்புள்ளது. ஆனால், மின்னணு (மிஷின்) வாக்களிப்பு எண்ணுவதற்கு ஏன் தாமதம்? ஒருபுறம், வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு புறம் குறிப்பிட்ட மணிநேர இடைவெளியில் வாக்கு எண்ணிக்கையை வெளியிடலாமே! இத்தனை பெரிய இடைவெளி மக்களிடையே பல குழப்பங்களை உண்டாக்குகின்றன.

ஷோகாட்டி ஆட்சியைப் பிடிக்க நாடு ஒன்றும் சர்க்கஸ் கூடாரம் இல்லை. வெகுசிலரின் ஆடம்பர வாழ்வுக்காக இங்குள்ள மக்களும், மாக்களும் சிதைந்து கொண்டிருக்கின்றனர். நற்பணிகளால்தான் இன்றும் சில தலைவர்கள் மக்கள் மனத்தில் நிற்கின்றனர். தொடர்ந்து வாக்குகள் ஒன்று இல்லை என்றால், இன்னொன்று என்று இரு பக்கத்துப் பார்வைக்குள்ளேயே முடிவதால்யாரை ஆதரிப்பது?’ என்ற மக்களின் குழப்பத்தால், புதிய தலைவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. குடும்பமாகச் சேவை செய்ய விருப்பமோ என்னமோ, குடும்பம் குடும்பமாக அரசியலில் இறங்கிவிடுகின்றனர்.

ஒருமுறை ஆட்சியில் அமர்ந்த கட்சிக்கு மீண்டும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வாய்ப்பு இல்லை என்ற நிலை வரும் வரை, இங்கு மாற்றங்கள் வரப்போவதில்லை. ‘நமக்கான நீதியைப் பெற்றுத்தர யார் தயாராய் இருப்பது?’ என்பதைச் செய்யும் செயல்களைக் கொண்டே கணிக்க இயலும். ஏனெனில், தேர்தலுக்கு முன் கொடுக்கும் வாக்குறுதிகளைப் பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள் முடிக்கவில்லை என்றால், மக்களின் குறைகள் உடனுக்குடன் தீரவில்லை என்றால், மக்களுக்கு ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்றால் ஆட்சியைக் கலைத்துப் புதிய ஆட்சியை அமைக்கச் சட்டம் இயற்ற வேண்டும்.

மக்களுக்குத் தீங்கிழைக்க எத்தனையோ சட்டங்கள் இயற்றப்படும்போது, மக்களின் நல்வாழ்வுக்கு இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுவதில் தவறொன்றும் இல்லை. ‘சட்டங்கள் மனிதர்களுக்காக; மனிதர்கள் சட்டங்களுக்காக அல்ல.’

மக்களின் மனங்களை நற்பணியால் ஆள தலைவர்கள் வேண்டும். சாதி, இனம், மொழி, மதம், இன்னும் பிற பிரிவினை நோய்களில் சிக்கிக் கொள்ளாமல் மனிதநேயத்தோடு தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

யானை தனது பலம் தெரியாமல், சிறு கயிறுக்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதுபோல, மக்களாகிய நமது பலம் தெரியாமல் அடிமைகளாக இருக்க வேண்டாம். தயாராவோம்; முன்வருவோம்; முயற்சி செய்வோம்; ஒன்றுசேர்வோம்; கரம் கோர்ப்போம்; அறம் செய்வோம்; புது அரசியல் செய்வோம்; மனிதம் காப்போம்!

 

Comment