No icon

58-வது சமூகத் தொடர்பு நாள் சிறப்புக் கட்டுரை

சமூக ஊடகங்களில் நமது ஈடுபாடு

வத்திக்கான் ஊடகப் பேராயத்தின் சிந்தனை மடல்

1. நாம் வாழும் இந்த எண்ணிமக் (Digital) காலத்தில், எண்ணிம உலகில் வாழும் பிற சகோதர சகோதரிகளுடன் தனிமனிதர்களாகவும், திரு அவைச் சமூகமாகவும் ஒருவருக்கொருவர்அன்புள்ள அயலாராக (Loving neighbours) வாழ்வது எப்படி?’ என்றும், இன்று எண்ணிம நெடுஞ்சாலைகளில் (Digital highwaysநாம் மேற்கொள்ளும் பொதுவான பயணத்திலும் ஒருவர் மற்றவருடனும் அவர்களது தேவைகளிலும் எந்த அளவுக்கு உடனிருக்கிறோம்? என்பதைப் பற்றிப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதரிடையே புதிய முறைகளில் தொடர்புகொள்ளும் வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளன. ஒருவர் எண்ணிம ஊடகங்களில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது இன்றைய கேள்வியல்ல. இவற்றில் எவ்வாறு ஈடுபடுவது என்பதுதான் முக்கியக் கேள்வியாகும்.

மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளவும், தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் முன்பு இருந்ததைவிட புதிய சூழலைச் சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. அதே வேளையில் தொடர்பாடல் (Communication) செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) தாக்கத்தைக் கொண்டுள்ளதால்அடிப்படையில் மனிதர் ஒருவர் மற்றவரை நேரில் சந்திப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் எண்ணிமத் தளத்தில் நமது ஈடுபாடு மீளமுடியாத பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தளங்கள் நாம் பயன்படுத்தும் கருவிகளாக மட்டுமல்லாமல், தன்னிலேயே புதிய படைப்புகளை உருவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன என்ற புதிய உணர்வு மனிதரிடையே ஏற்பட்டுள்ளது.

இன்று எண்ணிம உலகில் வாழும் இளையோரும், முந்தைய தலை முறையினரும், சமூக ஊடகங்கள் வழியாகவும், பிற வழிகளிலும் தாம் இருக்கும் இடங்களிலேயே பிறர் தம்மைச் சந்திக்க வேண்டும் என விரும்புகின்றனர். இந்த எண்ணிம உலகையே தங்களின் வாழ்வின் வழியாகவும் தம் அடையாளமாகவும் இளையோர் கொண்டுள்ளனர்.

2. எண்ணிமக் கலாச்சாரத்தின் (னுபைவையட உரடவரசந) ஒரு வெளிப்பாடாகிய சமூக ஊடகங்கள் இன்று ஒவ் வொரு நம்பிக்கையாளர் மற்றும் நம்பிக்கைச் சமூகத் தின் வாழ்விலும் மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதால் சமூக ஊடகப் பயன்பாடு பற்றித் திரு அவை தெளிவான வழிகாட்டுதல்களைத் தர வேண்டுமென பல கிறிஸ்தவர்கள் கேட்டுள்ளனர்.

தனிமனிதராகவும், குழுக்களாகவும் நம்பிக்கையாளர்கள் உலகெங்கும் சமூக ஊடகங்களில் படைப்பாற்றலோடு ஈடுபட்டு, தங்கள் நம்பிக்கைக்கு இத்தளங்களில் சான்று பகர்ந்து வருகின்றனர். இது திரு அவையின் நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட பரந்துபட்டதும், வலிமையானதுமாக உள்ளது எனலாம். பல தலத் திரு அவைகளும், இயக்கங்களும், குழுமங்களும், துறவற சபைகளும், பல்கலைக்கழகங்களும், தனிமனிதர்களும் சமூக ஊடகங்களில் கல்வி மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

3. அகில உலகத் திரு அவையும் இந்த எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1967-ஆம் ஆண்டிலிருந்து உலகத் தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்திகள் இப்பொருள் பற்றிய தெளிவான சிந்தனையைத் தந்துள்ளன. 1990-வது ஆண்டுகளில் இச்செய்திகள் கணினி மற்றும் அதன் பயன்பாடு பற்றியும், 2000-வது ஆண்டிலிருந்து எண்ணிமக் கலாச்சாரம் மற்றும் சமூகத் தொடர்பாடல் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றன. 2009 -ஆம் ஆண்டில் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் தனது செய்தியில், தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள மாற்று வடிவங்களைச் சுட்டிக்காட்டி, ஊடகங்கள் மனிதர்களுக்கிடையே தொடர்புகளை உருவாக்குவதோடு நின்று விடாமல், அவர்கள் தம்மிடையே உறவுகளை உருவாக்கி, மனிதரிடையே பிறரை மதிக்கும் கலாச்சாரம், உரையாடல் மற்றும் நட்புறவை உருவாக்குவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வெறும்கருவிகள்’ (Tools) மட்டுமல்ல, அவைதளங்கள்’ (Spaces) என்பதைத் திரு அவை உறுதிப்படுத்தி, நற்செய்தி அறிவிப்புக்கு இத்தளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்அன்றாட வாழ்விலிருந்து எண்ணிம உலகைப் பிரித்துப் பார்க்க இயலாதுஎன அறிக்கையிட்டுள்ளார். “இந்த எண்ணிம உலகம் மனிதர் தம்மிடையே உறவு கொள்ளும் முறைகளையும், அறிவு பெறும் மற்றும் தகவல் பரிமாற்ற முறைகளையும் மாற்றியமைத்துள்ளனஎன்று குறிப்பிட்டுள்ளார்.

4. இவற்றோடு சமூக ஊடகங்களில் திரு அவையின் செயல்பூர்வமான ஈடுபாடு மிகவும் அதிகரித்துள்ளது. எண்ணிம ஊடகங்கள் தற்போது திரு அவை தன் பணிகளில் பயன்படுத்தும் வலிமையான கருவிகள் என்பதை உணர்கிறோம். 2020, மார்ச் 27-ஆம் நாள் கோவிட்-19 பெருந்தொற்றின் தொடக்கக் காலத்தில் திருத்தந்தையின் உரையின் போது, உரோமை புனித பேதுரு சதுக்கம் ஆள்கள் யாரும் இல்லாதிருந்தும், திரு அவையின் உடனிருப்பு ஊடகங்கள் வழியாக உலகெங்கும் வெகுவாக உணரப்பட்டது. திருத்தந்தை நேரடி ஒளிபரப்பின் மூலம் உலகை மாற்றும் ஒரு புதிய அனுபவத்தை உருவாக்கினார். அவரது செபம் மற்றும் செய்தி முடக்கப்பட்டிருந்த உலகினருக்குப் புதிய உணர்வைத் தந்தது. இலட்சக்கணக்கான உயிர்களைக் கொள்ளை கொண்ட இப்பேரிடர் காலத்தில் முடங்கிக்கிடந்த, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் புனித பேதுருவின் வழித்தோன்றலாகிய திருத்தந்தையோடு ஊடக வழி இணைந்திருந்தனர்.

பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் எண்ணிம ஊடகங்கள் வழியாகத் திருத்தந்தையின் செய்தி உலகின் எல்லா இல்லங்களுக்கும் சென்றடைந்து பலருடைய வாழ்வைத் தொட்டது. உரோமில் பேதுரு சதுக்கத்தில் உள்ள பெர்னினியின் (Bernini) தூண்கள் தம் கரம் விரித்து, இலட்சக்கணக்கான மக்களை அரவணைத்தன எனலாம். உடலளவில் ஒருவர் மற்றவரிடமிருந்து விலகி இருந்தாலும், திருத்தந்தையோடு இணைந்திருந்தவர்களால் அவ்வேளையில் மிகுந்த ஒன்றிப்பையும், ஒருமைப்பாட்டையும் உணர முடிந்தது.

5. பின்வரும் பக்கங்களில் உள்ளவை அனைத் தும் வல்லுநர்கள், ஆசிரியர்கள், இளம் தொழில் முனைவோர், பொதுநிலையினர், அருள்பணியாளர்கள், துறவியர் ஆகிய அனைத்து நிலையினரின் சிந்தனைகளை உள்ளடக்கியவை. கிறிஸ்தவர்கள் எவ்வாறு சமூக ஊடகங்களில் ஈடுபட வேண்டும் என்பதே முதன்மையான கேள்வியாகும். இங்குத் தரப்பட்டுள்ளவை இத்துறையில் மேய்ப்புப் பணிக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் என்று கூறுவதற்கில்லை; மாறாக, எண்ணிம அனுபவங்களைப் பற்றி யும் மனிதராகவும், சமூகமாகவும் சமூக ஊடகங்களில் படைப்பாற்றலோடு ஈடுபட தனிமனிதரையும், சமூகத்தையும் உற்சாகப்படுத்துவதே இதன் நோக்கம். இதனால் நமக்கு அடுத்திருப்பவருடன் நல்லுறவுகளைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.

அமைதியான, அர்த்தமுள்ள, அக்கறை கொண்ட உறவுகளைச் சமூக ஊடகங்கள் வழியாக உருவாக்குவது மிகவும் சவாலானதே. எனவே, இதைப் பற்றிய ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளோரிடையேயும், அருள்பணியாளரிடையேயும் தேவைப்படுகின்றன. எண்ணிமச் சூழலில் நமது உடனிருப்பு எந்த விதமான மனிதத்தைப் பிரதிபலிக்கிறது? நமது எண்ணிம உறவுகள் எந்த அளவுக்கு உண்மையான, ஆழமான தொடர்பாடலின் பலனாக அமைந்துள்ளது? ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கருத்துகள், உணர்வுப்பூர்வமான எதிர்வினைகள் ஊடகங்களால் எந்த அளவுக்கு எண்ணிம வழியில் வெளிப்படுத்தப்படுகின்றன?

இறுதியாக, சமூக ஊடகத்தில்எனது அயலார் (Neighbour) யார்?’ என்ற கேள்விக்கு நல்ல சமாரியர் உவமை பதிலளிக்கிறது. சட்டவல்லுநர் ஒருவரின்நான் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியினால் தூண்டப்பட்டதாகும். ‘பெறுவதற்கு’ (To inherit) என்ற வினைச்சொல் வாக்களிக்கப்பட்ட நாட்டை (Promised land) உரிமையாக்கிக் கொள்ளுதல் என்பதை நினைவூட்டுகிறது. இது வெறும் நிலப்பரப்பை மட்டும் குறிப்பதல்ல; மாறாக, நிலையானதும், ஆழமானதுமாகிய ஒரு நிலையின் அடையாளம். இதையே ஒவ்வொரு தலைமுறையினரும் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். இன்று சமூக ஊடகங்களில் ஈடுபட நமக்கு இது மிகவும் உதவும் என நம்புகிறோம்.

(இக்கட்டுரை, மடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி மட்டுமே)

Comment