‘சோழ நாடு சோறு போடும் நாடு’
சோழர்களின் பழமையும், நீண்ட வரலாற்றுப் பின்னணியும் கொண்டது தஞ்சை மாவட்டம். ‘சோழ நாடு சோறு போடும் நாடு’ என்ற வசனம் சோழர்களின் வளமையையும் வலிமையையும் எடுத்துரைக்கின்றது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம், இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் போன்ற பழம் பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைக் கொண்டது இம்மாநகரம்.
தஞ்சைத் திரு அவை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாட இருக்கிறது. மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் தென் பகுதியாக விளங்கிய தஞ்சையில் இயேசு சபைக் குருக்களும், அகுஸ்தினியன், பிரான்சிஸ்கன் சபைக் குருக்களும் பணியாற்றி கிறிஸ்தவம் வேரூன்ற வித்திட்டனர். தஞ்சை மறைமாவட்டத்தில் புனித அருளானந்தர், புனித சவேரியார், வீரமாமுனிவர் போன்ற புனிதர்கள் மறைப்பணி செய்திருப்பது பெருமையாகும்.
தஞ்சைத் திரு அவை சமய நல்லிணக்கத்திற்குப் பேர்போன ஒரு தளமாக இருப்பது அதன் சிறப்பாகும். ஏனெனில், தஞ்சை மறைமாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலமும், தஞ்சையில் பிரகதீஸ்வரர் பெரியகோவிலும், நாகூரில் தர்காவும் அமைந்திருப்பது இதற்கு முக்கியக் காரணமாகும்.
1952-இல் தனி மறைமாவட்டமாக உருவெடுத்த இம்மறைமாவட்டம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பாளையங்கோட்டை, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோவில் என்ற ஏழு மறைவட்டங்களை உள்ளடக்கியது. 10,518 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மறைமாவட்டத்தில், 96 பங்குகளில் 2,21,833 கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், 190 மறைமாவட்டக் குருக்களும், 65 துறவற சபைக் குருக்களும், 715 கன்னியர்களும் உள்ளனர்.
இம்மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைத்த மேதகு ஆரோக்கிய சுந்தரம், மேமிகு பாக்கியம் ஆரோக்கியசாமி மற்றும் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் ஆகிய முத்தான மூன்று ஆயர்களைத் தொடர்ந்து, பேரருள்திரு. லூ. சகாயராஜ் அவர்கள் 16 மாதங்களாக மறைமாவட்டத்தின் பரிபாலகராகப் பணியாற்றியுள்ளனர்.
பழமையும் பெருமையும் கொண்ட தஞ்சையின் முதல் ஆயராக 1953 - 1986 ஆண்டுகளில் பணியாற்றிய மேதகு ஆரோக்கிய சுந்தரம் ஆண்டகை பல்வேறு சாதனைகளைப் புரிந்த சரித்திர நாயகன். மண்ணின் மைந்தராகப் பொறுப்பேற்று இம்மண்ணுக்குப் பெருமை சேர்த்தது இறைத்திருவுளமே. ஒவ்வொரு பங்கிலும் ஒரு கோவில், குருக்கள் இல்லம், கன்னியர் இல்லம், பள்ளி, சிறுவர் இல்லம் இருந்தால்தான் ஆன்மிகம், கல்வி, சமூக சேவை போன்ற துறைகளில் தடம் பதிக்க முடியும் என்று உறுதியாக நம்பி உழைத்த பெருமை அவரையே சாரும். மேலும், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு இடங்களிலும் சமூக சேவை மையங்களை நிறுவி ஆயரோடு, குருக்களும் துறவியரும் பொதுநிலையினரும் ஜனநாயக உரிமையுடன் ஈடுபட்டு உழைக்க வழிவகுத்தார்.
பேராயர் மேமிகு பாக்கியம் ஆரோக்கியசாமி ஆண்டகை தஞ்சை ஆயராக 1986 -ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். இவர் பணியாற்றிய 11 ஆண்டுகள் இறைத்துணையோடு நிறைவாக உழைத்தவர். எளிய உள்ளம் கொண்டவர் மட்டுமல்ல, எளிமையாகப் பழகக் கூடியவராகவும் இருந்து, கிராமப்புறங்களில் உயர்நிலைப் பள்ளிகளைக் குறிப்பாக மிகவும் பின்தங்கிய பாளையங்கோட்டை, விச்சூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளை நிறுவி, கிராமப்புற சிறுவர், சிறுமியர் எளிதாகக் கல்வி பயில உதவியவர். தொழிற்கல்வியில் தேர்ந்து வளர்ச்சியுற்று, மறைமாவட்ட இளைஞர்கள் உயர வேண்டும் என்பதற்காக நமணசமுத்திரம், வானமாதேவி போன்ற ஊர்களில் தொழிற்பயிற்சி பள்ளிகள் நிறுவியவரும் இவரே. ஆன்மிக வளர்ச்சிக்காக ஆவியின் அருங்கொடை இயக்கத்தை ஊக்குவித்து, அதற்காக ஒரு மையத்தை நிறுவி அதன் முழுநேர அருள்பணியாளராக ஒரு குருவையும் நியமித்தவர் இவரே.
மூன்றாவது ஆயராக மேதகு தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை 1997 செப்டம்பரில் பொறுப்பேற்றார். பொறுப்பேற்று, தம் முந்தைய ஆயர்கள் வகுத்த பாதையில் செம்மையாகப் பயணித்தவர். எல்லாத் துறைகளிலும் மறைமாவட்டம் முழு வளர்ச்சி காணும் நோக்குடன் ஈடுபாட்டுடன் உழைத்தவர். பல உயர் கல்வி நிறுவனங்களான புனித ஜான் டி பிரிட்டோ ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரி நிறுவனத்தையும், அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக புனித ஆரோக்கிய அன்னை செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் செவிலியர் கல்லூரியையும், ‘ஆயர் தேவதாஸ் அம்புரோஸ்’ என்ற பெயரில் சி.பி. எஸ்.சி. பள்ளியையும் நிறுவியவர். மக்களின் தேவைக்கு ஏற்ப பல புதிய பங்குகளை உருவாக்கி ஆன்மிக தாகத்தைத் தணித்தவர்.
பட்டுக்கோட்டை, பாளையங்கோட்டை, ஆவுடையார்கோவில் ஆகிய மூன்று இடங்களில் புதிய மறைவட்டங்களை உருவாக்கி ஆன்மிக வாழ்விற்கும், நிர்வாக வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர் இவரே.
மேலும், வேளாங்கண்ணித் திருத்தலத்தை அருள்தளமாக உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் இவரே. தஞ்சையில் பெயர் சொல்லும் அளவிற்கு புனித ஆரோக்கிய அன்னை மருத்துவமனையை ஒரு பல்நோக்கு மருத்துவமனையாக உயர்த்தி, அனைத்துச் சமய மக்களுக்கும் மருத்துவப் பயன் பெற உதவி செய்தார்.
பேரருள்பணி. லூ. சகாயராஜ் மறைமாவட்டப் பரிபாலகர் (2023-2024)
மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் பணி ஓய்விற்குப் பிறகு, தஞ்சை மறைமாவட்டக் குருக்களின் ஆலோசனைக் குழு இணைந்து அருள்பணி. லூ. சகாயராஜ் அவர்களை மறைமாவட்டப் பரிபாலகராகத் தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து, தன்னுடைய பரிபாலகர் பணியை ஆலோசனைக் குழு குருக்களைக் கலந்து மறைமாவட்டத்தை இறைவன் தனக்குக் கொடுத்த திறமைக்கேற்ப, வழிநடத்தி வந்துள்ளார்கள். இந்த 16 மாதங்களில் பரிபாலகர் தந்தையாக கல்வி, சமயம், மருத்துவம் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்தும், மேலும் தமிழ்நாடு ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டம் வேளாங்கண்ணியில் சிறப்பாக நடைபெற உறுதுணையாகவும் இருந்துள்ளார்.
இத்தகைய நிர்வாகச் சிறப்பு கொண்ட தஞ்சை மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக மேதகு முனைவர் சகாயராஜ் தம்புராஜ் நியமிக்கப்பட்டிருப்பது இறைவன் தந்த கொடையே.
‘அவரது இரக்கமிகு பேரன்பிற்குச் சான்று பகர’ என்ற விருதுவாக்கோடு தனது ஆயர் பணியைத் தொடரவிருக்கும் மேதகு ஆயர் அவர்களை தஞ்சை மறைமாவட்டக் குருக்கள், இருபால் துறவியர் மற்றும் இறைமக்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துகிறோம்.
Comment