வாழ்க்கையைக் கொண்டாடு – 55
நினைவு தெளியட்டும்
‘வேலையில நெனப்பு இருக்கணும்; அப்பதான் ஒழுங்கா முடிக்க முடியும். நெனப்ப எங்கேயோ வச்சுக்கிட்டு இங்க என்ன துளாவிட்டு இருக்க?’,
‘இப்பத்தான் உன்னப் பத்தி நெனச்சேன், நீயே வந்துட்ட’,
‘எப்பவும் ஒரே நெனப்பா இரு; அலைபாய்ஞ்சுட்டுத் திரியாத’...
இதுபோல இன்னும் பல ‘நினைவு’ அல்லது ‘நெனப்பு’ பற்றிய வார்த்தைகளைக் கேட்டிருப்போம். இவையெல்லாம் கொஞ்சம் உளவியலோடு தொடர்புடையவை. ஆழமாகப் பார்த்தால் அனைத்தும் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கும். இந்த நினைவு பல வகைகளில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பயணிக்கக் கூடியது. நினைவால் மேலெழுந்தவர்களும் உண்டு, நினைவாலே ‘நினைவாகிப்’ போனவர்களும் உண்டு.
‘ஏமாற்றுவோருக்கு மறதி அதிகம்; நேசித்தவர்களுக்கு நினைவுகள் அதிகம்’ எனும் சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். மறதியும், நினைவும் மாறி மாறி நம்மை வாட்டி வதைப்பதுண்டு. நாம் அதில் வதைபடும் உள்ளமா? அல்லது விதைபடும் உள்ளமா? என்பது நாம் அவற்றைக் கையாளும் விதத்தால் அமையும் என்று எனக்கு நெருங்கிய உளவியல் நண்பர் ஒருவர் கூறினார்.
இது முற்றிலும் உண்மை. ஏதோ ஒரு நிகழ்வு மூலம் அதனுள்ளே கிடந்து வெளிவர முடியாமல் அல்லது வெளிவர விருப்பம் இல்லாமல் வாழ்க்கையை வீணாக்கியோர் பலர் உள்ளனர். எது நடந்தாலும், ‘அடுத்தது எனக்காக ஒன்று காத்திருக்கிறது, அதை நோக்கி எனது பயணம் அமையட்டும்’ எனும் எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டுமாம்! அதுதான் நம்மைச் சோர்வடைய விடாமல் தூக்கிப் பிடிக்கும்.
‘நினைவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?’ என நீங்கள் கேட்கலாம். காலங்கள் கடந்தும் காலாவதி ஆகிவிடாத மருந்து அன்பானவர்களின் அழகான நினைவுகள் மட்டுமே! வருடங்கள் கடந்தும் வரையறைக்குள் வராத ஒன்று உண்டென்றால் அது நினைவு மட்டுமே.
நம்மில் பலர் முடிந்ததையும், இழந்ததையும் பற்றி அதிகம் பேசுவதும் சிந்திப்பதுமாகவே இருப்பர். இது எந்த அளவிற்கு அவர்களது அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரியவில்லை. நான் இதற்கு முன் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்தபோது சந்தித்த ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன்:
எங்கள் நிறுவனத்தில் வேலை செய்த 26 வயதுள்ள ஒரு பணியாளர் நன்றாக வேலை செய்யக் கூடியவர். ஆனால், சில நேரங்களில் ஏதோ ஒன்றைத் தொலைத்ததுபோல ஒரு பற்றற்ற மனநிலையில் இருப்பார். எல்லாரிடமும் கலகலவெனப் பேசக் கூடியவர்தான்; ஆனால், சில நேரங்களில் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்வார். இது அவரோடு வேலைபார்த்த சக பணியாளர்கள் மத்தியில் சற்று வியப்பும் அச்சமும் தருவதாக இருந்தது.
இது நாளடைவில் பிரச்சினையாக மாறி என்னிடம் கொண்டு வரப்பட்டது. அவரைப் பற்றிய குறை வந்தவுடனே அவரைக் கூப்பிட்டுப் பேசவில்லை. மாறாக, அவர் அறியாமலே அவரைப் பற்றி அறிய முற்பட்டேன். அதன் முயற்சியாக ஒரு நாள் ‘ஏன் இவர் இப்படி நடந்துகொள்கிறார்?’ என்பதை அறிந்துகொண்டேன். வெவ்வேறு எண்களை ஒரு தாளில் அல்லது அவர் வேலை செய்யும் மடிக் கணினியில் அடிக்கடி கூட்டிக் கூட்டிப் பார்ப்பார். என்னவென்றால், அவர் மிக நன்றாகப் படிக்கக் கூடியவர். 10-ஆம் வகுப்பில் 90% மதிப்பெண் எடுத்தவர். ஆனால், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் உடல்நிலை சற்றுச் சரியில்லாத காரணத்தால் 68% மதிப்பெண்தான் எடுக்க முடிந்ததாம். அது இவரது மனத்தில் ஆறாத வடுவாக மாறிவிட்டது. இதுதான் அவரது பிரச்சினை என்பதை அறிந்து கொண்டேன்.
அவரிடம் பேச்சு கொடுத்ததின் மூலம் குறைவான மதிப்பெண் எடுத்ததால் உண்டான மனக் காயத்தில் இருந்து மீண்டுவர இயலா உணர்வை வெளிப்படுத்தினார். அந்த நினைவு அவர் மனத்தில் இறக்கி வைக்க முடியாத பாரமாகி இருந்தது. சில பல உதாரணங்களை மேற்கோள் காட்டி, ‘நினைவு என்பது நமக்கு வேண்டும். அது நமக்கு ஓர் உந்துதல் தந்து முன்னேற்றம் தரும் விதத்தில் அமைந்தால் நல்லது. ஆனால், நம்மைப் பழைய நினைவுகளில் உழல வைத்துப் பின்னோக்கி இழுத்தால், அதை உதறிவிட்டு நினைவு தெளிவு காண்பதுதான் சிறந்த அணுகுமுறை’ என்று விளக்கியதன் மூலம் அவரிடம் அடுத்தடுத்து பல மாற்றங்கள் தென்பட்டன.
மற்றோர் உதாரணம்: இதை உதாரணம் எனக் கூறுவதைவிட ‘உதார் விடும் ரகம்’ என்று கூறுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நேர்முகத் தேர்வில் நன்கு பதிலளித்து, வேலைக்கான பணி ஆணையைப் பெற்று வேலைக்கு வந்த ஒருவரைப் பற்றிதான் இங்குப் பேசுகிறேன். அவர் பல்கலை அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர். வேலைக்கு வந்து விட்டார், வேலையில் சேர்ந்த பிறகு ஐந்து மாதங்களாக அவருக்குக் கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் சரிவரச் செய்யவே இல்லை. கேட்டால் ‘நான் Gold Medal வாங்குனவன் தெரியுமா?’ எனும் பதில் மட்டுமே அவரிடம் இருந்து வந்தது. அதை நாம் மறுக்கவில்லை. அதே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தரப்படும் வேலையைச் சரிவரச் செய்து கொடுப்பதை விட்டுவிட்டு, வேறு எது பேசினாலும் அது கணக்கில் வராது என்பதை அவருக்குப் புரிய வைத்து, கடந்த கால நினைவில் இருந்து மீட்டு, நிகழ்கால நிகழ்விற்கு வர வைத்ததில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் ஏற்பட்டது. அவர் இப்போது ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பது எனக்குப் பெருமைதான்.
இப்படிப் பல சுவைமிகு நிகழ்வுகள் மனித வளத்துறையில் உள்ளவர்களுக்கு நிகழும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அணுகுமுறையால் பொருளுள்ளதாகவும் மாறும்.
உதவி பெற்றவருக்கு மறதி அதிகம்; உதவி செய்தவருக்கு நினைவு அதிகம்; நினைவு தெளியட்டும்!
தொடர்ந்து பயணிப்போம்...
Comment