No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 56

நீரில் குதிக்காமல் நீச்சல் ஏது?

உன்னை மூழ்கடிக்க வரும் தொல்லைகளைக் கடந்து நீந்திவரக் கற்றுக்கொள்.” இங்குநீந்தஎன்பதில் பலவித அர்த்தங்கள் உள்ளே பொதிந்துள்ளதை நாம் உணரலாம். நாம் வாழும் உலகம் மூன்று பங்கு நீரால் சூழ்ந்துள்ளது. ஆதலால் அது எந்த நேரத்திலும் நம்மை மூழ்கடிக்கலாம்; எனவே, இன்றே நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் என்று யாராவது நம்மிடம் சொன்னால் கோபம் வரும்தானே! ஆனால், அதே நேரத்தில் நம்மைச் சூழ்ந்திருக்கும் இன்னல்கள், இடைஞ்சல்கள் ஒருபோதும் நம்மை மூழ்கடிக்க முடியாது என்று சொன்னால் மட்டும் கோபம் நமக்கு மூக்கின் மேல் வந்துவிடும்.

இயற்கை எப்போதுமே நமக்கு ஒரு பாடத்தைத் தந்துகொண்டே இருக்கும். அதோடு ஒன்றிக்கும்போதுதான் அதை முழுமையாகக் கண்டுகொள்ள முடியும். மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டுள்ள நாம், அந்த நீரை முழுமையாக மேலாண்மை செய்ய ஆரம்பித்தால், அது நம்மை விழுங்கும் சூழல் இருக்காது. இல்லையெனில் என்றாவது ஒருநாள் நாம் அதற்கு இரையாக நேரிடும். நமக்குள் நீந்தும் பிரச்சினைகளைச் சரியாகக் கையாளும்போது, மேலாண்மை செய்யும்போது, அவை ஒருபோதும் நம்மை மூழ்கடிக்க முடியாது.

நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தருகிறது என்பதைத் தாண்டி, மிகப்பெரிய வாழ்வியல் பாடத்தை நமக்கு உணர்த்துகிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உண்மைதான். நம் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் ஒருங்கமைவோடு செயல்படுவது இந்த நீச்சலில்தான். உடற்பயிற்சிகளைவிட பன்மடங்கு சிறந்ததாக நீச்சல் தெரிவது இதனால்தான். நம் உடலின் அனைத்துப் பாகங்களும் நீச்சலின் போது இயங்கி, உடலின் அத்தனை உறுப்புகளையும் வலுவாக்குகிறது. பல்வேறு வியாதிகளின் வீரியத்தைக் குறைத்து, உடல் பாதிப்புகளில் இருந்து நம்மை வெகுவாக மீட்டெடுக்கும் தன்மை கொண்டது நீச்சல் பயிற்சிதான்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 

இறைவன் அடிசேரா தார்

(கடவுள் வாழ்த்து குறள் எண்:10)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறுகிறார் திருவள்ளுவர். வாழ்க்கையைப் பெருங்கடலாகவும், அதைக் கடப்பதற்கு நீச்சலை ஓர் உவமையாகவும் இவர் கூறியுள்ளதை நாம் இங்கு நினைத்துப் பார்க்கும்போது, நீச்சலுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் நாம் அறியலாம்.

நீச்சல் என்பது ஏரி, குளங்களில் மட்டுமே நீந்தக்கூடிய ஒன்று எனும் எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். நீச்சல் என்பது நாம் கற்றுணர வேண்டிய அவசியக் கலைகளில் ஒன்று; நம் உடல் நலம் காப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது; நீச்சல் என்பது ஒரு பேரிடர் காக்கும் கலை; நீச்சல் என்பது தற்காப்புக் கலைக்கு நிகரானது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். பல்வேறு கலைகளைக் கற்றவர்கள் எப்படித் தன்னம்பிக்கையுடன் வாழ்வார்களோ அதுபோல, நீச்சல் அறிந்தவர்களும் தன்னம்பிக்கை பெற்று, தன்னிகரில்லா மனிதராக உயர முடியும் என்றால் ஆச்சரியமாக உள்ளதுதானே! ஆம் உண்மைதான். நீச்சல் ஓர் அலாதியான கலை. கற்றுக்கொள்ளும்வரை பயம் இருக்கும். கற்ற பிறகு பயம் பறக்கும். நீச்சல் நமக்கு மிகப்பெரிய வாழ்வியல் பாடத்தைக் கற்றுத்தரும், அவை அப்படியே நம் அன்றாட வாழ்க்கை நிலைக்கு ஒத்துப்போகும்.

நீர்நிலைகள் பல வகைப்படும். ஆறு, ஓடை, அருவி, கடல், குளம், கண்மாய், ஏரி, குட்டை, ஊருணி, ஏந்தல், தாங்கல், இலஞ்சி, ஓடை, கலிங்கு, கால்வாய், தெப்பக்குளம், குட்டம், கிணறு, பொய்கை.... இப்படி ஏறத்தாழ 50 வகையான நீர்நிலைகள் தமிழில் உள்ளன. இதுபோல நம் வாழ்விலும் எண்ண முடியாத சிக்கல்கள் உள்ளன. நீச்சல் பழகும்போது தலை நீருக்கு மேலேயே இருக்க வேண்டும். காதுகளில் தண்ணீர் புகாத வண்ணம் கவனமாக இருந்து, இரு கைகளும் கால்களாய் மாறி மாறி முன்னோக்கி அசைக்க அசைக்க, உடலின் இயக்கம் முன்னோக்கிச் செல்லும். அதுபோல்தான், எந்தச் சிக்கலுக்குள்ளும் உடனே நாம் தலையை நுழைக்காமல், காதுகளைக் கூர்மையாக வைத்து, தேவையானதை உள்வாங்கி, தேவையற்றதை வெளியேற்றி முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் எனும் படிப்பினையைத் தருகிறது.

எடுத்த எடுப்பிலே ஆழமான பகுதிக்குள் சென்றுவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஆழம் பார்த்து காலை விட்டு நீச்சல் கற்றுக் கரையேற வேண்டும். முதன்முதலில் நீச்சல் கற்கும்போது யாரோ ஒருவரின் துணையோ அல்லது தூண்டுதலோ அடிப்படையாக இருந்திருக்கும். அதுபோல்தான் நம் வாழ்விலும் யாரோ ஒருவர் நமக்கு உறுதுணையாக நம் உயர்விற்கு இருந்திருப்பார். எத்தனை துணை இருந்தாலும் பயத்தினால் தண்ணீர் குடித்தவர்கள் அதிகம் உண்டு. தண்ணீர் குடித்த நாம், பிறருக்குத் தண்ணி காட்ட வேண்டாம் என்பதுதான் அதன் பாடம்.

நான் முதன் முதலில் நீச்சல் கற்ற விதத்தை இன்று நினைத்தால், எனக்கே சற்று வியப்பு வரும். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் ஊரில் உள்ள கண்மாயில் எல்லாரும் நீச்சல் அடிப்பதைப் பல நாள்கள் பார்த்து, என்றாவது ஒருநாள் நானும் நீச்சல் அடிக்க வேண்டும் எனும் தூண்டுதல் மட்டுமே இருந்தது. அந்தத் தூண்டுதல் ஒருநாள் செயலாக மாறியது. ஆம், ஒரு கரையில் இருந்து மற்றொரு கரையை அடைய வேண்டும். இதுதானே நீச்சல்! very simple! குதி என்று குதித்து விட்டேன். அதன் பிறகு உயிர் பயம் வந்து விட்டது. எப்பாடுபட்டாவது அடுத்த கரையை அடைய வேண்டும் எனும் வேகத்தில், என்னையறியாமல் கால் மற்றும் கைகளை முன்னும் பின்னும் உதைக்க ஆரம்பித்து, பாதி தூரம் கடந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் மூச்சுத் திணற ஆரம்பித்து நீரில் மூழ்க ஆரம்பித்தேன். கண்மாயில் குளித்த பெரியவர்கள் என் நிலை கண்டு காப்பாற்றி கரையில் விட்டனர். அதன்பிறகு. ‘மொளச்சு மூணு எல விடல, நீச்சல் கேக்குதா இதுக்கு?’ என்று தர்ம அடி பல விழுந்தது. அதன் பிறகு அந்தக் கண்மாய் பக்கம் ஒரு வாரம் செல்ல அனுமதி இல்லை. ஆனால், நான் முயற்சியை விடவில்லை.

ஒரு வாரம் கழித்து மீண்டும் தொடங்கினேன். வெற்றி கண்டேன். அந்த நாள் ஏதோ ஒன்றைச் சாதித்து வெற்றி கண்ட மனிதனாக உணர்ந்தேன். அதன் பிறகு, அடுத்த அடுத்த நிலைகளான பல்டி அடிப்பது, முங்குவது, மூச்சுப் பிடித்து தண்ணீருக்குள் ஐந்து நிமிடமாவது இருப்பது... இப்படிப் பல வித்தைகளைக் கற்றுக்கொண்டேன். என் தன்னம்பிக்கை அதிகரிக்க இது ஒரு முக்கியக் காரணம். இங்குப் படத்தில் பார்ப்பது கூட, வேம்பார் கடலில் நான் அடிக்கும் நீர் பாய்ச்சல்தான். நீச்சல் எனக்கு முதலில் பயத்தைக் குறைத்து, நம்பிக்கையைத் தந்தது. மனத்திற்குள் உற்சாகத்தைக் கொடுத்தது. இப்படிப் பலவாறு சொல்லிக்கொண்டே போகலாம். ஆதலால், நீச்சல் கற்கவில்லை என்றால் இன்றே அந்தக் கலையைக் கற்க முற்படுங்கள். அது தரும் வாழ்வியல் பாடம் எல்லாருக்கும், எல்லா நிலைக்கும் எப்போதும் பொருந்திப் போகும்.

நீச்சல் கற்றால் கரையேற மனம் வராது.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment