No icon

இறைவன் எனக்குக் கொடுத்த வாய்ப்பு!

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவர் அருள்முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்களுடனான சிறப்பு நேர்காணல்...

தந்தையே! வணக்கம். ஓர் அருள்பணியாளராகிய தாங்கள் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். ‘நம் வாழ்வு வார இதழ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் தங்களைப் பற்றி  ஓர் அறிமுகம் தாருங்களேன்.

“நான் சிவகங்கை மாவட்டம், தவசக்குடி எனும் கிராமத்தில் 1965 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 -ஆம் நாள் ஓர் எளிய இந்து குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா பெயர் சொக்கலிங்கம், என் அம்மா பெயர் மாரியாத்தா. எனக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணன், இரண்டு தங்கை இருக்காங்க. எங்க குடும்பம் ஓர் ஆச்சாரமான இந்து குடும்பம். எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர் நாராயணன். எங்க அப்பா இந்து அமைப்பில் ரொம்ப முக்கியமான ஒரு நபர்; பல இந்து அமைப்புகளோடு எப்போதும் தொடர்பில் இருப்பவர்.

‘புலிக்கண்மாய்’ என்று சொல்லக்கூடிய ஒரு கிராமத்தில் உள்ள R.C. தொடக்கப் பள்ளியில் பள்ளிப் படிப்பைத் துவங்கினேன். அப்போதுதான் ‘நற்கருணை வீரன்’ என்று சொல்லக்கூடிய பத்திரிகையை வாங்கிப் படிப்பேன். வாசிப்பதில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு. ஒரு பொட்டுக் கடலை மடிச்ச பேப்பரில் கூட என்ன  எழுதியுள்ளது என்று விரும்பிப் படிப்பேன். ‘நற்கருணை வீரன்’ என்ற பத்திரிகையைப் படிக்கும்போது, ‘இயேசு யார்? அவர் செய்த புதுமைகள் என்னென்ன?’ என்பதனைத்தையும் படித்து அறிந்துகொண்டேன். அப்போதே கிறிஸ்தவனாக மாறணும் என்ற ஆசை எனக்குள் வந்திருக்கும் என நினைக்கிறேன். அதுதான் எனக்கு மிகவும்  தூண்டுதலாக இருந்தது. வீட்டுல வந்து சொன்னேன். யாரும் ஏற்றுக்கொள்ளல. நான் 14 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஆனா எங்க அம்மாதான் ‘எங்க போனாலும் நல்லா இருப்ப தம்பி’ என்று சொன்னாங்க.

‘You are my Beloved Son’ என்று தந்தை இயேசுவைப் பார்த்துச் சொன்னதுபோல, அன்று எங்க அம்மா சொன்ன ஆசிர்வாதம்தான்... நான் இன்றைக்கும் நல்லா இருக்கிறேன். எல்லாருக்கும் டாக்டராக ஆகணும், விஞ்ஞானி ஆகணும் என்ற ஆசை இருக்கும். ஆனா, எனக்குக் கிறிஸ்தவனாக மாறணும் என்ற ஒரே ஆசைதான். இந்தக் காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

36 வருசமாக யாரோடும் தொடர்பு இல்ல. எங்க அப்பா, அம்மா இறந்த செய்திகூட சொல்லல. எந்த அடக்க நிகழ்வுகளுக்கும் நான் போகல. என் உறவுக்காரர்கள் திருமண நிகழ்வு எதிலும் பங்கெடுத்தது கிடையாது. இப்போ இந்த ஆணையத் தலைவர் பொறுப்பு கிடைத்தபோது என் சொந்தக்காரங்க ‘கால்’ பண்ணி வாழ்த்து சொன்னார்கள்.… இதையும் கடவுளுடைய அழைப்பாகத்தான் நான் பார்க்கிறேன்.”

தாங்கள் இயேசு சபை அருள்பணியாளரானது எப்படி?

“நான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்ததுக்கு, முக்கியமான இரண்டு நபர்களைச் சொல்ல வேண்டும். ஒன்று, சிவகங்கை மறைமாவட்ட அருள்பணியாளர் இராஜசேகரன் அவர்கள். மற்றொருவர் சேசுசபை அருள்பணியாளர் I. அருள் அவர்கள்.

நான் தேவகோட்டை ஜான் பிரிட்டோ பள்ளியில் படிக்கும்போது, இராம்நகர் - தூய வளனார் விடுதியில் அருள்பணியாளர் இராஜசேகரன் இயக்குநராக இருந்தார். அவர்தான் என்னை உருவாக்கினார். அவர்தான் என்னைப் பாதுகாத்தார். நான் சின்ன வயசுலே நல்ல பாடுவேன், எழுதுவேன், ஆடுவேன், படிப்பேன், பேசுவேன். பல திறமைகள் எனக்குள் இருந்தன. நான் தூய வளனார் கல்லூரி, திருச்சியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் அவர் எனக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். என் திறமையைப் பார்த்த அவர்தான் ‘குருவாகப் போ’ என்ற விதையைத் தூவியவர்.

நான் முதலில் மறைமாவட்டக் குருவாகத்தான் போக விரும்பினேன். அப்போதுதான் அருள்பணியாளர் I. அருள், இயேசு சபை இறையழைத்தல் இயக்குநராக இருந்தார். அவர்தான் என்னை இயேசு சபைக்குள்ளாகக் கொண்டு வந்தார். 1985 -இல் இயேசு சபையில் சேர்ந்தேன். 1997, நவம்பர் 30 -ஆம் நாள் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டேன். 2006, ஆகஸ்ட் 15-ஆம் நாள் எனது இறுதி வார்த்தைப்பாட்டை ஏற்றுக்கொண்டேன்.”

இவ்வளவு விரிவாக உங்களைப் பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி. உங்களுடைய கல்விப் பயண அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்.

“ஐக்கியப் பேரரசின் (United Kingdom) ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் (Anthropology) முனைவர் பட்டம் பெற்றேன்.  சுமார் 6000 பேர் படிக்கின்ற பல்கலைக்கழகத்தில் உலக  அளவில் இரண்டாம் இடம் வந்தேன். கல்வி ஊக்கத் தொகையில்தான் முழுவதும் படித்தேன். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான தலைப்பு - ‘பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிர்வாகத்  திறமை’ (Conflict Management and Identity Construction). ‘Why we fight?’ - இதுதான் என்னுடைய ஆய்வுக் கட்டுரையில் ஒரு பகுதி. காரணம், Attachment என்பதுதான் என்னுடைய ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தேன்.

அடுத்து ஜெனிவாவில் ‘ஸ்விஸ்’ நிர்வாக மேலாண்மைப் பள்ளியில் (SSBM – Swiss School of Business Management) முனைவர் பட்டமும் பெற்றேன். இன்றைக்கு  EASA அதாவது - European Association of Social Anthropologists மற்றும் Anthropological Society of Oxford அமைப்புகளின் உறுப்பினராக இருக்கிறேன். தற்போது சென்னை, இலயோலா கல்லூரி நிர்வாக மேலாண்மை இயக்குநராக இருந்து வருகிறேன். நுகர்வோர் நடத்தை  (Consumer Behaviour), தலைமைத்துவம் (Leadership)  சந்தைப்படுத்துதலின் யுக்தி மற்றும் மேலாண்மைத் தத்துவம் (Strategic and Marketing Management and Philosophy), கலாச்சாரப் பரிமாற்ற மேலாண்மை (Cross-cultural Management), மனிதவள மேலாண்மை (Human Resources Management) போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் பேராசிரியராக இருக்கிறேன்.

சென்னை இலயோலா வணிக மேலாண்மைக் கல்லூரி (LIBA), கோவா நிர்வாக மேலாண்மைக் கல்லூரி (GIM), திருச்சி புனித ஜோசப் வணிக மேலாண்மைக் கல்லூரி (JIM), பாளையங்கோட்டை சேவியர் வணிக மேலாண்மைக் கல்லூரி (XIM) மற்றும் பல முன்னணி கல்வி நிறுவனங்களில் தலைமைப் பதவியில் இருந்திருக்கிறேன். தெற்கு ஆசியாவின் இயேசு சபை உயர் கல்வி அமைப்பின் தலைவராக (JHEASA - Jesuit Higher Education Association of South Asia) இருக்கிறேன்.

ஆங்கிலத்தில் New Buyology - Uncovering Cultural Codes of Consumer Behaviour (2024), Business Moves: Eight Energies of Leadership (2021), Making of Entrepreneurs: Perspectives, Methods, Models and Processes (2020), Constructing Dalit Identity (2007), Inter-culturation of Religion (2007), Rustic Entrepreneurship (2019) ஆகிய நூல்களையும், தமிழில் ‘திசையும் விசையும்’ (2000), ‘நீ வெல்வாய்’ (2009), ‘தமிழ் பண்பாடு சாதியப் பண்பாடா?’ (2008) போன்ற தமிழ் நூல்களையும் எழுதி இருக்கிறேன். அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, பெரு, இலங்கை, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கற்பிக்கவும், ஆய்வு செய்யவும், கருத்தரங்குகளில் பங்கேற்கவும் பயணம் செய்கிறேன்.”

அன்பு அருள்தந்தை அவர்களே, இவ்வளவு பன்முகத்திறன் கொண்ட நீங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைமைப் பொறுப்பேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாணையத்தில் உங்கள் முன்னோடிகள் பற்றிக் கூறுங்களேன்!

“சிறுபான்மை நல ஆணையம் என்பது ஒரு சட்டப்பூர்வமான ஆணையம். இந்த ஆணையம் நம் மாநிலத்தில் இருக்கிற சமய வழிச் சிறுபான்மையினருக்காகவும், மொழிவழிச் சிறுபான்மையினருக்காகவும் செயல்படுகிறது. சமய வழிச் சிறுபான்மையினர் என்பவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சைனர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் போன்றோர்  ஆவர். மொழி வழிச் சிறுபான்மையினர்  என்றால் நம் மாநிலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுகிறவர்கள் சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது, 32-க்கும் மேலான சிறுபான்மை இனக் குழுக்கள் இருக்கின்றன. அனைத்துக்கும் தலைவராக நான் இருக்கிறேன். 

சமூக, சமய, மொழி, கலாச்சார, அரசியல் ரீதியாக சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மக்களுக்குப் பல உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், சலுகைகளையும், திட்டங்களையும் அரசு வழங்குகிறது. இவை முறையாக இவர்களைச் சென்றடைகிறதா? என ஆய்வு செய்வதும், இதில் இருக்கும் குறைபாடுகளை அரசின் கவனத்திற்குக்  கொண்டு செல்வதும், அதற்கான தீர்வைக் காணவும் இந்த ஆணையம் அரசுக்கு உதவியாக இருக்கிறது.

இந்த ஆணையம் என்பது ஓர் அரசியல் ஆணையம் அல்ல; அல்லது  ஓர் ஆன்மிக ஆணையமும் அல்ல. இது மக்களுக்குப் பணிபுரிவதற்கான பொது நல ஆணையம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஆணையம். விளிம்பு நிலையில் இருப்பவர்களின் நலன்களுக்காக உழைக்கும் ஆணையம்.

இந்த ஆணையத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், நான்  அண்மையில் பார்த்து வியந்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்தான். மிகச்சிறந்த ஆளுமை, பழுத்த அரசியல்வாதி, நேர்மையான அரசியல் நாகரிகத்தையும் அறத்தையும் கற்றுத்தேர்ந்த மனிதர். மிகச்சிறந்த அனுபவமிக்க தலைவர். அவருடைய செயல்பாடுகள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை. அவர் பங்குபெறும் நிகழ்ச்சிகளெல்லாம் அற்புதமானவை. அவருடைய பணிகள் மிகக் கூர்மையானவையாக இருக்கும். இந்தப் பணிக்கான என்னுடைய மிகப்பெரிய inspiration அவர்தான்.”

உங்களது சிறுபான்மையினர் ஆணைய நியமனம் குறித்து உங்கள் மனநிலை என்ன?

“இந்த ஆணையத் தலைவராக என்னைத் தெரிவு செய்தது முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர்தான்.  இந்தப் பொறுப்பை என்னிடம் தரும்போது தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் என்மீது கொண்ட நம்பிக்கையைத்தான் எண்ணிப் பார்க்கிறேன். ஒரு மாநிலத்தில் சிறுபான்மையின மக்கள் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் இருந்தால் மட்டுமே அந்த அரசு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து செயல்படுகிறார் நமது முதல்வர் அவர்கள்.

இன்றைய சூழலில் நிர்வாகத் திறமையும் தலைமைத்துவமும், சமூக நீதியும் மக்கள்மேல் அக்கறை கொண்டதும் எந்த ஓர் அரசியல் சாயமும் இல்லாத ஒரு நபராக முதல்வர் என்னை நியமனம் செய்ததாக நான் நினைக்கிறேன். அதாவது, கல்வித்துறையில் முழுமையாக ஈடுபட்டுள்ள ஒருவர், பல ஆய்வுகளை மேற்கொண்ட ஒருவர், ஓர் அருள்பணியாளர் என்ற முறையில் எந்தவிதப் பேதமுமின்றி நன்றாகப் பணி செய்ய முடியும் போன்ற சிந்தனை என்னை நியமனம் செய்ய உந்துதலாக இருந்திருக்கும் என நான் எண்ணிப் பார்க்கிறேன்.

முதல்வர் அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது, சிறுபான்மையின மக்களுக்கு அரசின் சலுகைகளும் திட்டங்களும் சரியான விதத்தில் போய் சேர்ந்துள்ளனவா? சேரவில்லை என்றால், என்ன தடைகள் இருக்கின்றன? எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்துச் செய்யலாம்? சிறுபான்மை  இன மக்கள் உண்மையிலே சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? அதற்கான தீர்வுகள் என்னென்ன? என்பதை ஆய்வின் அடிப்படையில் அரசின் பார்வைக்கு நான் கொண்டுபோக வேண்டும் என்பவை அவர் என்னிடம் எதிர்பார்ப்பதாக இருக்கிறது. என்னுடைய கல்வி அனுபவம், ஆராய்ச்சிகள் வழியாக அரசுக்குச் சரியான ஆலோசனைகளை என்னால் வழங்க முடியும் என நம்புகிறேன்.”

ஓர் இயேசு சபைக் குருவாக நீங்கள் மேற்கொண்ட கல்விப் பணி மற்றும் சமூகப் பணிகளை இந்த ஆணையம் வழியாக எப்படி இன்னும் விரிவுபடுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்?

“எங்கள் இயேசு சபையில் 12 ஆணையங்கள் இருக்கின்றன. கல்வி, திருமணம், சூழலியல், ஆன்மிகம், சமூகம் மற்றும் பல. இந்த இயேசு சபை அனுபவங்கள் எல்லாம் இந்தச் சிறுபான்மையின ஆணையப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மிகுந்த உதவியாக அமையும் என நான் நினைக்கிறேன். ஏற்கெனவே LIBA-வில் சிறுபான்மை நலப் பணிகளைக் கல்வி கொடுப்பதன் வழியாகச் செய்துகொண்டு வருகிறேன். LIBA படிக்க வசதியில்லாத தலித் மாணவர்கள் இருந்தால், படிப்புச் செலவு முழுவதும் இலவசமாகக்  கொடுக்கிறது. எழுபது இலட்சம் வரை படிப்புச் செலவு இலவசம். அது போல பெற்றோரை இழந்த மாணவர்கள், கிராமங்களிலிருந்து வருபவர்கள், முதல் பட்டதாரி மாணவர்கள், புலம் பெயர்ந்தோர், ஏதிலியர்கள் போன்ற மாணவர்களுக்குப் படிப்பும் வேலையும் LIBA கொடுத்துக்கொண்டு இருக்கிறது. திருநங்கைகளுக்கான ‘Mini MBA’ பட்டயச் சான்றிதழ் LIBA கொடுக்கிறது. கடந்த ஆண்டு 32 பேர் படித்தார்கள். தற்போது 15 பேர் மெட்ரோவில் வேலை பார்க்கிறார்கள். இந்த ஆண்டு 36 பேர் படித்துச் சான்றிதழ் பெறத் தகுதியாக இருக்கிறார்கள். 

இயேசு சபையில் ஐந்து பணித்தெரிவுகள் இருக்கின்றன: 1. விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு, 2. சூழலியல் பாதுகாப்பு, 3. மதச்சார்பற்ற சனநாயகக் கொள்கைகளைப் பரப்புவது, 4. சிதறி இருக்கின்ற இளைஞர்களை ஒருங்கிணைப்பது, 5. இஞ்ஞாசியார் ஆன்மிகத்தில் வேரூன்றி இருப்பது. இவை என்னுடைய பணித் தெரிவுகளாக இருக்கின்றன.

இயேசு சபையினர் விளிம்புநிலை மக்களுக்குத்தான் பணி செய்வார்கள். இந்த ஆணையம் வழியாக இந்தப் பணியை விரிவாக்கம் செய்து 38 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல இறைவன் எனக்குக் கொடுத்த  வாய்ப்பாகப் பார்க்கிறேன். இப்போது எனக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறுபான்மை இன ஆணையப்பணி என்னுடைய இயேசு சபைப் பணியின் நீட்சியாகத்தான் நான் பார்க்கிறேன்.”

‘நம் வாழ்வு வாசகர்களுக்கு உங்கள் செய்தி...

“கிறிஸ்தவச் சிறுபான்மையின மக்களின் ஒரே வார இதழான ‘நம் வாழ்வுக்கு’ நான் சொல்ல விரும்புவது... ‘நம் வாழ்வு’ இதழ் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்ற அளவுக்கு மிக உயர்ந்துள்ளது. இது சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கைக் குரலாக ஒலிக்கின்றது.

இந்த இதழின் வடிவமைப்பு அண்மைக் காலங்களில் மிகவும் நன்றாக இருக்கிறது. அற்புதமான கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ‘நம் வாழ்வு’ இதழை நான் விரும்பி வாசிப்பேன். அருள்முனைவர் இராஜசேகரனுக்கு உண்மையிலேயே மிகுந்த பாராட்டுகள். சிறுபான்மை  இன மக்களுக்கான அரசு திட்டங்கள் நம் மக்களுக்கே இன்னும் தெரியாமல் இருக்கிறது. பல அரசு திட்டங்களை ‘நம் வாழ்வு’ இதழ் வழியாக நம் மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். சிறுபான்மை இன மக்களுக்கான உரிமைகள், அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.”

தந்தையே! உங்கள் பணி சிறக்க ‘நம் வாழ்வு வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை, திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதில் ‘நம் வாழ்வு தங்களுக்குத் துணையிருக்கும் என உறுதியளிக்கின்றோம்! மிக்க நன்றி!

Comment