No icon

ஒவ்வோர் இளைஞரும் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியமான கட்டுரை

ஒன்றிய அரசின் விலாங்குமுகம்

விலாங்கு மீனுக்கு வால் இல்லை. இருபுறமும் தலைகள். ஒரு தலை பாம்பு, மறு தலை மீன். அது பாம்பிடம் பாம்புத் தலையைக் காட்டும். மீனிடம், மீன் தலையைக் காட்டி கள்ள உறவாடும். இரு புறமும், இணக்கம் காட்டும். தமக்கு விருப்பமில்லாததை ஆதரிப்பதாக, பொய் முகம் காட்டும்.

ஒன்றிய அரசு தன் தாய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கற்ற பாலபாடத்தை இன்னும் மறக்கவில்லை. சமூக நீதியின் ஆணிவேரான இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து கபட நாடகம் நடத்துகிறது. நீதிமன்றம், குறுக்கு வழிகள் எனப் புதிய மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கிறது. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வழி தேடுகிறது.

இந்தியாவில் 50 முதல் 60 சதவிகித இதர பிற்படுத்தப்பட்ட (.பி.சி.) மக்கள் வாழ்கிறார்கள். ஒன்றிய அளவில் .பி.சி.க்கு 27 சதவிகித ஒதுக்கீடும், எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவிகித ஒதுக்கீடும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடும், .டபிள்.யூ. ஒதுக்கீடு 10 சதவிகிதமும் உள்ளன. பல சாதிக் குழுக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்கள் உரிமைகளைப் பெற உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டுகிறார்கள். 50 சதவிகித ஒதுக்கீட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு தரக்கூடாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது.

கர்நாடகம் 70 சதவிகிதமும், ஆந்திரா 55 சதவிகிதமும், தெலுங்கானா 62 சதவிகிதமும் இட ஒதுக்கீடு தர முயற்சிக்கின்றன. மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஒதுக்கீட்டு அளவைத் தங்கள் மாநிலங்களில் உயர்த்த முயல்கின்றன. இயலவில்லை. நீதிமன்றம் இட ஒதுக்கீடு அளிக்கக் கேட்கும் தரவுகள், சாதிவாரிக் கணக்கெடுப்பு, பொருளாதார, சமூக நிலை குறித்தத் தரவுகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மட்டுமே தெரிய வரும். 2021 -இல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றிய அரசால் இன்னும் எடுக்கப்படவில்லை. 2024 -ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் களத்தில்இந்தியாகூட்டணிக் கட்சிகள் சாதிவாரிக்  கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்ச வரம்பு நீக்கம் என முழக்கங்களை முன்வைத்தது. காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையிலும் இதை முன்நிறுத்தியது.

அரசியல் விமர்சகர்கள் இந்துத்துவாவை முன்னிறுத்திய பா...வின் மந்திர் அரசியலுக்கும், இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தியஇந்தியாகூட்டணியின் சமூகநீதி பேசும் மண்டல் அரசியலுக்குமான சித்தாந்த ரீதியான யுத்தம் இது என்றார்கள். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சமூகநீதி அரசியலுக்கு ஆதரவாக இராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேசிய தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு, தேர்தல் பரப்புரைகளுக்குப் பெரும் ஆதரவு இருந்தது. இலட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர். அது வாக்குப் பதிவிலும் எதிரொலித்ததுபா...வை இழுபறி அரசாக முடக்கியது. பலரும் வட இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்புத் தேடி தமிழ்நாடு வந்ததால் பெற்ற சமூகநீதி விழிப்புணர்வு என வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர்.

சமூகநீதியின் முதல் மூலக்கூறான இடஒதுக்கீட்டை இரு வேறு நிகழ்வுகளால் தகர்க்க நினைத்த பா...வின் நரித்தந்திரம் அடையாளம் காணப்பட்டதே இக்கட்டுரைக்கான கருப்பொருள். ஆகஸ்டு மாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இடஒதுக்கீடு வழக்கு ஒன்றில்சப்கேட்டகரைசேஷன்என்ற உள் ஒதுக்கீட்டு முறைக்கான ஆதரவாகவும், எஸ்.சி. பிரிவுகளில் முன்னேறிய சாதிகளை அடையாளங்கண்டு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில்  வாய்ப்புப் பெறாத பின்தங்கிய சாதிகளைப் பிரித்து, அதற்கேற்ப எஸ்.சி. பட்டியலைப்  பிரித்துக் கூறுபடுத்த வேண்டும் என்றசப்கேட்டகரைசேஷன்முறைக்குத் தீர்ப்பு வழங்கியது. அதாவது, விளங்கச் சொன்னால் உள் ஒதுக்கீடு. ஒன்றிய அரசு இம்முடிவை ஆதரிக்கிறது. இது எஸ்.சி. பிரிவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இது மக்கள் தொகையில் 35 கோடி உள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரிடம் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கும்.

ஒன்றிய அரசு டெல்லி அரசின் அதிகாரம் குறித்த வழக்கு, தேர்தல் ஆணையர் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை அவசரச் சட்டம் வழி இரத்து செய்ததுபோல இத்தீர்ப்பையும் இரத்து செய்ய வேண்டும் எனக் குரல் எழுகிறது. ஒன்றிய அரசு கிரிமிலேயர் முறை, எஸ்.சிமற்றும் எஸ்.டி.க்குப் பொருந்தாது எனச் சொல்லிவிட்டு சப்கேட்டகரைசேஷனை ஆதரிப்பது கிரிமிலேயரை ஆதரிப்பது போன்றதுதான் எனக் கண்டனக் குரல்கள் எழுகின்றன. அரசு கள்ள மௌனம் காப்பதே தற்போதைய நிலை. கூடவே  ஒன்றிய அரசு பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற மறுக்கிறது. ‘லேட்ரல் என்டரிஎனும் பக்கவாட்டு நுழைவு வழியாகப் பழங்குடியினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை, பதவி உயர்வைப் புறந்தள்ளுகிறது.

ஒன்றிய அரசின் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. ஒரு விளம்பரம் வெளியிடுகிறது. இதில் 24 அமைச்சகங்களில் 45  அதிகாரிகளைப் பணியமர்த்துவது குறித்த விண்ணப்பங்களை வரவேற்பதே அதன் உள்ளடக்கம். இந்தலேட்ரல் என்ட்ரிஎனும் பக்கவாட்டு நுழைவில் தனியார்துறை, பொதுத்துறை, கல்வித்துறை நிபுணர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு, பாராளுமன்றத்தில் பெரும் விவாதமாகி, குறிப்பிட்ட யு.பி.எஸ்.சி. விளம்பரம் இரத்து செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் கூட்டணிக் கட்சிகளும், ‘இந்தியாகூட்டணிக் கட்சிகளும்  விழிப்புடன் செயல்படுவது ஆளும் அரசிற்குப் பின்னடைவாக அமைகிறது.

இராகுல் காந்தி ஒன்றிய அரசின்  அனைத்து அமைச்சகப் பணியில் செயலாளர்களாக உள்ள 90 பேரில் மூன்று பேர் மட்டுமே  இதர பிற்படுத்தப்பட்டோர் என ஆளும் அரசை நோக்கி நேருக்கு நேர் குற்றச்சாட்டு வைத்தார். மேலும், ஒரு படி சென்று இந்த மூன்று பேரும் ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் 5 சதவிகிதத் தொகையை நிர்வகிக்கிறார்கள் என்றார். இதுவா சமூக நீதி? எனக் கிடுக்கிப் பிடி போட்டார். நீங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு தாருங்கள். அதுவே தீர்வு என்றார். 2018 முதல் உயர் அதிகாரிகளுக்கான  63 நேரடி நியமனங்களில் 35  பேர் தனியார் துறையைச் சார்ந்தவர்கள் என்கிறது புள்ளி விவரம்.

இந்திய அதிகார ஆட்சி அமைப்பே, அரசு உயர் அதிகாரிகள் முதல் கீழ் மட்டம் வரை ஆர்.எஸ்.எஸ். மயமாகி விட்டது என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி  கடந்த  காலங்களில் குற்றம் சாட்டினார். அவர் தற்போது ஒன்றிய அமைச்சர். இடஒதுக்கீட்டுக் கொள்கை முடிவை ஆதரிக்கும் நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தகுந்த நேரத்தில்செக்வைப்பார்கள் என்பதும் ஒரு சிறு ஆறுதலே.

அரசியலமைப்புச் சட்டத்தையும், இடஒதுக்கீடு முறையையும் எப்பாடுபட்டாவது பாதுகாப்போம். பா...வின் லேட்ரல் என்ட்ரி போன்ற சதிகளை முறியடிப்போம். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், 50 சதவிகித இடஒதுக்கீடு வரம்பைத் தகர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்என்று இந்திய மக்களின் குரலாக இராகுல் காந்தி  நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

சமூக நீதி என்பதே இந்திய மக்களின் வாழ்வுரிமை. இந்தியக் குடிமைச் சமூகம் சமூக நீதி பெற தொடர்ந்து மத, மொழி, இன, சாதி களைந்து ஒன்றிணைவோம். போராடுவோம். சமூக நீதியை வென்றெடுப்போம்.

(பின்குறிப்பு: தமிழ்நாடு சமூக நீதி வரலாறு, இடஒதுக்கீடு வரலாறு அடுத்த கட்டுரையாக வெளிவரும். அரசியல் விழிப்புணர்வு பெற அக்கட்டுரையையும் அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டும் என்பதே எம் தாழ்மையான வேண்டுகோள்.)

Comment