வாழ்க்கையைக் கொண்டாடு - 59
காண்பதனைத்தும் காதலாக...
கடந்த இருவாரத் தொடர்களைப் படித்துவிட்டு HR நண்பர் ஒருவர், ‘உங்கள் கட்டுரைகள் பலவித எண்ணங்களை எனக்குள் விதைக்கின்றன; ஆனால், சில கருத்துகளை ஏற்க முடியவில்லை. கொஞ்சம் உதைக்கிறது’ என்றார். ‘எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், நான் ஒன்றும் கருத்து முரடன் அல்லன்’ என்றேன்.
‘பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையா? பொருளாதாரம் மட்டுமே போதுமா? ஒரே வேலையில் தொடர்ந்து இருப்பது தவறா? அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழட்டும். ஏன் இந்த ஓவர் அட்வைஸ் எல்லாம்...?’ என்று சகட்டு மேனிக்குக் கேள்விகளை அள்ளித் தெளித்தார்.
‘வழிகாட்டும் பலகை செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமே காண்பிக்கும்; செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் கண்டடைய வேண்டும். இதில் யாரும், யாரையும் குறை சொல்லத் தேவையே இல்லை’ என்றேன். ‘எல்லாம் சரிதான், வேலையைக் காதலித்தால் மட்டும்தான் முன்னுக்கு வரமுடியுமா? ஏனோதானோ என வேலை பார்த்த எத்தனையோ பேர் சும்மா ‘சர்’ருன்னு மேல வந்துட்டாங்க; இதுல போய் நியாயம், தர்மம் என இப்பவும் பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கே ஆகாது. கிடைச்சத புடுச்சு, நெனைச்சத நோக்கி போய்க்கிட்டே இருக்கணும்... புரியுதா?’ என அவர் எனக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்து விட்டார்.
‘உங்கள் கேள்வியை மதிக்கிறேன்’ என்றேன். ‘நானும் உங்கள் எழுத்தை மதிக்கிறேன்’ என்கிறார் அவர். இப்படியாக அந்த உரையாடல் முடிந்தது.
பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என இருந்தவர்கள் தானும் வாழாமல், சுற்றி இருப்பவர்களையும் வாழ வைக்காமல் உலகை விட்டுப் போனதுதான் மிச்சம். நம் வாழ்க்கையை அடுத்தடுத்த நகர்விற்குக் கொண்டு செல்ல பொருளாதாரம்தான் அடித்தளம். அதைச் சரியான வழியில் சேர்த்து, நாம் வாழ நினைக்கும் வாழ்க்கையை வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை. நாம் வாங்க நினைக்கும் பொருளுக்கு ஆதாரமாக இருப்பது பொருளாதாரம் தானே! அதைச் செவ்வனே மதிப்புறச் சம்பாதித்து, சிறப்புற வாழ்வதில் நமக்கு முழு உரிமை உண்டு. அதன்மூலம் முழு மகிழ்ச்சி காணலாம்.
வெவ்வேறு வேலைக்குத் தாவினால் தான் நம் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று ஒரு சிலர் கொள்கையாகவே வைத்திருப்பர். அதில் தவறொன்றும் இல்லை. அதற்கான உரிமை அவரவருக்கு உண்டு. நாம் வேலை பார்த்த நிறுவனத்திற்கும், மேற்கொண்ட வேலைக்கும் எவ்விதத் தொய்வும் இல்லாது நாம் முறையாகச் சரிசெய்து, பிறகு வேறு நிறுவனத்திற்குச் செல்வதில் அப்படி என்ன தவறு வந்துவிடப் போகிறது?
நீங்கள் இப்போது பேசுவதற்கும், இந்தத் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? தொடர்பு உண்டு! வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பலவிதம் என்றாலும், இந்தக் காதல் மட்டும் ஓர் அதிசய உணர்வு. அது எல்லாவற்றையும் மாற்றிப் போடும் வல்லமையும், மாற்றி அமைக்கும் ஆற்றலும் கொண்டது. ‘ஓ... அப்படியா!’ எனப் பொத்தாம் பொதுவாக அதிசயிக்க வேண்டாம்.
காதல் எனும் ஒற்றைச் சொல்லில் உலகமே அடங்கியுள்ளது. செய்துதான் பார்ப்போமென அனைத்தையும் செய்யத் துடிக்கும் பேரார்வம் கொண்டது. ‘சட்’டென்று தோன்றும் சலனமும், ‘பட்’டென்று பரவும் பரவசமும்தானே காதல்! அது முழுக்கக் காமம். காதல் அப்படி அல்ல; அது நின்று நிலைத்திடும் பேரன்பு!
காதல் என்பது ஒரு கொண்டாட்ட மனநிலை. குழந்தைத்தன்மையும், முதிர்தன்மையும் மையமிட்டு, நம் ஆர்வத்தை அசைக்க முடியாததாக்கும். அதற்கு அப்படி ஒரு பேராற்றல் உண்டு. பரபரவெனத் திரியும் நம் மனத்தை ஒருநிலைப்படுத்தி, நம்மைப் படுத்தி எடுக்கும் எண்ணங்களில் இருந்து நமக்கு விடுதலை தருவது காதல்தான்.
‘ஓ... புரிந்து விட்டது! ஒரு பெண்ணின் மீது தீராக் காதல் கொள்ள வேண்டும், அவ்வளவுதானே, இதோ இப்போதே கிளம்பி அதற்கான வேலையில் இறங்கி விடுகிறேன்’ என்று கிளம்ப வேண்டாம். நான் இங்கு சொல்ல வருவது எதிர்பாலினக் காதல் அல்ல; நாம் செய்யும் செயல் மீதும், பார்க்கும் வேலையின் மீதும் நாம் கொண்டிருக்கும் பேரார்வம். இதைத்தான் இங்கு நான் ‘காதல்’ என்று சொல்கிறேன்.
உள்ளம் பகிர்ந்து, உடல்கள் உரசி, உதடுகள் பதித்து, உச்சி முகர்ந்து உற்சாகம் அடையும் அந்தச் சுகம் என்பது காதலும் காமமும் கலந்தது. நான் சொல்ல வரும் இந்தக் காதல் என்பது தன்னை அறிந்து, எண்ணம் பகிர்ந்து, எல்லாம் புரிந்து, எதை அடைய வேண்டுமோ அதை நோக்கி வீறுநடை போடுவது.
ஹார்மோன் செய்யும் கலகம்தான் காதல் என்ற அறிவியல் புரிதல் நமக்கெல்லாம் உண்டு. காதல் என்பது உடற்பசி மற்றும் உள்ளப்பசி எனக் கொள்ளலாம். உடற்பசியில் காமம் நிறைந்திருக்கும். உள்ளப் பசியில் ஆர்வம் மிகுந்திருக்கும். காதலில் நாம் வசப்பட்டிருக்கும்போது காண்பவை அனைத்தும் இரசிப்பாய் அமையும். வேலையில் இலயித்திருக்கும் காதல் என்பது, அதை முழுதாய் நம்மை முடிக்கவைக்கும். ஒவ்வொன்றும் ஓரழகாய்த் தெரியும். மொத்தத்தில் எல்லாமே பேரழகாய்த் தெரியும்.
உணர்வுகளால் செதுக்கப்படுவதுதான் காதல். ஆதலால் அதிதீவிர உணர்வால் நாம் செய்யும் அனைத்துச் செயலையும் சாதனையாக்க முடியும்.
காதலுக்கு அடித்தளமே அணைத்துச் செல்வதுதான். அந்த அனைத்தையும் அணைத்துச் செல்லும் பண்பு அனைத்தையும் அற்புதமாக்கும்.
உடல்நிலையிலும், மனநிலையிலும் ஏற்படும் தீவிரமான மற்றும் ஆழமான ஈடுபாடுதான் காதல். ஈடுகொடுக்க இயலா இந்த ஈடுபாடுதான் பலரைப் பல்வேறு நிலைகளுக்கு உயர்த்தி உள்ளது. நம் சந்ததியைப் பெருக்கிக் கொள்வது காதலால்தான். சந்தையில் நம் மதிப்பை உயர்த்த வைப்பதும் காதல்தான்.
காதல் என்பது இன்பத்தை மட்டுமே அள்ளித் தரும் அமுதம் அல்ல; அது சோகத்தையும் சுகம் பெறவைக்கும் அதீத பலம் கொண்டது. ஒன்றை முழுதாய்ப் புரிதலிலும், ஈடுபாடாய் இருத்தலிலும், நேசிப்பவருக்காகக் கொஞ்சம் மாற்றமும், தடுமாற்றம் காணும்போது உத்வேகமும், தாங்குதலுக்குத் தோளும் தரும் அருமையான பயணம். இதை நாம் சரிவர அமைத்துக் கொள்ளும்போது காண்பதனைத்தும் காதல்தான்.
அன்பில் நிலைத்திருப்பது காதல்!
பண்பில் நிலைத்திருப்பது பெருங்காதல்!
தொடர்ந்து பயணிப்போம்....
Comment