No icon

​​​​​​​அணுக் கனிமச் சுரங்கத் திட்டம்

குமரி மண்ணைச் சூறையாடப் போகும் ஓர் அழிவுத் திட்டம்

அணு ஆயுத உற்பத்திக்கு 34 வகையான கனிமங்கள் தேவை. இந்த 34 வகை கனிமங்களில் மோனசைட், சிர்கான், இல்மனைட், ருட்டைல், சிலிமனைட், கார்னெட், லூகாக்ஸின் மிக முக்கியமானவைகள். இந்த ஏழு வகை கனிமங்களுக்காக கீழ்மிடாலம் முதல் கொல்லங்கோடு வரையிலான வருவாய் கிராமப் பகுதிகளில் 1144.0618 ஹெக்டேர் பரப்பளவில் அணுக் கனிமப் படிவுகளை அகழ்விப்பு செய்வதற்கு மத்திய அரசின் அணுசக்தித் துறை 13.08.2015  அன்று அணுக்கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் இசைவைக் கோரியது.

29-08-2017 அன்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு 15.04.2021 அன்று தனது இசைவைத்  தெரிவித்தது. 11.06.2021 அன்று மத்திய அரசு அமைச்சகம் .ஆர்..எல். நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்த அறிவிப்பாணையை வெளியிட்டது. 28.06.2022 அன்று சுரங்க குத்தகை வழங்குவதற்கான letter of indent-- தமிழ்நாடு அரசு .ஆர்..எல். நிறுவனத்திற்கு வழங்கியது.

28-12-2022 அன்று மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை அடிப்படைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மைக் குழுமத்தின் பரிந்துரையைப் பெற 08-03-2024 அன்று சமர்ப்பித்தது. தற்பொழுது கன்னியாகுமரி மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.

அணுக் கனிமப் படிவுகள் அகழ்விப்புத் திட்டம்

மொத்த பரப்பளவு 1144.0618 ஹெக்டேர்.

உற்பத்தி அளவு 59 மில்லியன் டன் (6 கோடி டன் கனிமங்கள்). 1.5 மில்லியன் டன் கனிமங்கள் (15 இலட்சம் டன் கனிமங்கள் ஓராண்டுக்கு).

திட்டத்தின் மதிப்பு 31.25 கோடி

அகழ்விப்பு செய்யக்கூடிய கிராமங்கள்

கீழ்மிடாலம் - 204.0652 ஹெக்டேர்

மிடாலம் பி- 202.9686 ஹெக்டேர்

இனயம் புத்தன்துறை- 137.0350 ஹெக்டேர்

ஏழுதேசம் - 41.1000 ஹெக்டேர்

ஏழுதேசம் பி- 82.9000 ஹெக்டேர்

ஏழுதேசம் சி- 275.8280 ஹெக்டேர்

கொல்லங்கோடு - 28. 3950 ஹெக்டேர்

கொல்லங்கோடு பி- 171. 7700 ஹெக்டேர்

அகழ்விப்பு செய்யத்தக்க மொத்த கனிமப் படிமங்கள் அளவு 59.88 மில்லியன் டன் கனிமங்கள். ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் வீதம் 40 ஆண்டுகளுக்கு அகழ்விப்பு செய்யப் போகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு 5000 டன் கனிமங்கள் தோண்டி எடுப்பர்.

முதல் கட்ட அகழ்விப்புச் செய்ய 6 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை நிலத்தைத் தோண்டுவர். இரண்டாவது கட்ட அகழ்விப்புக்கு மறுபடியும் 9 மீட்டர் வரை தோண்டுவர். 30 அடி ஆழம் வரை நிலத்தைத் தோண்டி கனிமங்களை எடுப்பதற்கான திட்டம். முதல் 5 ஆண்டுக்கு 106.5 ஹெக்டேர் நிலத்தைத் தோண்டுவர். மொத்தப் பரப்பளவான 1144.0618 ஹெக்டேர் நிலத்தை இரண்டு பிரிவுகளாகப் (, பி) பிரித்துள்ளனர். இது கிள்ளியூர் தாலுகாவிற்குள் வருகிற திட்டம்.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்கெனவே தாது மணல் கொள்ளை நடைபெற்று வரும் சூழலில் (வைப்பாறு முதல் மணவாளக்குறிச்சி) இத்திட்டம் மிகப்பெரிய அழிவைக் கடற்கரை கிராமங்களில் ஏற்படுத்தும். திருநெல்வேலியில் 65 விழுக்காடு தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டு, கடற்கரை கிராமங்கள் சீரழிந்திருக்கின்றன. தூத்துக்குடியில் 20% மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியில் 20% தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இப்போது கீழ்மிடாலம் முதல் கொல்லங்கோடு வரை உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்திய அரிய மணல் ஆலை நிறுவனம் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படப்போகும் கிராமங்கள் ஏராளம். இது ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம். அரசே கடற்கரைகளிலும், உள்பகுதி தேரிகளிலும் கனிமங்களைத் தோண்டி மக்களுக்கான சவப்பெட்டிகளைத் தயாரிக்கப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளில் மணவாளக்குறிச்சியில் மட்டும் 2.1 மில்லியன் டன் மோனோசைட் கனிமங்களை நாம் இழந்திருக்கிறோம். இதன் மதிப்பு 12 ஆயிரத்து 672 இலட்சம் கோடி. 2006 -ஆம் ஆண்டு டாக்டர் லால்மோகன் ஆய்வின்படி, மணவாளக் குறிச்சியில் 31 பேரும், தோவாளையில் 12 பேரும், கூத்தன்குழியில் 42 பேரும் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளாகப் பிறந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் ஏற்படுகின்ற கதிரியக்கத்தின் விளைவுகள் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்குப் புற்றுநோயைக் கடத்தும் ஆற்றல் வாய்ந்தவை.

இத்திட்டம் அமையவிருக்கும் இடம் ஏற்கெனவே அதிக கதிரியக்கத்தன்மையுடைய பகுதிகளாகும். இந்த நிலையில், இந்தக் கதிரியக்கம் மிகுந்த கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால் இயல்பாக உள்ள கதிரியக்கத் தன்மையைக் காட்டிலும் 20% அதிகமான கதிரியக்கம் இருக்கும். கனிமங்களற்ற மணல் காற்றில் வெகு இயல்பாகவே கரைந்து அதிமான நுரையீரல் சம்பந்தமான நோய்களை வருவிக்கும். புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, மலட்டுத்தன்மை, தோல் நோய், ஆஸ்துமா, கருச் சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் வரும். தினந்தோறும் கடற்கரையிலேயே அமர்ந்தும், நடந்தும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.

30 அடி ஆழம் வரை நிலத்தைத் தோண்டும் போது நிலம் தன்னுடைய இயல்பான கெட்டித்தன்மையை இழந்து, சிறிய புவி அதிர்வு வந்தாலும் சரிந்து போகக்கூடிய தன்மை உருவாகும். பூமியின் நில அடுக்குகள் சிதைக்கப்படும். 1144 ஹெக்டேர் நிலம் கனிமங்களற்ற நிலமாக மாறி, வயநாடு போன்று பேரிடர்களைத் தாங்காமல், சுற்றியுள்ள அத்தனைப் பகுதிகளும் நிலத்திற்குள் புதைந்து போகும் அளவுக்கு ஆபத்து ஏற்படும். அதிக ஆழம் தோண்ட தோண்ட, நிலத்தடி நீரில் கடல்நீர் புகுந்து தண்ணீர் வளம் அழியும். கனிமங்கள் எடுக்கப்பட்ட பிறகு, அந்நிலத்தில் புதிதாகக் கொட்டப்படும் கனிமங்களற்ற மணல் நிலத்தடி நீரைச் சேமிக்கும் ஆற்றலை இழந்து விடும். கனிமங்களற்ற இம்மணல் துகள்கள் சீக்கிரமாகக் காற்றில் கலந்து, கரைந்து, மிகப்பெரிய காற்று மாசுபாட்டை உருவாக்கும்.

ஆய்வின்படி, 71 கிலோ மீட்டர் கடற்கரை நீளம் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில், 44 கிலோமீட்டர் கடற்கரை மிகுந்த கடல் அரிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் கடற்கரைகளைத் தோண்டி, கனிமங்கள் எடுக்கும்போது, கடல் அரிப்புக்கு அதிகம் ஆட்படும்.

.நா. அறிக்கையின்படி 1 சதுர கி.மீ.-க்கு 400 முதல் 600 பேர் வாழலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 சதுர கி.மீக்கு 1200 முதல் 1400 பேர் வரை நெருக்கமாக மக்கள் வாழ்கிறார்கள். அதிலும் 47 கடற்கரை கிராமங்களில் 1 சதுர கி.மீ.க்கு 2200 முதல் 2400 வரை மக்கள் நெருக்கமாக வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் வாழும் பகுதிகளில், இப்பூமியின் தாங்கும் திறனைவிட அதிகம் எடையைச் சுமத்தும்போது மிகப்பெரிய அழிவு ஏற்படும். ஒரு நாளைக்கு 374 டிப்பர் லாரிகள் தினந்தோறும் கனிமங்களை ஏற்றிக் கொண்டு, இக்குறுகிய சாலைகளில் செல்லும்போது, அதிக விபத்துகளும், நெருக்கடிகளும் ஏற்பட்டு, பள்ளிக் குழந்தைகளும், மக்களும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாவர்.

353.4876 கி.மீ. நீள கடற்கரை, கடலோர மேலாண்மை மண்டல 1(பி), 2,3-இன் கீழ் வருகிறது. எனவே, இப்பகுதியில் கடற்கரையைப் பாதிக்கக்கூடிய, சூற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய எந்தத் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது. மிக முக்கியமாக, கடல்வாழ் உயிரினங்களுக்கான கனிமங்கள் கிடைக்காமல் போகும். ஓட்டுடலிகளான நண்டு, சங்கு, சிப்பி இனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இக்கனிமங்கள் எடுக்கப்பட்ட பிறகு சிப்பி, சங்குத் தொழிலைச் செய்கின்றகுளியாழிகள்’  தங்களுடைய தொழிலை விட நேரிடும். கடல்வாழ் உயிரினங்களுக்கு வேண்டிய கனிமங்கள் கிடைக்கவில்லையென்றால், கால்சியம் பற்றாக்குறையால் அதிக உயிரினங்கள் அழிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். மீன் இனப்பெருக்கம் குறையும், கடலில் கதிர்வீச்சின் அளவு அதிகமாகி, அதைத் தாங்கும் அமைப்புப் பெறாத உயிரினங்கள் அழியும் நிலை உருவாகும். கரைக் கடல் மீன்வளங்கள் இன்றி வெறுமையாகக் காட்சியளிக்கும்கடற்கரைகளில் நீண்ட, அகன்ற கடற்கரைகளிலும், தேரிகளிலும் மட்டுமே முட்டைப்போட வரும் ஆமைகள் கடற்கரையின்றியும், கனிமங்களற்ற மணலில் முட்டையிடாமல், தன் இனப்பெருக்கத்தை நிறுத்திக்கொள்ளும்.

2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட கனிமச் சுரங்கம் மற்றும் வளர்ச்சி ஒழுங்குமுறைச் சட்டப்படி, அணுக்கனிமங்கள் பட்டியலிலிருந்து 6 வகை கனிமங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி, லித்தியம், பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டலம் மற்றும் சிர்கோனியம் எனும் ஆறு கனிமங்களைக் கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான கனிமங்களை அள்ளித் தோண்டி எடுப்பதிலும், தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும், வேவு பார்க்கும் நடவடிக்கைகளிலும் தனியார் நிறுவனங்கள் களமிறங்கும். கடற்கரை வளங்கள் முழுவதும் தனியார் நிறுவனங்கள் வசப்படும்.

CSPEP அறிக்கையின்படி, 2060 முதல் 2100-க்குள் கன்னியாகுமரியில் கடல் மட்டம் 74 சென்டி மீட்டர் வரை உயரும் எனக் கணக்கிடப்படுகிறது. கடல் மட்டம் உயரும்போது, எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு கட்டப்பட்ட அத்தனை கட்டுமானங்களும் (சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் துறைமுகங்களும், மணவாளக் குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம், விழிஞ்ஞம் துறைமுகம்) மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

குமரியில் கண்டறியப்படுகின்ற வளங்களை மையமாக வைத்தே இத்தனை கட்டுமானங்களும் கடற்கரையைச் சுற்றி நிறுவப்படுகின்றன. கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் (54 கி.மீ. களியாக்கவிளை முதல் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரி நெடுஞ்சாலை விரிவாக்கம்) மக்களின் விரைவுப் பயணத்திற்கு அல்ல; கனிமங்களைத் தடையின்றி வேகமாகக் கொண்டு செல்வதற்கே. பெருமுதலாளிகளின் வணிக வேட்டைக் காடாகவே குமரி வளங்கள் பார்க்கப்படுகின்றன. அதைத் தாரை வார்ப்பதை முதன்மை வேலையாகவே ஒன்றிய அரசு செய்கிறது.

நமது உடல் தாங்கும் அணுக்கதிர் வீச்சின் அளவு 0.01 மில்லி செர்வன்ட். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கதிர்வீச்சின் அளவு 1 முதல் 4 மில்லி செர்வன்ட் வரை. இன்னும் 40 ஆண்டுகளில் இது 1000 மடங்காக உயரும். குறுகிய ஆண்டுகளில் அதிகக் கதிர்வீச்சை வெளியிடக்கூடிய மாவட்டமாக இது மாறப்போகிறது. கதிர்வீச்சினால் குமரி மாவட்டம் முழுவதும் அழியும் நிலை உருவாகும். கூடங்குளத்திற்கு வேண்டிய அணுமூலப் பொருள்கள் தேவைக்காகவும் உடன்குடி அனல் மின்நிலையத்திற்கு வேண்டிய கனிமத் தேவைக்காகவும், வெறுமனே 40 விழுக்காடு செயல்படும் மணவாளக்குறிச்சி ஆலை விரிவாக்கத் தேவைக்காகவும், பல்வேறு நாடுகளின் ஏற்றுமதித் தேவைக்காகவும் ஒன்றிய அரசு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் குதிரை மொழியிலும், சாத்தான்குளத்திலும் 1500 கோடி வீதம் 2 மணல் கனிமங்கள் பிரிப்பாலைகளை முன்மொழிந்தும் இருக்கிறது.

ஒன்றிய அரசின் அணுக்கனிமப் படிவுகள் எடுப்பதற்கான அணுக்கனிமச் சுரங்கத் திட்டம் கன்னியாகுமரி மக்களைச் சவக்குழியில் புதைக்கும் திட்டம். பன்னாட்டு நிறுவன முதலாளிகளின் இலாப வேட்டைக்காக கன்னியாகுமரி மக்களைக் கதிர்வீச்சில் அழிக்கும் திட்டம். அணு ஆயுதத் தயாரிப்பிற்காகக் கடற்கரைகளை, சமவெளித் தேரிகளை, மணல் மேடுகளை, வயல்நிலங்களை, வளமிக்க வனப்பகுதிகளை அழித்து, மீனவர்களின் பண்பாட்டுத் தளங்களையும், கடலோடு கொண்டுள்ள பிணைப்பையும், சமவெளி மக்களின் நீர்தேக்கும் மணல்மேடுகளையும் தேரிகளையும் அறுக்கும் திட்டம்.

வளர்ச்சி என்ற போலி பெயரில் கன்னியாகுமரி மக்களை அடுத்தத் தலைமுறையினரைத் தகுதியற்ற சுற்றுச்சூழலில் வாழ வைப்பதற்கு நிர்ப்பந்தப்படுத்தும் திட்டம். இத்திட்டத்தை எதிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒன்றிய அரசின் மக்கள் விரோதத் திட்டத்தை முறியடிப்போம்.

Comment