No icon

நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் – 1975-2025

எதிரொலி

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து போற்றப்படுவாராக!  ‘நம் வாழ்வுகண்டேன். மிக மிக மகிழ்ந்தேன். இந்த நற்பணி நாளும் தொடர்ந்து முன்னேற செபிப்பேன். பம்பாய் செல்கிறேன். அங்குள்ள தமிழரிடம் இவ்விதழை அறிமுகம் செய்வேன்.

- தந்தை வென்ஸ்லாஸ் OFM Cap., தூத்துக்குடி (25.01.1976)

நம் வாழ்வுஎல்லாச் சமயத்தினரும் விரும்பி வாங்கிப் படிக்க வேண்டிய சிறப்புகள் அனைத்தும் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை யாவருக்கும் விருப்பம் தரும் பகுதிகள் கொண்டுள்ளது. படித்து முடித்துப் பழைய பேப்பர்காரனிடம் போடும் இதழாக இல்லை.

- வித்துவான், நெல்லை . கணபதி B.A.,

சென்னை - 15 (25.01.1976)

நம் வாழ்வுஎன்னும் நலந்தரும் ஏடு

ஒளிதனைச் சிந்திடும் ஒண்சுடர் போல

வழிகாட்டி யாய் நின்று வாழ்வில் - களிப்பூட்டும்

நம்வாழ்வு என்னும் நலந்தரும் ஏடுபோல்

இம்மண்ணி லுண்டோ இயம்பு!

புற்றீசல் போல புறப்பட்டு வீழ்ந்திடும்

வெற்றிதழ்கள் போலிதுவும் இல்லாமல் - கற்றவரும்

மற்றவரும் வாங்கி மகிழ்ந்து படித்திடும்

நற்றமிழ்நம் வாழ்வைநாடு!

கற்கண்டு போன்ற கவின்மிகு நல்பாக்கள்

சொற்சுவை மிக்க கதைகளுடன் - பொற்சரமாய்க்

காட்சி யளிக்கும் கனியமுதாய்த் தித்திக்கும்

மாட்சிநிறைநம் வாழ்வின் மாண்பு!

அம்புவி தன்னில் அருஞ்சுடராய்த் தோன்றியே

செம்மைப் படுத்தும் செழுந்தமிழ் - நம்வாழ்வு

நாளும் மலர்ந்து நறுமணம் வீசிட,

வாழும் இறையை வழுத்து.

செல்லு மிடமெல்லாம் செந்தமிழ்த் தேன்பாய்ச்சி

அல்லும் பகலும் அயராது - கொல்லும்

பகையிருளைப் போக்கிப் பலபுகழ் எய்த

வகையறிந்து கூறினேன் வாழ்த்து.

- ‘நாகை இ ஆசா’ (01.02.1976)

கவிஞர் கண்ணதாசன்

நம் வாழ்வுக்குஅளித்த

சிறப்புப் பேட்டி

திருவிவிலியத்தை எப்பொழுதாவது நீங்கள் வாசித்தது உண்டா?

! 19 வயதிலே புதுக்கோட்டையில் ஓர் ™hவுக்கு மத்தேயு, லூக்கா நற்செய்திகளை விற்பார்கள். அதில் எனக்கு யோவான் நற்செய்தி ஏறக்குறைய மனப்பாடம்.”

அப்படி, அதிலே என்ன உங்களுக்கு அவ்வளவு ஆர்வம்?

ஒன்றுமில்லை. மொழிபெயர்ப்பு நடைக்காக, நயத்திற்காக. உதாரணம், ‘நல்ல மேய்ப்பன்என்ற சொல் போல பலவற்றிற்காகப் படித்தேன்; அவ்வளவுதான்.”

மற்ற நூல்களுக்கும், அதற்கும் வித்தியாசம் இல்லையா?

வித்தியாசம் நிறைய உண்டு; அது கூறுவது புதுப் பொருளாகத்தான் இருக்கிறது; ஆனால், நான் மொழி நயத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

கிறிஸ்து இயேசுவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவரும் இந்த உலகிலே மற்றவர்களைப்போல, மதத்தை நிறுவிய ஒரு தலைவர்தாமே! அவரும் ஒரு தேவதூதர் தாமே!”

கிறிஸ்தவ சமயத்திற்கும், மற்ற மதங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

என்ன வித்தியாசம் என்கிறீர்கள்? கிறிஸ்தவ சமயம் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சமயமாக உள்ளது. அதற்கு ஒரு நல்ல அமைப்பு. சட்டத் திட்டங்கள் இருக்கின்றன. இந்து சமயத்திலே, அதுபோல காட்டுவதற்கு ஒன்றுமில்லை. ஆச்சாரங்களும், சடங்கு சம்பிரதாயங்களும்தாம் மிகுதி.”

கிறிஸ்தவ சமயத்தில் உங்களுக்குப் பிடித்தமான கருத்து எது?

எல்லாமே, கடவுளைப் பார்த்துப் பேசுவது போலவும், கடவுள் நம்மைப் பார்த்துப் பேசுவது போலவும் இருக்கிறது. அதிலே, சொல்லப்படாத நீதிகளேயில்லை.”

கிறிஸ்தவ நிறுவனங்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? மேலும் அவற்றிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

இலாப நோக்கமேயில்லாது நாட்டில் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் அவை. மனித நேயத்தோடு, அபிமானத்தோடு நடத்தப்படுபவை. அவற்றிலிருந்து நான் என்ன எதிர்பார்ப்பது? அந்த நிறுவனங்கள் கற்பிக்கும் ஒழுங்கும் கட்டுப்பாடும்தான் இந்த நாட்டை வாழ்விக்கும் என்றுதானே எல்லாரும் தங்கள் குழந்தைகளை அங்கே கல்வி கற்க அனுப்பி வைக்கின்றார்கள்.”

தமிழகக் கிறிஸ்தவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நம் நாட்டிலே கிறிஸ்தவ இனம் ஒருவில்லங்கம்இல்லாத சமுதாயம் - எந்தச் சிக்கலுக்கும் செல்வதில்லை.”

தமிழகக் கிறிஸ்தவ இனத்தின் தற்காலத் தலைவர்களாக நீங்கள் யாரை மதிக்கின்றீர்கள்?

டிமாண்டி!”

நம் வாழ்வுவாசகர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

நான் என்ன கூற இருக்கிறது? என்றைக்கும் விண்ணக வாழ்வையே நினைக்கும் கிறிஸ்தவர்கள் உலகம் சம்பந்தமான வாழ்விலும் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபடுகின்றவர்களுக்கு அன்பும், ஆதரவும் காட்டி, அவர்களைச் சமுதாயத்தின் உயர் மட்டத்திற்கு அனுப்பி ஒளிவீசச் செய்ய வேண்டும். இதுதான் அவர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம்.”

(கவிஞர் கண்ணதாசன்நம் வாழ்வுவார இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து - 22.02.1976,

நேர்காணல் : .சு. அடைக்கலசாமி)

குடந்தை, உதகை, வேலூரில் நடைபெற்றநம் வாழ்வுவெளியீட்டு விழாக்கள்

குடந்தை மறைமாவட்டம்

பெரம்பலூரில், கடந்த 25-12-75 கிறிஸ்து பிறப்பு விழா அன்று மாலை 7 மணியளவில் நகர்மன்றத் தலைவர் பொ. அழகேசனார் தலைமையில் பங்குத்தந்தைநம் வாழ்வுஇதழை வெளியிட, லூத்தரன் சபைக்குரு அதனைப் பெற்றுக்கொண்டுநம் வாழ்வுஎன்றும் வாழ ஆசியுரை வழங்கினார். துவக்கத்தில் மாநில விருது பெற்ற ஆசிரியர் டி.பி. சவரிமுத்துப் பிள்ளை (மாயூரம் வேதநாயகம்பிள்ளை அவர்களின் பேரன் சம்பந்தி) அனைவரையும் வரவேற்றார். கத்தோலிக்கச் சங்கப் பிரமுகர் கவிஞர் டி. பால்தாஸ் நன்றி கூறினார்.

- தகவல்: பெரம்பலூர் பன்னீர்செல்வம் .

உதகை மறைமாவட்டம்

உதகையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலி  முடிந்ததும்நம் வாழ்வுவெளியீட்டு விழா நடைபெற்றது. மறைமாவட்டப் பேராலயப் பங்குத்தந்தை அருள்தந்தை R.J. அமல்ராஜ் புதிய இதழை அறிமுகம் செய்து, ஒவ்வொரு கத்தோலிக்க இல்லமும், இதற்குச் சந்தா செலுத்தி ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். மறைமாவட்டத் தொடர்பாளர், அருள்தந்தை J. அந்தோணி சாமிநம் வாழ்வுமலரை வழங்க, ஆயர் அருள்பெருந்தகை அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகை அதனை ஏற்றுப் பெரிதும் பாராட்டி, மகிழ்வுடன் வெளியிட்டார்.

வேலூர் மறைமாவட்டம்

வேலூரில் கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலி முடிந்ததும்நம் வாழ்வுவெளியீட்டு விழா நடைபெற்றது. அருள்தந்தை வனத்தையன் புது வார இதழின் தனிச் சிறப்பியல்புகளை எடுத்துக்கூறி அறிமுகம் செய்து வைத்தார். ஆயர், அருள்பெருந்தகை அந்தோணிமுத்து ஆண்டகை முதல் இதழை மகிழ்வுடன் வழங்க, திரு. சைமன் அதனை அன்புடன் ஏற்று மகிழ்ந்தார். அவ்வமயம் ஆயர் அவர்கள், “இது நம் மறுமலர்ச்சிக்கான முதற்படி. புனிதமான வாழ்வுக்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்லவிருப்பது இந்தப் பொதுப் புதுவார இதழாகிய நம் வாழ்வு. இது விரைவில் நம் மக்களின் பேராதரவைப் பெறுமாக!” என்று வாழ்த்தினார்கள். பல்வேறு பங்குகளிலும்நம் வாழ்வுவெளியீட்டு விழா நடைபெற்றது.

Comment