No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 60

நமது வலிமையும் நமது எளிமையும்

நமக்கு ஒரு வேலை நடக்க வேண்டுமென்றால், அதுவும் பிறரின் துணை மூலம் மட்டுமே அந்த வேலை நமக்கு நடக்க வேண்டுமென்றால், அவரைப் பற்றி முதலில் அறிந்து, எப்படி அவரை அணுகினால் வேலை முடியும் என்று ஒரு பெரிய ஒத்திகை பார்த்துச் செல்வது பலரின் வழக்கம். இந்த ஒத்திகை நமக்கு வேண்டிய தீர்வை மிகச் சுலபமாகப் பெற்றுத்தரும். ‘அவரா... கொஞ்சம் முன் கோபக்காரர்’, ‘இவர் கொஞ்சம் தன்மையானவர்’, ‘இவருகிட்ட கொஞ்சம் பாத்துப் பேசணும் புரியுதா..., அசந்தா நமக்கே ஆப்பு வச்சிருவாரு’, ‘இவரு பிரச்சினை இல்லாத ஆளுப்பா’, ‘இவரு எப்பவுமே கடுகடு, சிடுசிடுன்னு இருப்பார்...’ இப்படிப் பல கோணங்களில் ஒருவரைப் பற்றிய பேச்சு இருக்கும். ஒருவரைப்பற்றி மற்றொருவர் வைத்திருக்கும் அளவீடு இதுதான். இந்த அளவீடு, ஒருசில நிகழ்வுகளை வைத்துப் பேசப்படுவதில்லை. மாறாக, பொதுவான ஒரு பிம்பத்தை நம்மைப் பற்றி நாமே உண்டாக்கி வைத்திருப்பதைத்தான் பேசுகிறார்கள்.

இதில் எப்போதும் கறாராகவும், முறைப்பாகவும் இருக்கும் சிலரை, ‘இவரு எப்பவுமே Strong Manஎன்று சொல்லக்கூடிய ஒரு நிலையையும் ஒருசிலர் ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் வலிமை அல்லது எளிமை எனும் வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கப்படும்.

வேலை செய்யுற இடத்துல பரிதாபம் பார்த்தா வேலைக்கு ஆகாது. நாம கடுகடுன்னு இருந்தாதான் நம்மள யாரும் தேவையில்லாம தொந்தரவு பண்ணமாட்டாக’, ‘நாம எப்பவுமே நம்மளத் தேடி வர்றவுங்ககிட்ட ஒரு Distance வச்சுக்கிறது நல்லதுஎன்பது போன்ற உரையாடல்களை நாம் அதிகம் கேட்டிருப்போம். இவையனைத்தும் தன்னை யாரென்று காண்பித்துக் கொள்வதற்கான ஒரு சிறு வரையறை அவ்வளவுதான்ஒரு மனிதனின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம், சாதனை மற்றும் சறுக்கல், ‘இவன் சாதாரணமானவன்’, ‘இவன் மிக வலிமை உள்ளவன்என்பதெல்லாம், அவரவர் மனத்தை, அவர்கள் பயன்படுத்தும் முறையில்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன. மனவலிமை உடையவர்களாக இருந்தால், நினைத்த எல்லாவற்றையும் எண்ணியபடியே அடைய முடியும். ஆதலால், மனித வாழ்க்கையில் உயர்வடைய மனவலிமை அவசியமானதாக அறியப்படுகிறது. இவற்றுள் நமது ஆற்றலின் வலிமை, பொருளாதார வலிமை, நட்பு வலிமை எனப் பலவகை வலிமைகள் வரிசையில் உள்ளன. சிந்தித்து உணர்ந்து செயலாற்றுதல் மூலமும், நாம் எடுத்துக்கொண்ட திட்டத்தின் தேவை புரிந்து நடந்துகொள்ளும் விதத்திலும்தான் நமது வலிமையின் தன்மை வலுவாகும். இல்லையெனில், அதுவே பிரச்சினைக்குக் காரணமாகவும் மாறிவிடும்.

உடல் வலிமை, உள்ள வலிமை, அறிவு வலிமை மற்றும் புற வலிமை (இது சூழல் மற்றும் நட்பைக் குறிக்கும்) எனும் இவ்வலிமைகள் வாய்க்கப்பெற்றால், நமக்கான முழுமையான வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்று அர்த்தம். உடல் வலிமை இருந்து உள்ள வலிமை குன்றிவிட்டால் பயனேதும் இல்லை. மன/உள்ள வலிமை சில நேரங்களில் சோர்ந்திருக்கும் உடலைக்கூட வலுவுள்ளதாக மாற்றிவிடும். உண்மையும், நம்பிக்கையும், நிறைவான அன்பும் நிறைந்திருக்கிற அகத்திற்கு வலிமையான வலிமை உண்டு.

வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஏற்படும் எல்லாத் துன்பங்களையும் எளிதில் கடந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்று சுருங்கப் பொருள்கொள்ள வேண்டாம். மாறாக, துன்பங்களைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்வு காணும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதுதான் அதன் முழுப்பொருள்.

வலிமையானவன் தனக்குத் தேவையான ஆயுதத்தை எதிரிகளிடமிருந்து பெற்று, அவர்களைத் தோற்கடிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பான் எனும் சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஆம், உண்மைதான்! அவன் எளிதில் துவண்டு போவதில்லை. எதிர்வரும் அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பான்.

நம்மிடம் இருக்கும் வலிமையோடு எளிமை கொஞ்சம் சேரும்போது, பொன்னோடு சேரும் செம்பால் அழகிய பொன் நகைகள் உருவாவதுபோல, எளிமை கலந்த வலிமை பிறர் மனத்தில் நமக்கான புன்னகையை ஏற்படுத்தும்.

கதிரவனைச் சில நேரம் கார்முகில் மறைப்பதுபோல, நம் வலிமைக்கு ஏற்படும் சிக்கலை எளிமையால் வெல்லலாம். ஏனென்றால், கடினமான சூழ்நிலையை எளிதாகக் கடந்து செல்வதற்கும், அமைதியாக நடந்துகொள்வதற்கும் மனவலிமை தேவை. மனிதர்களைக் கையாளும் மனிதவளத் துறையில் வலிமை மட்டும் இருந்து என்ன பயன்? வலிமை கலந்த எளிமைதான் நம்மை அதிக உயரத்திற்கு இட்டுச்செல்லும். அரசுத் துறையில் பலரை நான் இதுபோன்ற வலிமையும், எளிமையும் கலந்த குணங்களில் கண்டுள்ளேன். மக்களோடு நெருங்கிப் பயணிக்கும் இவர்கள் இதுபோன்ற குணங்களால் எப்போதும் மேன்மக்களாக அறியப்படுவர். எல்லா வலிமைகளை விட மனவலிமைக்குக் கொஞ்சம் வலிமை அதிகம். ஏனென்றால், மனவலிமை குன்றும்போது மனநோய்க்கு ஆளாகிறோம். மனம்போன போக்கில் வாழும்போது வாழ்க்கையையே இழக்கிறோம். ஆதலால் நமது வலிமையும், நமது எளிமையும் என்றென்றும் நமதாகட்டும்.

நேற்று இருந்த மனிதன் இன்று உயிரோடு இல்லை என்பதை நாம் முழுதாக எண்ணிப்பார்க்கும்போது, யாரையும் பதம்பார்க்க நமது வலிமையைப் பயன்படுத்த மாட்டோம், அதற்குப் பதிலாக எப்படிப் பக்குவமாக நடந்துகொள்வது எனும் நோக்கில் செயல்பட ஆரம்பிப்போம். நமக்கு இருக்கும் வலிமையில் எளிமை கலக்கும்போது, அது பக்குவம் என அழைக்கப்படுகிறது.

தன் வலிமையை முழுவதுமாக நம்பி இருந்த மன்னர்கள், அரசுகள் இன்று இல்லை. அந்த வலிமையைப் பொதுநலன் சார்ந்து பயன்படுத்திய எண்ணற்றோர் இன்றும் மக்கள் மனத்தில் நீங்காமல் நிறைந்திருப்பது எதனால்? அவர்கள் கையாண்ட எளிமையால்தான்.

பணம் இல்லையெனும் மனவருத்தத்தில் சிலரும், இருக்கும் பணத்தை எப்படிப் பெருக்குவது எனும் அழுத்தத்தில் சிலரும், அதிகப்படியான பணத்தை எப்படிக் காப்பது எனும் பயத்தில் சிலரும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஏதோ ஒரு வலிமையின் பின்புலத்தில் இவற்றைச் சேர்த்திருந்தாலும்அங்குக் கொஞ்சம் எளிமை இருந்தால் இந்த அழுத்தம் நிச்சயம் குறையும்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுஎனும் நம் கிராமத்துப் பழமொழி வழக்கை நாம் நினைவில் வைத்தால், இந்த வலிமை மற்றும் எளிமை எனும் ஒட்டுமொத்தச் சாராம்சத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆதலால் வலிமை நம்முள் வாழட்டும், எளிமை நம்மை ஆளட்டும்.

கெடுபிடியாக இருப்பது வலிமையும் அல்ல! எடுபிடியாக இருப்பது எளிமையும் அல்ல!

Comment