திருவருகைக் கால வரலாறு
நம்பிக்கையூட்டும் திருவருகைக் காலம்
மாரனாத்தா
கிறிஸ்து பிறப்பு தயாரிப்புக்காலத்தை திரு அவை இலத்தீன் மொழியில் “அத்வென்திஸ்” என்று குறிப்பிடுகின்றது. அதாவது ‘வருதல்’ என்றுப் பொருள். ஆண்டவரின் மறுவருகையை திருத்தூதர் புனித பவுல் “மாரனாத்தா” (1கொரி 16: 22) என்ற அரமாயிக் சொல்லாடலைப் பயன்படுத்தி கொரிந்து திரு அவைக்கு நம்பிக்கையூட்டுகின்றார். அதன் பொருள் ‘ஆண்டவரே வாரும்’ என்பதாகும். ஆண்டுதோறும் அன்னையாம் திரு அவை ‘மாரனாத்தா ‘என்ற சொல்லாடலை திருவருகைக் காலத்தின் நம்பிக்கை முழக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பினை தயாரிப்பது, அதை கொண்டாடுவது என்பது நமக்குள் புதிய நம்பிக்கையை தட்டி எழுப்புகின்றது. எதிர்வரும் காலத்தை எழுச்சியோடு ஏற்றுக்கொள்ள கிறிஸ்து பிறப்புக்காலம் மாபெரும் ஆசீர்வாதமாக அமைகின்றது. ஆண்டவரின் முதல் வருகையை அவரது மானிட பிறப்புப் பெருவிழாவை நினைவூட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது, அவரின் மறுவருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பது, ஆகிய இந்த இரண்டு காரணங்களுக்காக திரு அவை திருவருகைக் காலத்தை சிறப்பிக்கின்றது.
திருவருகைக் கால வரலாறு
திருவருகைக் கால கொண்டாட்ட மரபானது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சின் தூர் மறைமாவட்ட ஆயர் பெர்பேத்துஸ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கின்றார் தூர் நகர புனித கிரகோரி. இதன் நோக்கம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாட 40 நாட்கள் ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வது. கி.பி. 567 இல் கூட்டப்பட்ட தூர் திருச்சங்கம், நவம்பர் 11 தூர் நகர புனித மார்ட்டின் திருநாளில் இந்த புனித ஒறுத்தல் துவங்குவதாக குறிப்பிடுகின்றது. இதுவே திருவருகைக் காலத்தைப் பற்றிய முதல் குறிப்பாகும். தூர் மறைமாவட்டத்தில் மட்டும் அனுசரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தயாரிப்பு தபசு, திருத்தந்தை புனித பெரிய கிரகோரி காலத்தில் (590-604) ஒரு கொண்டாட்டமாக மாறியது. பேரரசன் சார்ல்மாங் ஆட்சியில் தபசுடன் கூடிய ஒரு பெரும் விழாவாக உரோமை பேரரசில் உருவெடுத்தது.
ஐந்து வார திருவருகைக் கால அனுசரிப்பு தற்போது நான்கு வார தயாரிப்பு கொண்டாட்டமாக மாறியுள்ளது. கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு அடுத்து வருகின்ற ஞாயிறே திருவருகைக் காலத்தின் துவக்கமாகும். திருவருகைக் காலத்தின் இறுதி எட்டு நாள்கள் (டிசம்பர் 17-24) தனிச்சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. எனவே திரு அவை மீட்பரின் திருவருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைக் காட்டும் விதத்தில் அதன் மன்றாட்டுகள் மிகுந்த நம்பிக்கையோடு அமைகின்றன. இந்தாண்டு திருவருகைக் காலம் நவம்பர் 27 அன்று துவங்குகின்றது. திருவருகைக் காலத்தில் இயேசுவின் மறுவருகையை முன்னிறுத்தி விவிலியப் பகுதிகள், இறைவேண்டல்கள் தரப்படுகின்றன. வெறும் கொண்டாட்டமாக மட்டும் கடந்துச் சென்றுவிடாமல் முந்தயக் காலத்தின் ஒறுத்தல் முயற்சிகளையும் திரு அவை வலியுறுத்துகிறது. கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாக மாற்ற பல்வேறு இறைநம்பிக்கை அடையாளங்களை கையாளுவதும் சிறப்பு.
திருவழிபாட்டின் ஆண்டு
திருவருகைக் கால துவக்கநாள் திருவழிபாட்டுக் காலத்தின் புத்தாண்டாகக் கொண்டாடப் படுகின்றது. திருவருகைக் காலத்தின் முதன்மை நிகழ்வாக இருப்பதே இந்த திருவழிபாட்டுக் காலத்தின் துவக்கம் என்பது பெரும் சிறப்பு. திரு அவை திருவழிபாட்டுக் காலத்தை நான்காகப் பிரித்து நம்பிக்கையாளர்களை நற்செய்தியின் பாதையில் ஆண்டு முழுவதும் வழிநடத்துகிறது. 1. திருவருகைக் காலம் (கிறிஸ்து பிறப்புக் காலத்தையும் உள்ளடக்கியது), 2. தவக்காலம் (ஆண்டவரின் பாடுகள் - இறப்பை தியானித்தல், துன்பத்தை ஏற்கும் பக்குவம் பெறுதல்), 3. பாஸ்கு காலம் (ஆண்டவரின் உயிர்ப்பு அனுபவங்களைப் பெறுதல்) 4. பொதுக்காலம் (கிறிஸ்துவின் திருமுழுக்கு முதல் கிறிஸ்து அரசர் பெருவிழா வரை 34 வாரங்களை உள்ளடக்கிய காலம்).
திரு அவையின் நான்கு காலங்களை வண்ணங்களால் அடையாளப்படுத்தி அதன் புரிதலை தருகின்றது. திருவருகைக்காலம் - ஊதா (தயாரிப்பு, ஒறுத்தல்), கிறிஸ்து பிறப்புக்காலம் - வெண்மை (கொண்டாட்டம், மகிழ்ச்சி), தவக்காலம் - ஊதா & சிகப்பு (செபம், தவம், துன்பம் & தியாகம்), பாஸ்கு காலம் (வெற்றி, நிறைவு, அமைதி), பொதுக்காலம் - பச்சை (காத்திருப்பு). ஞாயிறு வழிபாட்டை மூன்று ஆண்டு சுழற்சியாகவும், வாரநாட்கள் வழிபாட்டை இரண்டு ஆண்டு சுழற்சியாக கொண்டு இறைமக்களுக்கு விவிலிய அறிவை மிக எளிதாக திரு அவை பறைசாற்றுகின்றது. இவ்வாறு நாள்தோறும் திருப்பலியில் பங்கெடுப்பவர் மூன்றாண்டுகளில் திருவிவிலியத்தை முழுமையாக வாசித்து முடிக்கின்றார். எனவே கத்தோலிக்கத் திரு அவையில் திருவிவிலியம் வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தவில்லை என்பது அறியாமை. கிறிஸ்துவின் போதனைகளை அறிவிப்பதில் திரு அவை தன்னை உண்மையாகவே அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.
திருவருகைக் கொண்டாட்ட அடையாளங்கள்
கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு முன்பு வருகின்ற நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் திருவருகைக் காலமாகும். இந்த ஞாயிற்றுக் கிழமைகளை வரவேற்கும் விதத்தில் திருவருகைக் கால மலர்வளையங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. திருவருகைக்கால மலர்வளையங்கள் கிறிஸ்துவில் மலரும் நிறைவாழ்வைப் பற்றி அறிவிக்கின்றன. இவ்வழக்கம் 16 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கத்தோலிக்கர் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவர்களிடையே தோன்றியது. விவிலிய வாசிப்பு, கிறிஸ்து பிறப்பு பாடல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், இறைவேண்டல் செய்தல், ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தல் என களைக்கட்டுகின்றன. திருவருகைக்கால மலர்வளையத்தில் வைக்கப்படும் நான்கு மெழுகுதிரிகள் ‘ஒளியாம் இறைவன்’ கிறிஸ்து பிறப்பு மூலம் தன மக்களைச் சந்திக்க வருகின்றார் என்ற செய்தியை தருகின்றது. ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒவ்வொரு புதிய இறைச்செய்தியுடனும் இத்திரிகள் ஏற்றப்படுகின்றன.
நம்பிக்கையின் திரி: கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்த முதுபெரும் தந்தையர் மற்றும் இறைவாக்கினர்களை குறித்து நம்பிக்கையின் ஒளியாக ஏற்றப்படுகிறது. இது இறைவாக்கின் மெழுகுதிரி எனவும் பொருள்படும். இத்திரியின் நிறம் ஊதா. இந்நிறம் செபம், தபம், தியாகம் மற்றும் தயாரிப்பை அறிவுறுத்துகின்றது.
அன்பின் திரி: கிறிஸ்துவின் பிறப்பிற்கு ஆயத்தமாக பெத்லகேம் நோக்கி பயணித்த புனிதமிக்க கன்னி மரியாவையும், புனித யோசேப்பையும் குறித்து அன்பின் ஒளியாக ஏற்றப்படுகிறது. இது பெத்லகேம் மெழுகுதிரி எனவும் பொருள்படும். இத்திரியின் நிறமும் ஊதா.
மகிழ்ச்சியின் திரி: இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள இத்திரி இயேசு பிறந்தவுடன் அவரைக் காணவந்த இடையர்களைக் குறித்து மகிழ்ச்சியின் ஒளியாக ஏற்றப்படுகிறது. இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பரின் பிறப்பைக் கொண்டாடும் மற்றற்ற மகிழ்ச்சியை இத்திரி அறிவிக்கின்றது.
அமைதியின் திரி: கிறிஸ்துவின் பிறப்பினால் உலகம் அனுபவிக்கும் அமைதியை அறிவிக்கும் வானதூதர்களைக் குறித்து அமைதியின் ஒளியாக ஏற்றப்படுகிறது. கிறிஸ்துவின் அமைதி நல்லெண்ணம் கொண்ட யாவரையும் நிரப்புகின்றது. இத்திரியின் நிறம் ஊதா.
கிறிஸ்துவின் திரி: இறுதியாக கிறிஸ்து பிறப்பு இரவில் இத்திரிகளுக்கு நடுவில் வெள்ளைநிற திரி ஏற்றப்பட்டு, ‘கடவுள் நம்மோடு’ என்ற மாபெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை தருகின்றது. மேலும் வெள்ளைநிற இத்திரி இயேசு தூய்மையும், நன்மையும் நிறைந்த நமது மீட்பர் என்பதை குறிக்கிறது.
கிறிஸ்துவின் பண்புகளை ஏற்றல்
கிறிஸ்துமஸ் தயாரிப்புக்காலம் இன்று பெரிதும் வியாபார மயமாகி கிறிஸ்து அல்லாத கிறிஸ்துமஸ் ஆகிவிட்டது என்பது பெரும் வேதனை. வெறும் கொண்டாட்டமாக மாறிவருவது பெரும் ஆபத்தாகும். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் உன்னத நோக்கம் உயர்த்தி பிடிக்கப்படவேண்டும். அதுவே மகிழ்ச்சியான சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். கிறிஸ்துமஸ் செய்தி அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகும். எனவே திருவருகைக்கால விவிலியப் பகுதிகள், கொண்டாட்டங்கள், அடையாளங்கள் வழியாக கிறிஸ்துவைப் பற்றிய பண்புகளையும், படிப்பினையையும் இறைமக்களுக்கு தருவதில் திரு அவை ஆர்வம் கொண்டுள்ளது. கிறிஸ்துவின் பிறப்பில் இறையன்பு அருள்மழையாக மானிடருக்கு பொழியப்படுகிறது. கடவுள் மனிதனை தேடிவரும் அதிசயம் கிறிஸ்துமஸ் நள்ளிரவில் ஏற்படுகின்றது. தெய்வீகமும், மனிதமும் நிறைந்த தெய்வக்குழந்தை நமக்காக பெத்லகேம் மாட்டிடை குடிலில் மரியின் மகனாக மலர்ந்துள்ளார். நம்மை அரவணைக்க இறைவனின் கரங்கள் விண்ணிலிருந்து மண்ணகம் வரை விரிந்துள்ளது. எனவே வாருங்கள் இறைவனை போற்றுவோம் என திரு அவை மக்களை மன்றாடவும், கொண்டாடவும், பறைசாற்றவும் அழைக்கின்றது. திரு அவையின் அழைப்பை ஏற்போம், திருவருகைக்காலத்தை அர்த்தமாக்குவோம்.
Comment