No icon

ஆண்டவர் இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா (02-06-2024)

விப 24:3-8; எபி 9:11-15; மாற்கு 14:12-16, 22-26

திருப்பலி முன்னுரை

இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இறுதி இரவு உணவின் போது தமது திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவிஇதோ எனது உடல், இதோ எனது இரத்தம்! இதை என் நினைவாகச் செய்யுங்கள்என்று தமது தூய்மை மிகுந்த திருவுடலையும், திரு இரத்தத்தையும் ஆண்டவர் இயேசு பரிசாகத் தந்தார். பழைய ஏற்பாட்டின்படி இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணக்கூடாது. ஏனெனில், இரத்தத்தில் உயிர் இருக்கிறது. ஆகவே, ஒருவர் இரத்தத்தோடு உண்ணும்போது, அந்த உயிரினத்தின் உயிரையே குடிக்கிறார். இது கொலைக் குற்றமாகும். எனவேதான்இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதீர்கள்என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டிலே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்தச் சிந்தனையை முற்றிலும் மாற்றுகிறார். ‘என் உடலை உண்டு, என் இரத்தத்தைக் குடித்தாலொழிய, நீங்கள் நிலை வாழ்வைப் பெறமுடியாது; விண்ணரசுக்குள் புக முடியாதுஎன்ற கட்டளையைத் தருகிறார். ஏனெனில், இரத்தத்தில் உயிர் இருக்கிறது. பாவத்தின் கூலியாக மரணத்தைப் பெற்றிருக்கிற நமக்கு இந்த இரத்தம் மட்டுமே உயிர் அளித்துத் தூய்மைப்படுத்தி, நிலைவாழ்வைத் தர முடியும் என்ற கருத்தை உணர்ந்துகொள்ளவே ஆண்டவர் இயேசுவின் திருவுடல்திரு இரத்தப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது என்பதை உணர்ந்தவர்களாய் இப்பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் தங்களுக்கு உரைத்த அனைத்தையும் செயல்படுத்தி, அவருக்கு எந்நாளும் கீழ்ப்படிந்திருப்போம் என்பதன் அடையாளமாக இஸ்ரயேல் மக்கள் இரத்தத்தைத் தெளித்து உடன்படிக்கை செய்துகொள்ளும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தைத் தந்து, நம் அனைவரையும் மீட்டு ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச்  செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எங்கள் அன்புத் தந்தையே! உமது திருமகனின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் உமது திரு அவையை ஆசீர்வதியும். உமது திருமகனின் மற்றோர் உடலாகத் திகழும் உமது திரு அவை அனைவருக்காகவும் பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் வானகத் தந்தையே! அன்று உம் மக்களை ஆள அரசர்களைத் தந்தீர்; இன்று தலைவர்களை அளித்துள்ளீர். இவர்கள் அனைவரும் உமது மக்களை அமைதியில், அன்பில் வழிநடத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பரம்பொருளே! நாங்கள் பலராயினும், ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு, எம் பங்கில் ஒற்றுமையுடனும், சகோதர உணர்வுடனும் நாங்கள் பணியாற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

கனிவுள்ள தந்தையே! அன்று நீர் பாலைவனத்தில் மன்னாவைப் பொழிந்தது போலஇன்று உண்ண உணவின்றிப் பசியால், பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, நீர் உணவளித்து வாழ்வளிக்க வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment