No icon

பொதுக்காலம் 10 ஆம் ஞாயிறு (ஜூன் 9, 2024)

தொநூ 3:9-15; 2கொரி 4:13-5:1; மாற்கு 3:20-35

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் பத்தாம் ஞாயிறு திரு வழிபாட்டினைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தூய ஆவியைப் பழித்துரைப்பவருக்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று எச்சரிக்கை விடுக்கிறார். உண்மையை ஆராய்ந்து கண்டறிய துணை புரிபவர் தூய ஆவியார். எனவே, உண்மைக்கு எதிராகப் பேசுகிறபோது நாம் தூய ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறோம், தூய ஆவியாரைப் பழித்துரைக்கிறோம் என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். தமது இறை வல்லமையால் ஆண்டவர் இயேசு பேய்களை ஓட்டுகிறார். ஆனால், அங்கிருந்த மறைநூல் அறிஞர்களோ, ‘இவன் பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்என்று உண்மையைத் திரித்துக் கூறுகிறார்கள். அப்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துஉண்மைக்குப் புறம்பாகத் தூய ஆவியாருக்கு எதிராகப் பேசினால் எக்காலமும் உங்களுக்கு மன்னிப்பு கிடையாதுஎன்று அவர்களை எச்சரிக்கிறார். எப்போதெல்லாம் நாம் உண்மையைத் திரித்துக் கூறுகிறோமோ, உண்மையை மறைத்து உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறுகிறோமோ அப்போதெல்லாம் நாமும் தூய ஆவியாருக்கு எதிராகப் பேசுகிறோம் என்பதைச் சிந்தையில் நிறுத்தியவர்களாய் இஞ்ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

கடவுள் தமது சாயலாக மனிதனை உருவாக்கினார். ஆனால், அவனோ அலகைக்கு அடிபணிந்து, கடவுளின் சாபத்திற்கு ஆளானான் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 நம் கண்களால் காணக்கூடிய உடலானது அழிந்துபோனாலும், நம் கண்களால் காண முடியாத நிலையான வீடு ஒன்று நமக்கு உள்ளது என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவி மடுப்போம்.

              மன்றாட்டுகள்

இரக்கமுள்ள தந்தையே! உமது திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள் தங்களை நோக்கி வரும் விமர்சனங்களைக் கண்டு துவண்டு போகாமல், உம் திருமகனைப் போல துணிந்து பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அனைத்துலகோரின் ஆண்டவரே! நாடுகளை ஆளும் தலைவர்கள் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிந்து, இறையாட்சியைக் கட்டி எழுப்பிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அரவணைக்கும் ஆண்டவரேஎம் பங்கையும், பங்குத் தந்தையையும் நிறைவாக ஆசீர்வதியும். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உண்மையை உரக்க அறிவிக்கும் இறைமக்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் வாழ்பவரே!   எங்கள் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களுக்கு ஒருவரை ஒரு வர் குறை சொல்லாமல், எங்களது தவறுகளை ஏற்றுத் திருந்தி வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment