No icon

பொதுக்காலத்தின் 12 ஆம் ஞாயிறு (23-06-2024)

யோபு 38: 1,8-11; 2கொரிந்தியர் 5: 14-17; மாற்கு 4: 35-41

திருப்பலி முன்னுரை

அன்பும், அக்கறையும் உள்ள இறைவன் நம்மை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். நம்மைப் படைத்த இறைவன், நம்மைப் பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். உலகப் படைப்பை நாம் வியப்பாக எண்ணுகின்றோம். மயிலின் தோகையின் அழகு பிரமாண்டமானது; ஆழ்கடலின் அழகு அற்புதமானது; மலைகளின் அழகு மயங்க வைப்பது; விண்வெளியின் அழகு வியப்புக்குரியது. இவ்வாறு மனிதர்கள் வாழ உலகைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பி நம் இறைவன். அப்படிப்பட்ட இறைவன் மனிதர்களைப் படைப்பின் சிகரமாகப் படைத்துள்ளார். விண்ணிலும், மண்ணிலும் உள்ள அனைத்து விதமான ஆற்றல்களும், அழகும் மனிதரிடத்திலும் உள்ளன. உண்மையைப் பேசுவதும், நீதியோடு நடப்பதும், அன்போடு வாழ்வதும் வாழ்வின் ஒப்பற்ற அழகு என்பதை நாம் உணர வேண்டும். ஆனால், அவற்றையெல்லாம் விட்டு விட்டு அழுக்கான, அசிங்கமான பாவத்தில் வாழ்ந்து வருகின்றோம். பாவத்தின் மாயக் கவர்ச்சிகளில் முடங்கியிருக்கின்றோம். ஆனால், பல நேரங்களில் நாம் பாவத்தில்தான் வாழ்ந்து வருகின்றோம் என்பதை உணர மறுக்கின்றோம். ‘பாவத்தை அறிக்கையிடும் செயலே, நன்மையான செயலுக்குத் தொடக்கம்என்கிறார் புனித அகுஸ்தினார். சக்கேயு தன் பாவத்தை உணர்ந்து, தான் வரி வசூல் செய்ததை நான்கு மடங்காகத் திருப்பித் தந்தார். மூன்று முறைதான் இயேசுவின் சீடர் என்பதை மறுதலித்த பேதுரு, திரு அவையை வழிநடத்தும் முதன்மையான தலைவராக மாறினார். இவ்வாறு பலரும் இயேசுவோடு இணைந்து பாவத்தை விட்டு அக்கரைக்குச் சென்றவர்கள். அக்கரைக்குச் செல்லும்போது மிகப்பெரிய புயல் வரலாம். இயேசு நம்மோடு இருக்கின்றார் என்று நாம் நம்பும்போது புதிய வாழ்வை அக்களிப்போடு கொண்டாடலாம் என்ற எதிர்பார்ப்போடு இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுவுக்கு முதல் சொற்பொழிவை ஆற்றுகின்றார். உலகத்தைப் படைத்த கடவுள், அதன் செயல்பாடுகளையும், செயல்திட்டத்தையும் வகுத்துள்ளார். படைத்த இறைவன்தாம் படைப்பைக் கட்டுப்படுத்த வல்லமையுடைவர் என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்கு முன்பாக இருந்த வாழ்க்கையைவிட, அவர்மீது நம்பிக்கை வைத்த பிறகு வாழும் வாழ்க்கைக்கு மிகப்பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியைக் கொடுத்த இறைவா, நாங்கள் வாழும் இந்தப் புனிதமான உலகைச் சண்டைகளாலும், போர்களாலும் நிரப்பியுள்ளோம். அதற்காக நாங்கள் வருந்துகின்றோம். நாங்கள் உறவோடு வாழ நிலையான அமைதியை எங்களுக்குத் தர வேண்டும் என்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

2. வளமையான வாழ்வைத் தரும் இறைவா, பருவ மழை பெய்யும் இந்தக் காலகட்டத்தில்  எங்களுக்கும், எங்கள் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் தேவையான நல்ல மழையைத் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. பண்பை வளர்க்கும் பரமனே எம் இறைவா, சுயநல உலகத்தில் வாழும் நாங்கள், எங்கள் விருப்பத்தைவிட பிறரின் தேவையை அறிந்து, எங்களிடம் இருப்பதை நாங்கள் பகிர்ந்துண்டு வாழ தேவையான வரத்தைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘அக்கரைக்குச் செல்வோம்என்று அழைத்த உண்மையான இறைவா, எங்களை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உண்மையின் பாதையில் எங்களை வழிநடத்தத் தேவையான ஆற்றலையும், அறிவையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

Comment