No icon

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு (30-06-2024)

சாஞா 1:13-15;2,23-24a; 2கொரி 8:7-15; மாற்கு 5:2-43

திருப்பலி முன்னுரை

‘எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று நாம் எண்ணும் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் ஆகும். நம்முடைய பார்வையில் ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று நாம் எண்ணும்போது, இறைவன் புதிய ஆரம்பத்தை வைத்திருப்பார். 12 என்பது திருவிவிலியத்தைப் பொருத்தவரை முழுமையைக் குறித்துக்காட்டும் எண். அதுபோல பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் வருந்திய பெண், தன்னுடைய வலியோடும், துன்பத்தோடும் தன் வாழ்வு முடிந்துவிடும் என்று எண்ணும்போது, எப்படியாவது தன்னுடைய துன்பத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு ‘இயேசுவின் ஆடையைத் தொட்டால் நான் குணமடைவேன்’ என்ற நம்பிக்கை அவருக்குக் குணமளித்தது. கோவிலில் இறைவன், புனிதர்களின் படத்தைத் தொட்டு வணங்குவது மூடநம்பிக்கை என்று சிலர் எண்ணலாம். ஆனால், இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் நம்பிக்கைக்கு இது ஒத்துப்போகின்றது. இயேசு குணப்படுத்தச் சென்றுகொண்டிருந்த சிறுமி இறந்துவிட்டாள். ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று அழுது கொண்டிருந்தவர்களுக்கு, ‘சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்’ என்று கேட்கும்போது முட்டாள்தனமாகத்தான் தோன்றும். ஆனால், ‘தலித்தா கூம்’ (சிறுமியே எழுந்திடு) என்று சிறுமி மீண்டும் உயிர்பெற்று வரும்போது ஆச்சரியமும், மகிழ்வும் கிடைத்தது. நம்முடைய வாழ்வில் தொழில் ரீதியாக, குடும்ப உறவுகளில் சிக்கல் போன்ற காரணங்களினால் துவண்டு இருக்கும்போது, நம்பிக்கையிழந்து ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று எண்ணும் வேளையில், ‘எல்லாம் சரியாகிவிடும், மீண்டும் நல்ல வாழ்வை வாழ்வோம்’ என்ற நம்பிக்கையைத் தரும் இன்றைய ஞாயிறு வழிபாட்டில் நம்பிக்கையோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

இறப்பு என்பது மறைபொருளாக இன்றும் இருக்கின்றது. சாவை உண்டாக்கியது யார்? சாவில் மறைந்திருக்கும் மீட்பின் செய்திகள் என்ன? என்பதை ஞானத்தின் முலம் அறிந்து கொள்ளவும், இறப்பே இல்லாத வாழ்வை நாம் எவ்வாறு வாழ முடியும்? என்பதை மிகவும் இலகுவாக விளக்குகிறது இன்றைய முதல் வாசகம். சாவை வென்று நீதியுடன் வாழ அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இந்தியாவில் சிலர் நம்பவே முடியாத அளவுக்கு வறுமையிலும், மற்றவர்கள் நம்பவே முடியாத அளவுக்குச் செல்வச் செழிப்பிலும் இருக்கிறார்கள். அதுபோலத்தான் கொரிந்து நகர் மக்களிடையே அதிகமான ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. சமத்துவமற்ற வாழ்வை வாழ்ந்தார்கள். புனித பவுல் மக்களிடத்தில் சமநிலை ஏற்படுத்தவும், குறிப்பாக ஆன்மிக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் சமநிலையை ஏற்படுத்தவும் முயற்சி செய்தார் என்பதைக் குறித்துக் காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அறிவின் ஊற்றாம் எம் இறைவா! ‘குழந்தைகளை வர விடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று சொன்ன ஆண்டவரே, எம் குழந்தைகள் நன்றாகப் படித்து, அறிவிலும், ஞானத்திலும் வளர தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

2. வளமையான வாழ்வைத் தரும் இறைவா! எம் குடும்பங்களில் நோயுற்றிருக்கும் முதியவர்கள், தீவிரமான உடல் வேதனையில் இருக்கும் நபர்களுக்கு, இறைவா நீரே ஆறுதலையும், ஆற்றலையும் பொழிந்து நம்பிக்கையுடன் மீண்டுவர உதவி செய்யுமாறு இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் ஊற்றாம் எம் இறைவா! தொழில் தொடங்கி நஷ்டம் அடைந்து மன வருத்தத்தில் இருக்கும் குடும்பங்களுக்காக மன்றாடுகின்றோம். அவர்களுக்குத் தகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்து, காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. இறைவா! எம் பங்கை வழிநடத்தும் பங்குப் பேரவை நிர்வாக உறுப்பினர்கள், அன்பிய வழிகாட்டிகள், இயக்க உறுப்பினர்கள், பக்த சபை உறுப்பினர்கள், மேலும் பங்கில் ஆர்வமாகப் பணியாற்றும் நல்ல உள்ளங்களை ஆசீர்வதித்து, மக்களை வழிநடத்தத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

Comment