No icon

பொதுக்காலத்தின் 17 -ஆம் ஞாயிறு (28-07-2024)

2அர 4:42-44; எபே 4:1-6; யோவான் 6:1-15

திருப்பலி முன்னுரை

பகிரும் பண்பை வளர்க்கும் தெய்வீகத் திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். “மக் களை வரவேற்பதிலும், அவர்களுடன் உணவு, நேரம், நம் வீடுகளில் சிறிய இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாம் தாராளமாக இருக்கும்போது, நாம் இனியும் ஏழைகளாக இருப்பதில்லை என்பது மட்டுமல்ல, நாம் செல்வந்தர்களாக இருக்கிறோம்என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் பணத்தால் செல்வந்தராக இல்லையென்றாலும், நம்முடைய பகிர்வுத்தன்மையால் செல்வந்தராக இருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பசித்தவனுக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பது அவர்களை அன்பு செய்வதற்கு இணையானது. உணவற்றவருக்கு உணவு கொடுப்பது, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பதற்கு இணையானது. “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்என்கிறார் இயேசு. மேலும், “நானே வாழ்வு தரும் உணவுஎன்று கூறி நற்கருணை வழியாகத் தம்மையே நமக்கு ஆன்மிக உணவாகக் கொடுக்கிறார். முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலிசா உணவைப் பகிர்ந்து கொடுத்து, அனைவரும் வயிறார உண்டனர் என்பதைப் பதிவு செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பகிர்வதற்கு ஒற்றுமையே சிறந்த வழி என்பதை எடுத்துரைக்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் உணவை மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். இந்த நிகழ்வு இயேசு மிகப்பெரிய இறைவாக்கினர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தந்தையாம் கடவுளின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலமும், அவருடைய செய்தியை மக்களுக்கு அறிவிப்பதன் மூலமும் இறைவாக்கினர் பங்கை நிறைவேற்றினார். இறுதியாக, உணவைப் பகிர்ந்து கொடுத்து, மக்களை நல்வழிப்படுத்தி உன்னத இறைவாக்கினராகத் திகழ்கிறார். இறைவாக்கினர் இயேசுவைப்போல பகிர்ந்து கொடுக்கும் மனநிலையை இறைவன் நமக்கு நிறைவாகத் தர வேண்டும் என்று இந்தத் திருவழிபாட்டில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எலிசா வடநாட்டில் இறைவாக்குப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். எலிசா என்றால்கடவுளின் மனிதர்என்பது பொருள். புதுமைகளைப் பொறுத்தவரையில் அதிகமான புதுமைகளை எலிசா இறைவாக்கினர் செய்திருக்கிறார். கோணிப்பையில் இருந்த வாற்கோதுமை அப்பங்களை, தானியங்களை எலிசா சொன்னபடியே அனைவரும் வயிறார உண்டனர். இந்த வல்ல செயல் எலிசாவின் புனிதமான வாழ்க்கையைக் காட்டுகிறது. எலிசா என்ற மனிதர் இயற்கையின்மீது அதிகாரம் உள்ள இறைமனிதர் என்பதற்கு முதல் வாசகமே சாட்சி. அதனை ஆர்வத்தோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் தன்னைக் கைதியாக அறிமுகப்படுத்துகிறார். அவர் அரசியல் கைதியாகச் சிறையில் இருக்கும் போது எழுதப்பட்ட திருமுகம் இரண்டாம் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே எதிர்நோக்கு, ஒரே உடல், ஒரே ஆவி, ஒரே திருமுழுக்கு, ஒரே தந்தை என்ற உணர்வோடு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை விடுக்கின்றார். ஒற்றுமையே நமது பலம்; ஒற்றுமையே நமது மிகப்பெரிய ஆயுதம் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டு

1. அன்பு இறைவா! ஆன்மிக வழிகாட்டியாகவும், அனுபவத்தின் ஆசானாகவும், அன்பு செய்வதில் கடல் அலை போலவும் இருக்கும் எங்கள் தாத்தா, பாட்டிக்காக மன்றாடுகிறோம், எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டிவளர்த்த அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான மன நிலையையும், உடல் நிலையையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையை எடுத்துரைக்கும் இறைவா! உண்மையை மட்டும் பேசி, உண்மையான வாழ்வு வாழும் நபர்களை ஆசீர்வதித்து, போராட்டம் நிறைந்த வாழ்வில் உண்மையாக வாழ்வது என்பது சவால் நிறைந்தது. அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு உண்மையாக வாழும் மக்களுக்கு ஆற்றலைத் தர வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. இயற்கையில் உறையும் இறைவா! உலக இயற்கை பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நாங்கள் அனைவரும் இயற்கையை நேசித்து, இயற்கையைப் பேணிப் பாதுகாக்கத் தேவையான அறிவையும், ஆற்றலையும், வல்லமையையும் தந்து அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே எங்களுக்கு உணவாகக் கொடுத்த எம் இறைவா! நாங்களும் எங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து, உண்மையான இறைவனின் மக்களாக வாழ, அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment