போகோடா உயர்மறைமாவட்ட பேராயர் லூயிஸ் ஜோஸ் ருய்டா அபாரிசியோ
கடவுளைத் தேடுதல் என்பது, நம்பிக்கையைத் தேடுவதாகும்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 26 Jul, 2022
ஓர் உண்மையான மற்றும், ஆழமான ஒப்புரவு தேவைப்படுகின்ற ஒரு நாட்டில், பகைவருக்கு அன்பு, வன்முறையற்ற செயல்கள், ஒப்புரவுக்குத் திறந்த மனம், மகிழ்வோடுகூடிய இரக்கப் பணிகள், மன்னிப்புவழி போருக்குப் பதிலுறுப்பு போன்றவை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று, கொலம்பியா நாட்டின் போகோடா உயர்மறைமாவட்ட பேராயர் லூயிஸ் ஜோஸ் ருய்டா அபாரிசியோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 20, புதனன்று கொலம்பியாவில் சிறப்பிக்கப்பட்ட 212வது சுதந்திர நாளை முன்னிட்டு, Bogota பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர் Rueda Aparicio அவர்கள், கொலம்பியாவிற்கும், அதன் வரலாற்றிற்கும் ஆழமான ஒப்புரவும் அமைதியும் தேவை என்றுரைத்து, அவற்றுக்காக அருள்வேண்டியுள்ளார்.
கொலம்பிய மக்கள், நம்பிக்கையில் மகிழ்ச்சி, துன்பத்தில் பொறுமை, விடாமுயற்சியுடன்கூடிய செபம் ஆகிய மூன்று பண்புகளில் சிறந்தோங்கி வாழுமாறு வலியுறுத்திக் கூறியுள்ள பேராயர் Rueda Aparicio அவர்கள், பெற்றோர், தங்கள் இல்லங்களை செபிக்கும் பள்ளிகளாக மாற்றவேண்டும் என்றும், உடன்பிறந்த உணர்வோடு நடத்தப்படும் உரையாடல்கள் பிறரன்புப் பணிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இறைவனை மறக்கும் ஒரு நாடு பேராபத்துக்கு உள்ளாகும் எனவும், இறைவனைத் தேடுவது என்பது நம்பிக்கையைத் தேடுவதாகும் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ள பேராயர் Rueda Aparicio அவர்கள், அந்நாட்டு மக்களுக்குப் பணியாற்றி இறைபதம் சேர்ந்தவர்களை, குறிப்பாக, மறைசாட்சிய மரணத்தை எதிர்கொண்ட அராவுகோ ஆயர் ஜேசுஸ் எமிலியோ ஜாராமில்லோ, காலி பேராயர் இசையாஸ் டுராட்டி கான்சின்னோ ஆகியோரை சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
Comment