No icon

Konrad Krajewski

உக்ரைன் மக்களுக்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

செப்டம்பர் 21, புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரைக்குப்பின், உக்ரைனில் போரினால் துயருறும் மக்களோடு தனது அருகாமையைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

மிக அதிகமாக வேதனைகளை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களோடு, எண்ணங்கள் மற்றும் செபங்களால் நம் அருகாமையைத் தெரிவிப்போம் என்றுரைத்த திருத்தந்தை, அந்நாட்டில் நான்காவது முறையாக, மனிதாபிமான, மற்றும், மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட கர்தினால் Konrad Krajewski அவர்களோடு, செப்டம்பர் 20, செவ்வாயன்று, தான் தொலைப்பேசியில் பேசியது குறித்து குறிப்பிட்டார்.

உக்ரைனில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள், அந்நாட்டில் இடம்பெற்றுள்ள போரின் கொடூரங்கள், மிருகத்தனமான செயல்கள், சித்ரவதைக்கு உள்ளான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது போன்றவற்றை கர்தினால் Krajewski அவர்கள் விவரித்தபோது மிகுந்த வேதனையடைந்தேன் என்று, புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

உக்ரைனுக்கு மனிதாபிமான பயணத்தை மேற்கொண்டு, செப்டம்பர் 20,  செவ்வாயன்று உரோம் திரும்பியுள்ள, பிறரன்பு திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Krajewski அவர்கள், அந்நாட்டின் நிலைமை குறித்து திருத்தந்தையிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

கர்தினால் Krajewski அவர்கள், உக்ரைனுக்கு அடிக்கடி சென்று, போரினால் மிகவும் துயருறும் அம்மக்களோடு திருத்தந்தை கொண்டிருக்கும் உடனிருப்பைத் தெரிவிப்பதோடு, திருத்தந்தையின் பெயரில் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகிறார்.

Comment