இத்தாலியின் மத்தேரா நகர்
புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட்டு ஆதரவளிக்கப்படவேண்டும்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 28 Sep, 2022
இத்தாலியின் மத்தேரா நகரில் நடைபெற்ற 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்யும் திருப்பலியை, செப்டம்பர் 25, ஞாயிறன்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப்பின் ஆற்றிய மூவேளை செப உரையில், ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட 108வது குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோர் உலக நாளை நினைவுகூர்ந்தார்.
நம் சமுதாயங்கள் பொருளாதார, கலாச்சார மற்றும், ஆன்மீகத்தில் வளர உதவுகின்ற புலம்பெயர்ந்தோரோடு இறையாட்சியும் வளரும் என்பதால், அவர்கள் வரவேற்கப்பட்டு ஆதரவளிக்கப்படவேண்டும் மற்றும், சமுதாயத்தோடு ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறன்று திருஅவை, இந்த 108வது உலக நாளை, “வருங்காலத்தை, குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரோடு கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பில் கடைப்பிடித்ததையும் குறிப்பிட்ட திருத்தந்தை, அம்மக்கள் வரவேற்கப்பட்டு ஆதரவளிக்கப்படுவதற்கு அனைவரும் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
குடிபெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர், மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோர் போன்றோர் அமைதி மற்றும், மாண்புடன் வாழக்கூடியதும், அனைத்து மக்களும் தங்களுக்குரிய இடத்தைக் காண்கின்றதுமான ஒரு வருங்காலத்தைக் கட்டியெழுப்ப எல்லாரும் உதவுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
ஒருவர் மற்றவரின் பல்வேறு கலாச்சார மரபுகளைப் பகிர்ந்துகொண்டு, ஒருவர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வது, இறைமக்களை வளப்படுத்தும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும், உடன்பிறந்த உணர்வுகொண்ட வருங்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றுசேர்ந்து உழைப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மத்தேராவில் ஏழைகளுக்கு உணவளிக்கும் " Don Giovanni Mele " என்ற புதிய மையத்தை ஆசிர்வதித்து அதில் பணியாற்றுவோரை திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்த்தினார்.
Comment