No icon

திருத்தந்தை

அறிவற்றதனமான போருக்கு உக்ரைன் பலியாகியிருக்கிறது

உக்ரைனில் இடம்பெற்றுவரும் அறிவற்றதனமான போர் நிறுத்தப்படுவதற்கு உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்துள்ள அதேநேரம், அந்நாட்டில் சிறுபிள்ளைத்தனமாக, முதிர்ச்சியற்ற நிலையில் ஆயுதங்கள்  பயன்படுத்தப்படுவதற்கு எதிராகத் தன் கண்டனக்குரலை திருத்தந்தை பிரான்சிஸ் எழுப்பியுள்ளார்.

நவம்பர் 9, புதனன்று நடைபெற்ற பொது மறைக்கல்வி உரைக்குப் பிறகு நம்பிக்கையாளர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் மட்டுமின்றி, சிரியா, ஏமன் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளிலும் இடம்பெறும் போர்கள் நிறுத்தப்பட உரையாடலில் ஈடுபடவும் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் துன்புறுவது பற்றியும், பல்வேறு ஆண்டுகளாக நடந்துவரும் போர்கள் பற்றியும் நல்மனம்கொண்ட அனைவரும் சிந்திக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்கள் மனிதகுலத்தை மட்டுமன்றி, எல்லாவற்றையும் அழிக்கின்றன என்றும், போர்கள் வழியாகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போர்களாலும் அவைகளைத் தூண்டுவோராலும் எண்ணிலடங்கா கொடுமைகள் மற்றும் துயரங்களை அனுபவிக்கும் மக்களுக்கு ஆண்டவர் அமைதியை அருளவேண்டுமென்று செபிக்குமாறு அங்கிருந்த இத்தாலியத் திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ்  வேண்டுகோள் விடுத்தார்.

நவம்பர் 11, இன்று  போலந்து நாடு தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்  நிலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அந்நாட்டுத் திருப்பயணிகளைச் சந்தித்தபோது, இச்சுதந்திர நாளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வு, வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் மனித மாண்பு ஆகியவற்றில் போலந்திலும் உலக அரங்கிலும், குறிப்பாக, அண்டை நாடான உக்ரைனிலும் ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை ஊக்குவிக்கட்டும்" என்றும் கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் ஏறத்தாழ 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான இரஷ்ய படைவீரர்கள் காயப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர் மற்றும், ஒன்பதாயிரம் உக்ரேனிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

Comment