COP -27 உலக உச்சிமாநாடு
காலநிலை மாற்றச் செயல்பாடுகளில் சோர்வடையாதீர்கள் - திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Friday, 18 Nov, 2022
காலநிலை மாற்றத்திற்காக செய்யும் செயல்களில் சோர்வடையாதிருக்க வேண்டும் என்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டு அதற்காக விரைவாக செயல்பட வேண்டும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
நவம்பர் 6-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை எகிப்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்திற்கான COP -27 உலக உச்சிமாநாட்டை நினைவுகூர்ந்த திருந்தந்தை, நவம்பர் 17, வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் COP 27 என்று குறிப்பிட்டு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தின் அவசரம் உணர்ந்து அதற்காக செய்யும் செயல்களில் சோர்வடையாதிருக்க வேண்டும் எனவும், காலம் தாமதிக்காமல், இளைய தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு உறுதியான மற்றும் தொலைநோக்குச் செயல்களை விரைவாகச் செய்யவேண்டும் எனவும் அக்குறுஞ்செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 6-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை எகிப்தின் Sharm El Sheikh -இல் நடைபெற்று வரும் காலநிலை மாற்றத்திற்கான 27-வது உலக உச்சிமாநாட்டில் பங்குகொள்ளும் 200 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கனவே தான் வலியுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி அவர்களின் பணிகளை திருத்தந்தை ஊக்கப்படுத்தியுமுள்ளார்.
அளவுக்கு அதிகமான கார்பன் வெளியேற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருகின்ற சூழலில், அக்கார்பன் அளவைக் குறைத்தல், மற்றும் தடுத்தல் பற்றி விவாதிக்க இப்பிரதிநிதிகள் ஒன்று கூடியுள்ளனர்.
Comment