உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில்,
உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ கர்தினால் பரோலின் திருப்பலி
- Author குடந்தை ஞானி --
- Saturday, 19 Nov, 2022
பாலைவன நாடாக மாறி இருக்கும் உக்ரைன் பூக்கள் பூக்கும் சோலைவனமாக மாற வேண்டும் எனவும், நாட்டு மக்கள் மனக்கசப்பு மற்றும் பழிவாங்கலுக்கு அடிபணிய வேண்டாம் எனவும் கர்தினால் பியத்ரோ பரோலின் கேட்டுக் கொண்டார்.
நவம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக நிறைவேற்றிய திருப்பலியில், போரின் பயங்கரமான விளைவுகளால் பாதிக்கப்பட்டு பாலைவனம் போல காட்சியளிக்கும் உக்ரைன், விரைவில் பூக்கள் பூக்கும் சோலைவனமாக மாறவேண்டும் என்று தான் விரும்புவதாகவும், வருத்தம், ஏமாற்றம், பழிவாங்கல் போன்றவற்றிற்கு உக்ரைன் மக்கள் இடமளிக்க வேண்டாம் எனவும் கர்தினால் பரோலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடிபாடுகளுக்கு மத்தியில் புனரமைப்புக்கான பாதை உள்ளது எனக்கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், மனக்கசப்பு, நம்மை மூழ்கடிக்க நினைப்பவர்களிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்தல் போன்றவை நியாயமானதாக இருந்தாலும், வெறுப்பு மற்றும் பழிவாங்கலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது இன்னும் நியாயமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்பது மாத கால போரினால் உக்ரைனின் பகுதிகள் இடிபாடுகளாலும், மக்கள் இல்லாமல் குப்பைகள் நிறைந்ததாகவும், இருள் சூழ்ந்ததாகவும் மாறியுள்ளதைக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், ஏமாற்றம் மற்றும் அவநம்பிக்கையின் சோதனைக்கு அடிபணிய வேண்டாம் என்றும் இதயப்பூர்வமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெற்ற உக்ரைன் தூதரகத்திற்கும் திருவைக்கும் இடையிலான அரசியல் உறவைப் புதுப்பித்தலின் 30 ஆம் ஆண்டை நினைவு கூரும் விதமாக உக்ரைன் தூதரகத்தாரால் ஒருங்கிணைக்கப்பட்ட இத்திருப்பலியானது கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
ஆயுத மோதல்களின் கோரப்பிடியில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கவும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் இறைவனின் தூயஆவி நம் ஒவ்வொருவர் மேலும் பொழியப்பட வேண்டும் எனவும், ஒருவரையொருவர் அழிப்பதன் வழியாக அல்ல மாறாக ஒருவருக்கொருவர் வளர உதவுவதன் வழியாகவே இறைவனின் விருப்பமும் உண்மையான உடன்பிறந்த உறவும் உருவாகும் எனவும் கர்தினால் பரோலின் வலியுறுத்தியுள்ளார்.
அமைதி, நீதி மற்றும் பாதுகாப்புக்கான பிரார்த்தனையாக நடைபெற்ற இத்திருப்பலியில் ஏராளமான மக்கள் நீலம் மற்றும் மஞ்சள் நிற உக்ரைன் நாட்டுக் கொடிகளைத் தாங்கி செபித்தனர்.
Comment