யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி சிறாருக்கு உதவும்-UNICEF
- Author குடந்தை ஞானி --
- Friday, 17 Feb, 2023
"துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள சிறாரும் அவர்களது குடும்பங்களும், இப்பேரழிவு தரும் நிலநடுக்கங்களுக்குப் பிறகு கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்" என்றும் இறப்பு எண்ணிக்கை 35000 தாண்டியுள்ளது என்றும் யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுகளின் முதல் வாரமாகிய இன்று, இப்பேரழிவு ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தி பல இலட்சம் சிறாரை அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் சூழலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 46 இலட்சம் சிறார், சிரியாவில் 25 இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நிலநடுக்கத்தில் இறந்த மற்றும் காயமடைந்த சிறாரின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
சிறார் மீண்டும் மகிழ்வுடன் விளையாடுவதற்கும், அவர்கள் அனுபவித்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் இருந்து மீண்டு வருவதற்கும், பாதுகாப்பான இடங்களைத் தொடர்ந்து வழங்குவதில், யுனிசெஃப் குழுக்களின் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப், சிறார் விரைவில் பள்ளிகளுக்குத் திரும்புவதை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும், பள்ளிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, உடனடியாக பழுதுபார்ப்பதற்கும், தற்காலிக கற்றல் இடங்களை உருவாக்குவதற்கும் தயாராகி வருகிறது என்றும் தெரிவித்த ரஸ்ஸல், துருக்கி சிரியா ஆகிய இரண்டிலும், குழந்தைப் பாதுகாப்பு என்பது யுனிசெஃப் இன் முதன்மையான முன்னுரிமையாகும் என்றும், இதில் பிரிந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை அடையாளம் கண்டு மீண்டும் ஒன்றிணைத்தல் மற்றும் அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்கு ஆளாகிய குழந்தைகளுக்கான உளவியல் ஆதரவு அளித்தல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிப்ரவரி 18, 2023 வரையிலும், துருக்கியில் பாதிக்கப்பட்ட 10 பகுதிகளில் மார்ச் 1 வரையிலும் பள்ளிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தேடல், மீட்பு மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ள ரஸ்ஸல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க யுனிசெஃப் 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்றும், மருந்துப்பொருட்கள், குளிர்போக்கும் ஆடைகள், சுத்தமான நீர், உடல் நலம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருவதாகவும் ரஸ்ஸல் எடுத்துரைத்துள்ளார்.
இப்பேரழிவில் இருந்து தப்பிய அனைவருக்கும் பாதுகாப்பான தண்ணீர், உடல்நலம், ஊட்டச்சத்து பொருட்கள், குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கான ஆதரவு உள்ளிட்ட உயிர்காக்கும் ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும், இப்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் தொடர்ந்து செய்ய முயற்சிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
Comment