No icon

ரணில் விக்ரமசிங்

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் முயற்சிக்கு எதிர்ப்பு

போதிய நிதிப்பற்றாக்குறையால் தவித்துவரும் இலங்கையில் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டிய மக்களாட்சி கடமைகளில் இருந்து இலங்கை அரசு தவறக்கூடாது என்ற விண்ணப்பத்தை முன்வைத்த இலங்கையின் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ தலைவர்கள், மக்கள் தங்களுக்குரிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை மறுப்பது என்பது, நாம் சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதை உறுதிச் செய்வதாகும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி இடம்பெறவிருந்த தேர்தலை ஓராண்டிற்கு தள்ளிவைத்த அரசு, அதனை தற்போது நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மீண்டும் தள்ளிப்போட முயன்று வருகிறது. ஏறக்குறைய 5,100 கோடி வெளிநாட்டுக் கடனைக் கொண்டிருக்கும் இலங்கையில் அரசின் தவறானக் கொள்கைகளால் அப்பாவி பொதுமக்கள் பொருளாதாரச் சுமைகளை சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் செலவுகளுக்கு உரிய நிதியை அரசு ஒதுக்க மறுப்பது, வேண்டப்படாத பின்விளைவுகளை உருவாக்கும் எனவும் இலங்கை ஆயர்கள் எச்சரித்துள்ளனர். வாக்குச் சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்புக்கு என தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

ஊதியம், ஓய்வூதியம் மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment