அருள்பணியாளர் இம்மானுவேல்
பாகிஸ்தானில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவர்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 12 Apr, 2023
பாகிஸ்தானில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக தெய்வநிந்தனை சட்டத்தின் பேரில் சிறையில் வாடிய கிறிஸ்தவர் ஹுமாயூன் அல்லாரக்கா என்பவர் இலாகூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 32 வயதான அல்லாரக்கா, 2015 ஆம் ஆண்டு மே மாதம், இலாகூர் மாவட்டத்தில் உள்ள சண்டா என்ற நகரத்தில் செய்தித்தாளை எரித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட இஸ்லாமியர் சிலர், அதில் திருக்குர்ஆன் வசனங்கள் இருப்பதாகக் கூறி, அவர்மீது அவதூறாகக் குற்றம் சாட்டியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் புனித யோசேப்பு கத்தோலிக்க ஆலயம் உட்பட கிறிஸ்தவ வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்லாமியக் கும்பல். இதனால் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி ஓடினர் என்பது நினைவு கூரத்தக்கது.
தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பிடம், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையத்தின் இயக்குநர் அருள்பணியாளர் இம்மானுவேல் ’மணி’ யூசுப் இதுபோன்ற சூழ்நிலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவது வாழ்வா சாவா போராட்டம் போன்றது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கத்தோலிக்கரால் நடத்தப்படும் வழக்கறிஞர் அமைப்பான நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையம் (NCJP), அல்லாரக்கா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராடியது. இறுதியாக இலாகூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இப்போதும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் பாதுகாப்பான இடத்தில தங்கவைக்கப்பட்டுள்ளார்.
Comment