No icon

அல்ஜீரியாவிற்கு புதிய திருப்பீட தூதர் பேராயர் வயலுங்கல் 

அல்ஜீரியாவிற்கு புதிய திருப்பீட தூதர் பேராயர் வயலுங்கல் 
அல்ஜீரியா நாட்டிற்கு, திருப்பீடத் தூதராக, பேராயர் குரியன் மத்தேயு வயலுங்கல் அவர்களை, சனவரி 01 ஆம் தேதி வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

பேராயர் வயலுங்கள், கேரளாவின் வடவத்தூரில் 1966ம் ஆண்டு பிறந்தவர். 1991 ஆம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1998 ஆம் ஆண்டில் திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் இணைந்தார். இவர், கினி, தென் கொரியா, தொமினிக்கன் குடியரசு, பங்களாதேஷ், ஹங்கேரி, எகிப்து ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் ஹெய்ட்டி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வத்திக்கானின் இடர்துடைப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்பார்வையிடவும் இவர் அனுப்பப்பட்டார். 2016 ஆம் ஆண்டில் பாப்புவா நியு கினி மற்றும், சாலமோன் தீவுகளுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்ட பேராயர் வயலுங்கள்  அவர்கள், ஜனவரி 1 ஆம் தேதி வெள்ளியன்று அல்ஜீரியாவிற்கு, திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராயர் குரியன் மத்தேயு வயலுங்கல் அவர்கள், உரோம் திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். மேலும், இவர் உரோம் திருஅவை நிறுவனத்தில் தூதரகக் கல்வியையும் முடித்திருப்பவர்.

Comment