 
                     
                தலையங்கம்
கொரோனாவை விடக் கொடியது எது?
- Author குடந்தை ஞானி --
- Monday, 11 Jan, 2021
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒட்டுமொத்த உலகையே மரணத்தின் பிடியில் வைத்துக்கொண்டு, ஊசலாட்டம் போடச் செய்து, அரசியல் - ஆன்மிக - சமூக - பொருளாதார அமைப்புகள் அனைத்தையும் செயலிழக்க செய்து, கோவிட் 19 என்னும் வைரஸ் மூலம் உயிர்க்கொல்லி நோயாக விளங்கும் கொரோ னாவை விட உலகில் கொடியது எது? 
வெறுப்பு அரசியலை மட்டுமே தங்கள் மூலதன மாக்கி, ஜனநாயகத்தின் தூண் கள் அனைத்தையும் அசைத்துப் பார்த்து ஆட்டம் காணச் செய்து, எதற்கெடுத்தாலும் ஓர்மை என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு, சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின் மைக்கும் இறையாண்மைக்கும் எதிராக உள்ள பாரதிய ஜனதா கட்சியும் அதன் தந்தை அமைப் பான ஆர்.எஸ்.எஸ்-ம்தான் கொரோனாவை விட கொடிய நோயாகும். இவற்றின் பாசிச மனப் பான்மையே கோவிட் 19 என்னும் வைரஸை விட கொடிய வைரஸாகும்.  
அந்த வைரஸைப் போலவே இடத்திற்கேற்றார் போல், காலத்திற்கு ஏற்றார் போல், தனிநபருக்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டு,  தக்க வேஷமெடுத்து விஸ்வருபமெடுப்பதில் பா.ஜ.கவுக்கு நிகர் பா.ஜ.கவாக மட்டுமே இருக்க முடியும்.  எப்படி கட்டுப்படுத்துவதென்று விழிபிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகளைப் போலவே பா.ஜ.கவை எப்படி கட்டுப்படுத்துவதென்று ஜனநாயகவாதிகளும் சமயச் சார்பற்றவர்களும் சமூக ஆர்வலர்களும் விழிகள் பிதுங்கி செய்வதறியாது நிற்கின்றனர். 
பணமதிப்பிழப்புச் செய்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் ஒரே இரவில் தெருவுக்கு வந்ததைப் போல  கொரோனாவுக்காக ‘நாடடங்கு’ என்று தொலைக்காட்சி திரையில் தோன்றி இந்திய பிரதமர் பிதற்றியபோது தேசமெங்கும் குழப்பமும் விரக்தியும் கையறுநிலையும் ஏற்பட்டது.  குடும்பத்தின் ஒட்டுமொத்த உடைமையும் ஒரு கட்டைப் பையில் அடக்கப்பட்டு, சும்மாடு கூட இல்லாமல் சுமந்து, பசியோடும் தாகத்தோடும்  ஐந்நூறு, ஆயிரம் கிலோமீட்டர் நடந்தபோது இந்தியாகூட இருண்ட கண்டமாகவே தென்பட்டது. மங்கல்யானும் சந்திராயனும் கைகொட்டி சிரித்தன. 
‘கோ கொரோனா கோ’ என்று தெருவில் பஜனைப் பாடுவதுபோல தட்டு முட்டுகளை தட்டி தட்டி பாட்டு பாடி, மணியடித்தபோது மாலைச் சூரியனும் பார்க்க கண்கூசி மறைந்தே போனது. விளக்கேத்தி வீட்டு வாசலில் வைத்தபோது பொக்ரான் அணுகுண்டைப் போல புத்தர் சிரித்தார். அடுத்தடுத்து, தேச முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொரோனா நோயாளிகள் தென்பட்டபோது டெல்லி தப்லிக் ஜமாத்தை மேற்கோள் காட்டி அதற்கு முஸ்லீம்கள்தான் காரணம் என்று மதச்சாயம் பூசியதுதான் கொடுமையிலும் கொடுமை.  பிறப்பு முதல் மரணம் வரை (மத) வெறுப்பு அரசியலை மட்டுமே தங்களுக்கான மூலாதாரமாக கொண்டுச் செயல்படும் அவர்களுடைய பாசிச மனப்பான்மை கொரோனா வைரசைவிட கொடியது.  
மத ஒற்றுமையை சீர்குலைப்பதுதான் அவர்களின் முதன்மையான நோக்கமே.  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் மதவாத - வலதுசாரி சிந்தனையாளர்களைக் கொண்டும் வலைதள வீரர்களைக் கொண்டும் கருத்துருவை வளர்க்கின்றனர். கவிஞர் வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கருத்துரையில் நடந்தது இதுதான். ஜீயர்களை களமிறக்கி மத வேள்வி வளர்த்தனர்.
 கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலோடு தொடர்புப்படுத்தி கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்று நடிகை ஜோதிகா சொன்னதை வைத்துக் கொண்டு மத வேள்வியை இந்தப் பெரியார் மண்ணில் வளர்த்தனர். இறுதியில் மூக்கு உடைபட்டனர்.  
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆரியத்தொடு தொடர்பில்லாமல் தமிழகத்தில்  உழைக்கும் மக்களின் கடவுளாக வழிபடும் முருகனை இழிவுப்படுத்தி விட்டார்கள் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட  கந்த கஷ்டி சவசம் என்னும் ஒரு யூடியூப் வீடியோவை வைத்து மத அரசியல் செய்தனர். கறுப்பர் கூட்டத்தை எதிர்த்து கறுப்பரல்லாத கூட்டம் களமிறங்கியது. வேல் பூஜை என்ற பெயரில் சமூக நீதி தழைத்துள்ள இங்குதங்கள் மத வேள்வியை வளர்த்தனர். அவர்களால் கறுப்பர் கூட்டம்  யுயூப் சேனலை மட்டுமே மட்டுமே முடக்க முடிந்ததே தவிர மக்களின் மனங்களை வெல்ல முடியில்லை. 
அதற்கடுத்து, அவர்களுக்கு கொழுக்கட்டையாக கிடைத்த  விடயம் விநாயகர் சதுர்த்தி. ஆங்கிலேயர்களை எதிர்த்து தேசப் பற்றுக்காக தொடங்கப்பட்ட விநாயகர் ஊர்வலத்தை, விடுதலைக்குப் பிறகு மதப் பற்றுக்காக சங்கிகள் விடுவதாக இல்லை. விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் மதப்பற்றை வளர்ப்பதைவிட சிறுபான்மை மதங்களை வம்புக்கு இழுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்கள், கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்திலும் பாஜகவின் பிரதமர் மோடியின் அறிவுரையையும் மீறி, பொது இடங்களில் சிலைகளை நிறுவுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டனர். இறுதியில் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அறிவுரையும் தீர்ப்பும் வழங்கிய பிறகுதான் அடங்கினர்.  
மிகவும் கீழ்த்தரமாக சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றம் ஜெயராஜ் ஆகியோரின் காவல்துறை விசாரணை மரணத்தை, கிறிஸ்தவ மதத்தோடு தொடர்புப்படுத்தி, பின்னர் சாதியோடு பூசி மெழுகி தமிழகத்தில் பாஜக மத வேள்வி வளர்த்தனர். கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தையும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தையும் இணையம் பன்னோக்கு பெட்டகத் துறைமுகத்தையும் எதிர்த்துப் போராடிய போது, கிறிஸ்தவர்களோடு தொடர்புப்படுத்தி கொச்சைப்படுத்தி இழிவுப் படுத்தினர்.  
சேலம் சங்ககரி அருகேயுள்ள குண்டாங்கல் காடு என்னுமிடத்தில் பல பெண்களை நிர்வாண பூஜை என்ற பெயரில் சாது சரவணன் என்பவர் வன்கொடுமை செய்தததைத் தடுத்தி நிறுத்தி விசாரணைக்கு அழைத்த காவல் துணை ஆய்வாளர் அந்தோனி மைக்கேல் என்பவர் கிறிஸ்தவர் என்பதற்காக, மதச் சாயம் பூசி பாஜக தலைமையிலான வலதுசாரியினர் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.  சமூக வலைதள வலதுசாரி தீவிரவாதியான மாரிதாஸ் போன்றோரெல்லாம் வாங்கியப் பணத்திற்கு மேலே கூப்பாடு போடுகின்றனர்.  
எந்த ஒரு நிகழ்வையும் சம்பவத்தையும் மதம் சார்ந்தே அணுகி, மத வெறுப்பு அரசியலை வளர்க்கும் வலதுசாரிகளின் பாசிச மனப்பான்மைதான் கொரோனாவைவிட கொடிய நோயாகும். இதற்கு உரிய மருந்தை, இந்தப் பெரியார் மண்ணில் இருப்பதை வசதியாக மறந்து இவர்கள் மயான ஆட்டம் ஆடுகின்றனர்.  மதங்களைக் கடந்து இறந்துபோன கொரோனா நோயாளிகளை தங்கள் உடன் பிறந்தவ ராகக் கருதி, தொட்டு தூக்கி, அவர்தம் சமய உரிமை களை மதித்து, அதன்படி அடக்கம் செய்வதற்கு களப்பணியாற்றும் தன்னார்வலர்களான தமுமுக, தவ்ஹித் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த முஸ்லீம் சகோதரர்களின் தியாகம் இவர்களுக்குத் தெரியப் போவது இல்லை. பெங்களூரூ காங்கிரஸ் எம்எல்ஏ அகாந்தா சீனிவாச மூர்த்தியின் உறவினரான நவீன் என்பவர் முஸ்லீம்களுக்கு எதிராக முகநூலில் பதிவுச் செய்த கருத்துக்கு எதிராக முஸ்லீம்களே அவர்தம் வீட்டைத் தாக்க வந்தபோது அவர்தம் வீட்டையும் குடும்பத்தாரையும் பாதுகாத்தது சிறுபான்மை முஸ்லீம்கள் என்பதை அவர்கள் தங்கள் வசதிக்காக மறந்து விடுகின்றனர். 
கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்தில் தேசமே முடங்கி கிடக்கிறபோது, எல்லாருக்கும் பொதுவான ஒரு பிரதமரே அயோத்தியில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதும், இரவோடு இரவாக, இந்தியாக்காகவும் சமஸ்கிருதத்திற் 
காகவும் தேசிய கல்விக் கொள்கையைத் திணிப்பதையும் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு
2020 (நுஐஹ) என்று தாக்குதல்  நடத்துவதும் மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போதே மாணவர்களுக்கு நீட் தேர்வை அறிமுகப் படுத்துவதும் நீரோ மன்னனைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. கொரோனாவைவிட கொடியது பாஜகவின் பாசிச மனப்பான்மையும் மதவாத அரசியலும் ஜனநாயகப் படுகொலையும்தான். இதற்குதான் இந்தியாவிற்கு தடுப்பு மருந்து தேவை.
 
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment