 
                     
                னங்க சார் உங்க சட்டம்?- உ.பி - 18.04.2021
- Author --
- Wednesday, 14 Apr, 2021
என்னங்க சார் உங்க சட்டம்?- உ.பி
உலகிலேயே மிகப் பயங்கரமானதாக, ‘அரசு பயங்கரவாதம்’ மட்டுமே இருக்க இயலும். அரசு நினைத்தால் தன் குடிமக்களை வாழச் செய்ய முடியும்; அல்லது சுட்டுக் கொல்லவும் முடியும். அரசு அதன் துணை அமைப்புகளையும் அதன் அடிநாதமான சட்டங்களையும் அறம் சார்ந்தும் அன்பு சார்ந்தும் கொண்டிராதபோது அதன் எச்சம் வெறும் மனித எலும்புக்கூடுகளாகவும் நாசிப்படையின் ஆஸ்விச் கொலைக்களமாகவுமே கட்டமைக்க முடியும். உலக நாடுகளின் ஒவ்வொரு சர்வாதிகாரிகளின் வரலாறும் அவர்களின் செயல்பாடுகளும் இதனை வரலாற்றுச் சொச்சங்களாக விட்டுச் சென்றுள்ளன.
மதச்சார்பற்ற இந்தியா மெல்ல மெல்ல பாசிச பாஜகவின் பிடிக்குள் வந்த நாள் முதல் சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்கள் வழியாகவும் திட்டங்கள் வழியாகவும் நெருக்கடிகளைக் கொடுத்து தன் பெருமை இழந்து நிற்கிறது. அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள அனைத்து உரிமைகளையும் பல்வேறு துணைச் சட்டங்கள் வழியாக பறித்துவிட்டு, தன் துணை அமைப்புகள் வழியாகவும் நிர்வாக ரீதியாகவும் சர்வாதிகாரமே செய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் (மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத்) இயற்றப்பட்டுள்ள மதமாற்ற தடைச்சட்டம் ஓர் உதாரணம் மட்டுமே. தேசிய பாதுகாப்புச் சட்டம், பசுவதைத் தடுப்புச் சட்டம், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம். உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்... இவையெல்லாம் சிறுபான்மையினர் மீதான பாரமான சுமைகள்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் கொடுங்கோன்மையின் உச்சம் ஆகும். செப்டம்பர் 23, 1980 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வழக்கறிஞர் கூடாது; மேல்முறையீடு இல்லை; சில வழக்குகளில் சில விஷயங்களில் தொடர்புள்ளவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய முடியும். 12 மாதம் வரையும் ஒருவரை தடுப்புக்காவலில் வைக்க முடியும். மாவட்ட மாஜிஸ்டிரேட்டோ போலீஸ் கமிஷனரோ உத்தரவு தந்து கைது செய்தாலும் மாநில அரசிடமே கைது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கைதானவரிடம் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற தகவலைச் சொல்லாமலே பத்து நாட்கள்வரை சிறை வைக்கலாம். கைது குறித்து, கைதானவர் யாரையும் கேள்வி கேட்க முடியாது. கைதாகி மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ளவர்களுடைய காவலை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பதை மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அல்லது அதற்கு இணையான உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு முடிவுச் செய்யும். அப்படி 12 மாதம் வரை காவலை நீட்டிக்க முடியும்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமை உச்சத்தில் இருக்கிறது. யோகி என்பது பெயருக்கு முன்னொட்டாகவும் காவியாடை என்பது துறவிக்கு அடையாளமாகவும் இருந்தபோதிலும் ஆதித்யநாத் அவர்களின் அடாவடி அரசியல் மிகவும் கீழ்த்தரமானது. மனிதவதை பற்றி கவலைப்படாமல் பசுவதையைப் பற்றியே அதிகம் கவலைப்படும் புளுகிராஸ் ஆர்வலர். (புளு‘கிராஸ்’ என்பதைக் கூட எதிர்காலத்தில் புளுசூலம் என்று மாற்றிவிடுவார்கள்). உத்தரபிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2020 வரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஹேபியஸ் கார்புஸ் மனு எனப்படும் 120 ஆட்கொணர்வு மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 94 காவல் கைதுகளை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய 32 மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்த ஆணைகளை அலகாபாத் நீதிமன்றம் ரத்தும் செய்துள்ளது. இந்தச் செய்தியை வெறும் செய்தி என்று நம்மால் கடந்து செல்ல இயலவில்லை.
அலகாபாத் நீதிமன்றம் இந்த 94 தடுப்புக் காவல் கைதுகளை ரத்து செய்ததற்கான காரணத்தையும் கோடிட்டு காட்டியுள்ளது. ஒரே விஷயத்தை இதற்கு முந்தைய முதல் தகவல் அறிக்கையிலிருந்து அப்படியே எடுத்து ஒட்டி பதிவு செய்திருப்பது’ குற்றஞ்சாட்டப்பட்டவருக்கான உரிமைகளை வழங்க மறுப்பது, பிணை கிடைக்காத வகையில் அடுத்தடுத்து பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குத் தொடுப்பது போன்ற காரணங்களைப் பட்டியிலிட்டு, சட்டத்தைத் தனக்குச் சாதகமாக வளைத்துக்கொள்ள தமது அதிகாரத்தை உத்தரபிரதேச அரசு பயன்படுத்தியுள்ளதை இடித்துரைத்துள்ளது.
மேலும் கொடுமை என்னவெனில், 120 நபர்களில் 41 பேர் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி கைது செய்யப்பட்ட 41 பேரில் 30 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவிக்கையில் மாநில அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் பத்து பேருக்கு பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச பாஜக அரசு, பசுவதை வழக்குகளில் தேசிய பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டதற்கும், பிணை மறுப்பதற்கும் ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூகத்தை அச்சுறுத்தும் தன்மை கொண்டவர்கள்; மீண்டும் பொதுஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்’ என்று பாசிச மனப்பான்மையுடன் காரணத்தை முன்வைத்துள்ளது.
பசுவதை என்றாலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்றாலும் தேசப்பாதுகாப்புச் சட்டம்தான்; குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மோசமான குற்ற வரலாறு இல்லை என்றாலும் தேச பாதுகாப்புச் சட்டம்தான். இது அரசின் பாசிச-ஜனநாயக விரோத-பயங்கரவாத மனப்பான்மையையே காட்டுகிறது.
வழக்குகளை இட்டுக்கட்டி சித்தரிப்புடன் ‘அடையாளம் தெரியாத நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்; சம்பவம் நடந்த சில நிமிடங்களில் போலீசார் தாக்கப்பட்டனர்; நிலைமை பதற்றமானது. மக்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியவில்லை; அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகியது; பெண்கள் வீட்டை விட்டுவெளியே செல்ல தயங்கினர்; பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டது..பெண்கள் பள்ளி மூடப்பட்டது; அருகிலிருந்த வீடுகளின் கதவுகள் மூடப்பட்டன.. என்று ஜோடித்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 534 பேர் (2018-ல் 184 பேர் மீதும், 2019-ல் 128 பேர் மீதும், 2020-ல் 222 பேர் மீதும்) தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 106 பேர் மீதான வழக்குகள் (2018-ல் 23 பேர் மீதும், 2019-ல் 24 பேர் மீதும், 2020-ல் 3 பேர் மீதும்) அட்வைசரி போர்டு எனப்படும் ஆலோசனைக் குழுவால் நிராகரிக்கப்பட்டன.
பாசிச பாஜக அரசின் பயங்கரவாதத்திற்கு உத்தரபிரதேசம் ஒரு பயிற்சிக்களமே. இதுவே இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டால் நிலைமை என்னவாகும்?!. கோயம்புத்தூரில் பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவந்தபோது கலவரத்தை உண்டாக்கியவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே.
‘யோகி’ என்ற அடைமொழி அவர்தம் பெயருக்கு பொருத்தமன்று. ஹத்ராஸ் உள்ள உத்தரபிரதேசம் இந்தியாவின் கொலைக்களமே. எத்தனை கங்கைகள் பாய்ந்தாலும் உங்கள் பாவங்கள் ஒருபோதும் போகவே போகாது.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment