தலையங்கம்
அக்கினிநாக்குகள்
- Author குடந்தை ஞானி --
- Monday, 07 Nov, 2022
தீபாவளிக்கு ஒருநாள் முன்பு, கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கோவை கார் வெடிப்புச் சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. வெடித்த காரோடு எரிந்துபோன ஜமேஷா முபின், ஐஎஸ்ஐஎஸ் என்ற சர்வதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்பதும், 2019 ஆம் ஆண்டு முதல் என்ஐஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருந்தவர் என்பதும் அச்சத்திற்குரிய செய்தியாக உள்ளது. மேலும் இவர் கொழும்பு ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியோடு தொடர்பில் இருந்தவர் என்பதும் நெருடலாக இருக்கிறது. தற்போது இவரோடு தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டு உபா (UAPA) சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு என்ஐஏவிடம் இவ்வழக்கை ஒப்படைத்துள்ளது.
தமிழகக் காவல்துறை எவ்வித அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த விதமும், தீபாவளி பெருநாளை எவ்வித பதட்டமுமின்றி வழக்கம்போல் கோவை மக்கள் கொண்டாட ஒத்துழைத்த விதமும் மிகவும் பாராட்டுக்குரியவை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே தமிழக காவல்துறையின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.
ஆனால், மைக்கேல்பட்டி வாலண்யா முதல் பிணத்தை வைத்து அரசியல் செய்தே பழகிப்போன பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, தான் பணிவிலகிய ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து அக்கினிநாக்கோடு அரசியல் செய்கிறார். எதற்கெடுத்தாலும் தமிழக அரசைக் குறைகூறுவது அவர்தம் அரசியல் என்று சகித்துக்கொண்டாலும், சிறுபான்மையினர் மீதான வன்மத்துடனும் குரோதத்துடனும் அச்சிலேற்றமுடியாத வார்த்தைகளைச் சொல்லி, ஓர் அரசியல் தீவிரவாதியாக தன்னைக் காட்டிக்கொள்கிறார். ஒட்டுமொத்த காவல்துறையையே அவர் களங்கப்படுத்துகிறார்.
சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை களங்கப்படுத்தி, அவர்களின் பதவியைக் கொச்சைப்படுத்தி, ஒட்டுமொத்த காவல்துறையையே அவமதித்துள்ளார். தீவிர அரசியல் செய்யலாம். ஆனால் தீவிரவாத அரசியல் செய்யக்கூடாது. வகுப்பவாத அரசியல் கூடாது. குல்லா அணிந்தவரையும் சிலுவை அணிந்தவரையும் குதர்க்கமாக மாட்டு மூளையுடன் அணுகி இவர் செய்யும் அரசியல் கீழ்த்தரமானது. ஒருபோதும் ஏற்புடையது அல்ல.
தங்கள் உயிரையும் பணயம் வைத்து, இரவு பகலாக மக்கள் பணி செய்து, எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாத்து, குண்டுவெடிப்பு நடந்தவுடனே அவ்விடத்தை சல்லடைபோட்டு அலசி ஆராய்ந்து, தேடி துலாவி போதுமான ஆதாரங்களைச் சேகரித்து, கார்வெடிப்பில் இறந்தவரை அடையாளம் கண்டு, அவரது பின்னணியை உடனடியாக அறிந்து, சிசி டிவி கேமராக்கள் உதவியுடன் உரிய விசாரணையை மேற்கொண்டு, வேர்மூலத்தைக் கண்டறிந்த நம் காவல்துறையை களங்கப்படுத்தியுள்ளார்.
யாரோ கொடுத்த கோலி குண்டையும் சில ஆணிகளையும் எடுத்துக்காண்பித்து கோயில் அருகே எடுக்கப்பட்டவை என்று சான்றளிக்கிறார். எல்லாம் எனக்குத் தெரியும் என்று என்ஐஏ கமலாலயத்தின் மேல்மாடியில் இயங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். எல்லா நிலைகளிலும் தரம் தாழ்ந்து செயல்படுகிறார். ஆக்கப்பூர்வமான எதிர்கட்சிகளில் ஒன்றாக செயல்படுவதைவிட, சிக்கலான நெருக்கடியான தருணங்களை ஏற்படுத்துவதற்கே இவர் முயற்சிக்கிறார்.
‘தமிழகக் காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம்!’ என்ற வேண்டுகோள் விடுக்கும் காவல்துறை தலைமை இயக்குநரையே அறிவாலயத்தில் அறிக்கை வாங்கி தருகிறார் என்று அசிங்கப்படுத்துகிறார். மூச்சுக்கு ஒரு முறை தான் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்று விளம்பரம் தேடும் இவர், தான் பதவி வகித்த காவல்துறையையே களங்கப்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடுகிறார். கர்நாடகத்தில் தான் ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்ட நினைப்பில் டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை சர்வாதிகாரி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக்கிறார். தினம் தினம் மீடியா வெளிச்சத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக தினம் ஓர் அறிக்கை விடுகிறார். ஒரு தீவிரவாதியின் குண்டுவெடிப்பு ஏற்படுத்தாத சேதத்தை, இவர்தம் அக்கினிநாக்கு, இச்சமூகத்தில் ஏற்படுத்துகிறது. அண்ணாமலை அவர்கள் பேசும் ஒவ்வொன்றும் கோயபல்ஸ் வழியில் பொய்யுரைகளாக, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாக, வாட்ஸ்அப் வதந்திகளாக உள்ளன என்பதே உண்மை.
டேவிட்சன் தேவாசீர்வாதம்! 1995 ஆம் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், காவல்துறை வட்டாரத்தில் நேர்மைக்கும் கடின உழைப்பிற்கும் பெயர் போனவர். காவல்துறை துணை கண்காணிப்பாளராக இராமநாதபுரத்தில் கோவையில் பணியைத் தொடங்கிய இவர், கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, கடலூர், கரூர், காஞ்சிபுரம் பகுதியில் பணியாற்றினார். டிஜஜியாக பதவி உயர்வு பெற்ற பிறகு உளவுத்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் மண்டல இயக்குநராகப் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.
மதுரையில் காவல்துறை ஆணையராகப் பணியாற்றியபோது இருபதாயிரம் சிசிடிவி கேமராக்களை நிறுவி சிறப்பான முறையில் செயல்பட்டவர். தேர்தல் ஆணையமே இவர்தம் நேர்மையைப் பாராட்டி, சென்னை கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றிய இவரை கோவை மாநகரகாவல் ஆணையராகப் பணியமர்த்தியது இவர்தம் நேர்மைக்குச் சான்று. தற்போதைய திமுக அரசு இவரை உளவுத்துறையில் கூடுதல் டிஜிபியாக நியமித்துள்ளது. எல்லா நிலைகளிலும் எல்லாத் தளங்களிலும் இவர் அப்பழுக்கற்றவராக, அனைவருடைய பாராட்டுக்குரியவராகவே வலம் வருகிறார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் மதுரை காவல்துறை ஆணையராகப் பணியாற்றியபோது அவனியாபுரம் காவல் எல்லையில் 200 பேர் போலி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்றார்கள் என்று குற்றம் சுமத்தினார். சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆளுநரிடமே மனு கொடுத்தார். நீதிமன்றமே இவ்வழக்கை நிராகரித்துள்ளது. தன் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக அண்ணாமலை சொன்னார். எச்.ராசாவோ தமிழக உளவுத்துறை இந்துதேச விரோதமாகச் செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
வலதுசாரிகளின் வக்கிரப் புத்தியே, முதலமைச்சருக்கு மிக நெருக்கமான அதிகாரியாக பணிநிமித்தம் செயல்படும் கிறிஸ்தவச் சிறுபான்மையினரான இவரை நீக்கி, இவரது இடத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவரைக் கொண்டுவர முயற்சிப்பதுதான். ஆகையால்தான் அக்கினிநாக்குகளுடன் அலைகின்றனர். மதம் சார்ந்து, சாதி சார்ந்து, மொழி சார்ந்து அரசு அதிகாரிகளிடையே பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர். உளவுத்துறை முழுக்க கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே அண்ணாமலை பேட்டியளிக்கிறார். இதுவே வக்கிர புத்தியும் அக்கினிநாக்கிற்குமான சாட்சி. ஒரு தேசிய கட்சியின் தமிழகத் தலைவர் என்று திமிருடன் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தினவு இப்படிப்பட்ட ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டை வைக்கிறார்.
உயர்நீதிமன்றத்தை அவமானப்படுத்திய ராசாக்கள், காவல்துறையினரை களங்கப்படுத்திய அண்ணாமலைகள் உள்ளிட்ட இப்படிப்பட்ட அக்கினிநாக்குகள் அரசியல் வாழ்விலிருந்தே அகற்றப்பட வேண்டும். அறம் பிழைத்தோருக்கு மட்டுமேதான் அரசியலில் இடமுண்டு. அரசியல் தன்னைத்தானே சுத்திகரிக்கும். இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையான இராஜாஜியையே ஓரங்கட்டியது தமிழக திராவிட அரசியல் என்பது இவர்களுக்குத் தெரியாது போலும்.
திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது போல ‘அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் கோடிக்கணக்கான அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். பல மதங்களைச் சார்ந்த அவர்களை மதத்தின் அடிப்படையில் யாரும் பார்ப்பதில்லை. இது தமிழகம் எனும் அமிழ்தக்குடத்தில் விஷத்தை கலக்கும் மாபாதகம்! சிறுபான்மைச் சமூகத்தினருக்கு இனி அரசு பணி இல்லை என்கிறதா பாஜக?.
காவி நிற அக்கினிநாக்குகளே! உங்கள் கங்கையில் அமிழ்ந்து ஓய்வெடுங்கள். கண்ணகியின் நெருப்பிற்கு முன்பு களமாடாதீர்கள்! இது திராவிட பூமி. மணிமேகலையின் அமுதசுரபிக்குள் விஷத்தைக் கலக்காதீர்கள்!
Comment