தேர்தல் ஆணையம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
இந்திய ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகளில் ஒன்றான தேர்தல் ஆணையம் தன்னிச்சையான, சுதந்திரமிக்க, ஓர் அரசியல் அமைப்பு ஆகும். அண்மைக்காலமாக பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் அதன் சுதந்திரமான செயல்பாடுகளில் மிகப்பெரிய சுணக்கமும் தேக்கமும் ஏற்பட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் பதினேழாவது பாராளுமன்றத் தேர்தலில் அதன் செயல்பாடுகள் சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அதன் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளும் சார்புநிலைகளும் எதிர்கட்சிகளை மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தையும் அச்சுறுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் ஆணையம் மாண்புமிக்க அமைப்பு. அது யாருக்கும் அடிமையல்ல; ஆட்டுவிக்கப்படும் கைப்பாவையும் அல்ல. ஆனால் அதன் அண்மைக்காலச் செயல்பாடுகளைப் பார்க்கிறபோது அது யாருக்கோ விலைபோனது போல.. அடிமையானது போல கருதத்தோன்றுகிறது. அதன் செயல்பாடுகள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக வீரியமின்றி உள்ளன.
உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத், காசியாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ‘காங்கிரசார் பயங்கரவாதிகளுக்குப் பிரியாணிதான் வழங்குவார்கள். ஆனால் பிரதமர் மோடி வெடிகுண்டுகளையும் பீரங்கிக் குண்டுகளையும் வழங்கக் கூடியவர். அதோடு இந்திய இராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது’ என்று பிதற்றியுள்ளார். இதற்குத் தேர்தல் ஆணையம் இனிமேல் அப்படி பேசக்கூடாது என்று எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி, மது, பரிசுப் பொருள்கள் என ஏறக்குறைய 500 கோடிக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்று ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் பாரபட்சம் காட்டினால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகாதா? தேர்தல் ஆணையத்தோடு வருமான வரித்துறையும் ஆளும் அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டால் ஜனநாயகம் காப்பாற்றப்படுமா? சென்னை மாநகராட்சி ஓப்பந்ததாரர் சபேசன் நடராஜ் இல்லத்திலும் உடுமலை காரத்தொழுவில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டிலும் வருமானவரிச் சோதனையை நீடிக்காமல் அவசரகதியில் மேலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக முடித்துக்கொள்கின்றனர். துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் செய்த சோதனையின் வீடியோ பதிவை வெளியிட்டு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றனர். பரப்புரை முடிந்த நிலையில் வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்துள்ளனர். கனிமொழியின் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் அவர்களின் வீட்டில் நடத்திய வருமான வரித்துறையின் ரெய்டும்கூட அம்மாநிலத் தேர்தல் ஆணையருக்குத் தெரியாமலேயே நடத்தப்பட்டுள்ளது. சின்னங்களை ஒதுக்குவதில்கூட ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். அமுமுக வேட்பாளர்களின் பெயர்களில் ஆளுங்கட்சி நிறுத்தியுள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பல இடங்களில் கொடுத்து உதவியுள்ளதாக சொல்லப்படுகின்றது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சாட்டிலைட்களை அழிக்கும் மிஷன் சக்தியைப் பற்றி தேசிய அளவில் தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் மோடி பேசுகிறார். இது விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் வக்காலத்து வாங்குகிறது. தூர்தர்ஷனும் முறைதவறி பிரதமர் சேட்லைட் மிஷன் சக்தியைப் பற்றி பேசியதை நேரலையில் ஒளிபரப்பியுள்ளது.
‘இந்துக்கள், பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் போட்டியிடப் பயப்படுகிறார் ராகுல்காந்தி என்று ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாக ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசுகிறார். நடவடிக்கையில்லை. ‘பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்துக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய குடிமக்கள் சட்டம் அமல்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பேசுகிறார்...’ நடவடிக்கையில்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 வது பிரிவு மிகத் தெளிவாக மதத்தின் பெயராலோ, சாதி, இன அல்லது மொழி அடிப்படையிலோ ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றோ..வாக்களிக்கக் கூடாது என்றோ சொல்வதை அறமற்றதாகவும் விதிமீறலாகவும் வரையறுத்திருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கையெடுக்காமல் வாளாயிருக்கிறது. இதற்கு அருண்ஜெட்லி போன்றவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவிருந்த "பி.எம்.நரேந்திர மோடி" படத்திற்கும் 24 மணிநேர செய்திச் சேனலான "நமோ" டிவிக்கும் "ஜேர்னி ஆஃப் எ காமன் மேன்"
வெப் தொடருக்கும் தடைவிதித்துள்ளது. மாயாவதிக்கும் யோகிக்கும் சில மணிநேரங்கள் ஓய்வு கொடுத்துள்ளது. இந்திய ஆட்சிப்பணியில் கோலேச்சி ஓய்வுப்பெற்ற 66 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்திய வரலாற்றிலேயே முதல்முறை யாக குடியரசுத்தலைவரிடம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் குறித்து முறையீடு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் தனக்குரிய நம்பகத்தன்மையை இழந்துவருவது ஜனநாயகத்திற்குப் பேராபத்தாகப் பார்க்கப் படுகிறது.
தேர்தல் ஆணையம் உருவாக்கிய விதிகளை தேர்தல் ஆணையமே மீறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது இந்திய ஜனநாயகத்தின் கடைசித் தேர்தலாக இருக்குமோ என்ற கேள்வி இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிற நிலையில்.. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகுந்த சந்தேகத்தை எழுப்புகின்றன. நோட்டீஸ் அனுப்புகிற ஒரு தபால் நிலையமாகவே தேர்தல் ஆணையம் இதுவரை செயல்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் குறித்து கண்காணிக்க முடியுமே தவிர அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இயலாது; தண்டனை வழங்க இயலாது. புல்வாமா தாக்குதலை அரசியலாக்கி வாக்குகளாக மாற்றும் பாஜகவின் முயற்சியை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. எல்லாவிதங்களிலும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து வருகிறது. அண்மையில் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய், தேர்தல் ஆணையம் குறித்த வழக்கில், இது ஒரு பல் இல்லாத அமைப்பு, மதரீதியாக, சாதிரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்று கூறுகிறீர்கள். அதிகபட்சமாக உங்களால் அவ்வாறு பேசியவர்களுக்கு எதிராக நோட்டீஸ் மட்டுமே அனுப்ப முடியும். ஒருவேளை வேட்பாளர் பதில் அளித்தால் அவருக்கு நீங்கள் ஆலோசனை கூறுவீர்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் நீங்கள் வேட்பாளருக்கு எதிராக கிரிமினல் புகார் பதிவு செய்ய முடியும் தானே. அந்த அதிகாரம் சட்டப்படி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுதானே” என்று கடிந்து கொண்டுள்ளார்.
சிவசேனாவின் சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத், தலையங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையாகுமாரை, பாஜக வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது தோற்கடிக்கவேண்டும் என்று எழுதிவிட்டு, மும்பையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறை
களெல்லாம் எங்களைக் கட்டுப்படுத்தாது; எங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதை நாங்கள் பேசுவோம்’
என்று வாய்சவடால் விடுகிறார். என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் மக்களின் நம்பகத்தன்மையை இழந்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும். பல் இல்லாத இந்த ஆணையத்தை வலிமைப்படுத்தி, சுயச்சார்போடும் சுதந்திரத்தோடும் செயல்பட அனுமதிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
Comment