No icon

ஆசிரியர் பக்கம்

என் இனியநம் வாழ்வுவாசகப் பெருமக்களே!

 “சேர்ந்தே இருப்பது... பிரிக்க முடியாதது...” என்ற தர்க்க வினாக்களுக்குக்கிறிஸ்தவமும், அதன் பிறரன்புப் பணிகளும்என்று நாம் பெருமைகொள்ளும் அளவிற்குக் கிறிஸ்தவத்தின் பிறரன்புப் பணிகள் உலக மறைகளிலே அதன் தனிச் சிறப்பை எண்பித்துக் கொண்டிருக்கின்றன. கல்விப்பணி, சமூகப்பணி, மருத்துவப்பணி என அதன் கூறுகள் நீட்சி அடைந்து, தனிமனித விடுதலையையும், சமூக விடுதலையையும் இலக்கெனக் கொண்டு, இன்றும் அது முழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே. திரு அவையின் பணியாளர்கள், கிறிஸ்துவின் மனநிலையில் உலகமெங்கும் சென்று அவரின் போதிக்கும் - புனிதப்படுத்தும் - வழிநடத்தும் பணிகளை மேற்கொண்டு, சமூக மறுமலர்ச்சி கண்டதும், இன்றும் அது தொடர்வதும் உலக வரலாற்றுப் பதிவுகள் தரும் சான்றுகளே!

அத்தகைய சான்றுகளில் இந்தியத் திருநாடும் குறிப்பாக, தமிழ்நாடும் கண்ட மறுமலர்ச்சி வெள்ளிடை மலையே! “தமிழ் நாட்டின் வளர்ச்சியில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பை நீக்கிவிட்டால் ஒன்றுமே இருக்காது. கிறிஸ்தவ மிஷனரிகள் இல்லையேல் நம் நாட்டில் கல்வி நிலையங்கள் ஏது? மருத்துவ வசதிகள் ஏது? சமத்துவ விடியல் ஏது? சமூக விடுதலை ஏது? சமூக நீதி ஏது?” என வினாக்கள் தொடுக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்களின் கூற்று இங்கே நினைவுகூரத்தக்கது. அவ்வாறேகிறிஸ்தவர்கள் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காவிட்டால், தமிழ்நாட்டில் கல்வி என்பது பொதுவுடைமையாகி இருக்காது. கிறிஸ்தவர்கள்தாம் கல்வியைப் பொதுவுடைமை செய்தார்கள். இதை எவராலும் மறுக்க முடியாதுஎனக் கூறும் கவிஞர் வைரமுத்து அவர்களின் கூற்றில் உள்ள பேருண்மையை மறைத்துவிடவும் முடியாது. பூமி உள்ளவரையிலும், அதில் உயிர்கள் வாழும் வரையிலும் கிறிஸ்தவத்தின் இப்பிறரன்புப் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புவி சுழலும் வரை, நிழல் தொடரும்வரை மறைப்பணியாளர்களின் இப்பணிகளும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

ஓர் இயக்கம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும்வரை வீறுநடை போடும். அதன் எல்லையை அடைந்தவுடன், அதுவரை அது மேற்கொண்ட பயணத்தின் வீரியம் குறைந்து போகும் அல்லது முடிந்துபோகும். ஆனால், திரு அவையில் மறைப்பணியும், அதன் நீட்சி யான பிறரன்புப் பணிகளும் ஒரு தொடர் பயணம். திரு அவைபயணிக்கும் திரு அவைஅல்லவா! தன்னையே முழுமையாகத் தந்த கிறிஸ்துவைத் தலைமை ஏற்றது அல்லவா! குருவைப் பின்தொடரும் சீடர்களைப்போல, தன்னலமற்றத் தலைவனைப் பின்தொடர்ந்து, ‘இறையரசுஇலட்சியம் ஏந்தி, உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யப் புறப்பட்ட மறைப்பணியாளர்களின் மனத் திடமும், கடின உழைப்பும், தீராத தாகமும், இலட்சிய வேட்கையும், புனித வாழ்வும் போற்றத்தக்கதே. இத்தகைய புனித வேள்வியில் இவர்கள் புடமிடப்படுவதாலும், ‘இறையரசுஇலட்சியம் கூர்மைப்படுத்தப்படுவதாலும் கிறிஸ்து வின்இறையரசு இயக்கம்இன்றும் தொடர்ந்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அவ்வாறே, தன் சொல்லிலும், செயலிலும், வாழ்விலும் தூய நல் எண்ணங்களைக் கொண்டு, உண்மையை எடுத்துரைக்கவும், இருட்டை அழித்து வெளிச்சம் பாய்ச்சும் ஒளிச் சுடரைப் போல தீமையைச் சுட்டெரிக்கவும் பிரான்சிலிருந்து இந்திய தேசம் வந்து, வியக்கத்தக்க வகையில் பெரும் பணிகள் பல ஆற்றி, இப்பணிகள் தொடர்ந்திட தனியொரு துறவற சபையைத் தோற்றுவித்த இறை ஊழியர் தந்தை ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்களின் தியாக வாழ்வு போற்றுதற்குரியது.

விதை மண்ணுக்குள் மறையும்போது, அது மடியும்போது செடியாய், கொடியாய், மரமாய்ப் பரிணமித்துப் பூவாய், காயாய், கனியாய்ப் பலன் தருவதுபோல, தந்தையின் அர்ப்பண வாழ்வும், அவர் ஆற்றிய அன்புப் பணிகளும் இன்று ஆலமரமாய் உயர்ந்து-வளர்ந்து, பரந்து-விரிந்து வியக்க வைக்கின்றன.

இவ்வாறு தொடரும் திரு அவையின் மறைப்பணிகளில், பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை சகோதரிகளின் பிறரன்புப் பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் பாராட்டத்தக்கதே! சமுதாய விடியலுக்கு, விளிம்புவாழ் மக்களின் விடுதலைக்கு, சமூக மறுமலர்ச்சிக்கு, இலட்சிய வேட்கையோடு இறையரசின் உடன் பணியாளர்களாய் அவர்கள் ஆற்றி வரும் பணிகள் சிறப்புக்குரியதே. தங்கள் சபையின் நிறுவுநர் இறை ஊழியர் ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்களின் தணியாத தாகத்தை, உள்ளுணர்வைத் தமதாக்கிச் செயல்படும் இச்சபையின் அருள்சகோதரிகள் ஒவ்வொருவரும் நம் பாராட்டுக்குரியவர்களே! கோவை பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை சபையார், உலகெங்கும் ஆற்றி வரும் பிறரன்புப் பணிகளை எண்ணிப் பெருமை கொள்ளும் இவ்வேளையில், உலகக் கத்தோலிக்கத் திரு அவையோடுநம் வாழ்வுவார இதழும் அவர்களை மனத்தார வாழ்த்துகிறது.

இறை ஊழியர் தந்தை ஜோசப் லூயிஸ் இரவேல் அவர்களின் அருளாளர் பணிக்கான மறைமாவட்ட ஆய்வின் நிறைவு விழா நினைவாக, அவரின் பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் வெளிக்கொணரும் இந்த ஆய்வறிக்கையைநம் வாழ்வுசிறப்பிதழாக வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. அருள்சகோதரிகளின் அர்ப்பண வாழ்வையும், பிறரன்புப் பணிகளையும் அறிந்திடவும், இவற்றிற்கு வித்திட்ட இச்சபையின் நிறுவுநரின் அருளாளர் பட்டத்திற்கான ஆய்வுப் படிநிலைகளை அறிந்திடவும் இவ்விதழ் உதவிடும் என நம்புகிறேன்.

நம் வாழ்வுவாசகர்கள் சார்பாக அருள்சகோதரிகளுக்கு வாழ்த்துகளையும், செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment