No icon

பெண்மையைப் போற்றுவோம்!

‘நீரின்றி அமையாது உலகு - மண்ணில்

பெண்ணின்றி அமையாது உறவு!

தெய்வமின்றி பொருளுண்டோ ‘கோவில்’ - தினம்

தாயின்றி அருளுண்டோ மேதினில்!

தாய்மையின் புனிதம் தவமாகும் - மண்ணில்

தவமாய்க் கிடைக்கும் வரமாகும்!

அவளின்றி அகிலம் தழைக்காது - தினம்

ஆதவன் உதிப்பதும் நிலைக்காது!

பன்முகம் அவளில் உருவாகும் - அருள்

இன்முகம் உதிரம் கருவாகும்!

உறவில் ஆல மரமாகும் - அவள்

ஊனும் உயிரும் (திருக்) கரமாகும்!

மண்மொழி நாடு தாயாகும் - என்றும்

தாயும் தெய்வமும் ஒன்றாகும்!

உலகம் உயிர்மெய் உறவாகும் - அதன்

அகம் புறம் அவளே முகமாகும்!’

என்றே பெண்மையைப் போற்றத் தோன்றுகிறது.

“ஆண்டவன் படைப்பில் அழகுரு படைப்பு பெண். அவளைவிட மென்மையும், மேன்மையும் நிறைந்த படைப்பு உலகில் வேறு எதுவும் இல்லை” என்றார் அண்ணல் காந்தி. பெண், அன்பின் பிறப்பிடம்; பாசத்தின் இருப்பிடம். தாய்மை நிலையில் மனிதகுலம் முழுமைக்கும் அன்பை பகிர்ந்தளிப்பவள் அவளே!  ஆகவே, இச்சமூகத்தின் முகம் பெண் என்றால் அது மிகையாகாது. அன்பும், பரிவும், பாசமும், தன்னல மறுப்பும், துன்பத்தைச் சகிக்கும் மனத்திண்மையும் இயற்கையாகவே இதயத்தில் பெற்றவள் அவள். இத்தகைய சிறப்புக்குரிய பெண்ணினம் போற்றுதற்குரியது; அவளின் பெண்மை வணக்கத்திற்குரியது!

மங்கையரின் உறவு வேர்கள் மண்ணில் பரந்தோடிக் கிடப்பவை. குறுகிய வட்டத்திற்குள் அதைச் சுருக்குவது கடினம். பெண்ணின் உணர்வும், உறவும் ஆணின் ஆளுமையில் இரண்டறக் கலந்திருப்பதே உண்மை. அது சமூகத்தில் ஆழமாக இழையோடிக் கிடக்கிறது என்பதே பேருண்மை. ஆணுக்குப் பிறப்பளிக்கும் அன்னையாக, துன்பத்தில் ஆறுதல் தரும் உயிர்த் தோழியாக, குடும்பம் எனும் கோவிலில் இல்லறத் துணையாகப் பல பரிமாணங்களில் வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவள். ஆகவேதான், திரு. வி. க. “பெண் மகளாகத் தோன்றி, மனைவியாக வாழ்ந்து, தாயாகத் தொண்டு செய்து, தெய்வமாகக் காட்சி தருபவள்” என்கிறார். அவளே பாட்டியாய், அன்னையாய், தங்கையாய், தமக்கையாய், தோழியாய், மனைவியாய், தனயையாய் (மகளாய்), பேத்தியாய் தலைமுறை பல கடந்தும் மனித வாழ்வில் உடன் பயணிப்பவள். அத்தகைய சிறப்புக்குரிய பெண்ணினத்தை, ‘மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டுமென’ மொழிந்து சிறப்புச் செய்கிறது இச்சமூகம்.

உயிர்களை உருவாக்கி, நல்வழிப்படுத்தி, உலகை மேன்மையுறச் செய்வதே பெண்ணுக்குரிய அறம். அதை ஒருபோதும் ஆண்களால் செய்ய முடியாது. அதனால்தான், ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா’ என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அவ்வாறே, ‘தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை’ எனும் ஒளவையின் வாக்கு பெண்மையின் பேருண்மையை நாளும் எடுத்துரைக்கும் உன்னதக் கூற்றாகும்.

தாயே உயிர் அனைத்திற்கும் ஆதாரம். உயிர் எழுத்தில் ‘அ’ எடுத்து, மெய் எழுத்தில் ‘ம்’ எடுத்து, உயிர்மெய் எழுத்தில் ‘மா’ எடுத்து, அழகுத் தமிழில் கோர்த்தெடுத்த முத்து ‘அம்மா!’ உடலையும், உயிரையும் இணைத்துக் கொடுப்பதால் அன்னையை அழகுபடுத்துகிறது தமிழ்ச் சமூகம்.

அதேவேளையில், இருளும்-ஒளியும், உண்மையும்-பொய்மையும், நன்மையும்-தீமையும், உயர்வும்-தாழ்வும், இன்பமும்-துன்பமும் வாழ்வின் இருபெரும் துருவங்களாக ஒவ்வொருவர் வாழ்விலும் சுழன்று வருவதுபோல, சங்க காலம் முதல் இக்காலம் வரை பெண்ணினமும் இவ்வாழ்வியல் கூறுகளுக்குள் ஏற்ற-இறக்கங்களோடு சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பதே மறுக்க முடியாத எதார்த்தம். இன்றளவும் பெண்கள், இச்சமூகத்தால் அடிமை போலவே எண்ணப்படுகின்றனர். ஆயினும், தடைகள் பல தாண்டி இன்றைய நவீன காலத்தில் பெண்ணினம் பெருமை அடைகிறது என்பதும் பேருண்மையே. இது பாராட்டத்தக்கது; வரவேற்கத்தக்கது!

 படைப்பில் ஆண் பெண்ணை விட உயர்ந்தவர் என்றோ, பெண் ஆணைவிடச் சிறந்தவர் என்பதோ இங்கே விவாதம் அல்ல. உயர்வு, தாழ்வு குடியிருக்கும் இடத்தில் சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் இடம் இருக்காது. ஆணும், பெண்ணும் சமநிலையில் போற்றப்பட வேண்டும் என்பதே இறை நியதி. ஆகவேதான், “அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” (தொநு 2:18) என்கிறார் படைப்பின் கடவுள். ஆணின் விலாவிலிருந்து பெண் உண்டாக்கப்படுவது ஆணும், பெண்ணும் சமம் என்பதைக் காட்டவே. மேலும், எபிரேய மொழியில் ஆண்-பெண் (இஷ் - இஷா) என்ற இரு சொற்களும் ஒரே அடிச் சொல்லிலிருந்து பிறக்கின்றன எனும் திருவிவிலிய அறிஞர்களின் விளக்கமும் இங்கே நினைவுகூரத்தக்கதே!

பெண்மை போற்றப்படும் இம்மண்ணில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுகத்தில் பெண் அளப்பரிய சாதனைகள் கண்டு வீறு நடை போடும் இதே சூழலில், ஆணாதிக்கச் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்பின் வலைகளுக்குள் சிக்குண்டு சிறுமைப்படுத்தப்படுவதும், அதுவே இன்றும் எதார்த்த நிலையாக இருப்பதும், தொடர்வதும் மிகுந்த கவலைக்குரியது. கற்பனைக்கும் எட்டாத கருவறையின் மாண்பு சிதைக்கப்படுவதும், கண் விழிக்க வேண்டிய சிசு பெண் என்பதால் கருவறையிலேயே காணாமல் போவதும், சிறகடித்துப் பறக்கும் சிட்டுகளின் சிறகுகள் முறிக்கப்படுவதும், கன்னியின் கன்னிமை களவாடப்படுவதும், காம கயவர்களின் பிடிக்குள் பெண்ணினம் சிதைக்கப்படுவதும், அவர்களின் வாழ்வே சூறையாடப்படுவதும் மனிதகுல நாகரிகத்தின் உச்சக்கட்ட அவமானம். பெண்ணினத்திற்கு எதிராக நம் சமூகம் நீண்ட காலமாக நிகழ்த்தி வரும் கொடுமைகள் அனைத்தும் தகர்க்கப்பட வேண்டும்.

“ஒரு பெண் அடிமையாக இருக்கும்போது, ஆண் மட்டும் எப்படிச் சுதந்திரமாக இயங்க முடியும்?” (Can man be free if woman be a slave?) என்று கேட்ட இங்கிலாந்தின் பெண் விடுதலைச் சிந்தனைவாதி மேரி ஷெல்லியின் முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய எண்ணத்தில் நாம் குரலற்றோரின் குரலாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆணும், பெண் ணும் சம உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்றிட வழிவகை செய்வதுதான் நலமான, வளமான சமூகத்திற்குரிய அடையாளம். அறிவுச் சமூகத்திற்கான மாண்பு. பெண்ணைத் தனக்குச் சமமாக ஆண் எண்ணத் தொடங்கினாலே போதும், ஆணாதிக்கமும், அடிமைத்தனமும் தானாகவே தகர்ந்து போகும்.

பெண்ணினம் போற்றுவோம், நாடு நலம் பெறும்! பூமி வளம் பெறும்! பெண்மையைப் போற்றி வீழ்ந்தவருமில்லை; பெண்மையைத் தூற்றி வாழ்ந்தவருமில்லை. பெண்ணினம் வாழ்க!

பெண்கள் தின வாழ்த்துகள்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment