No icon

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தொண்டும், துறவும்!

என் உன்னதமான இந்தியத் திருநாட்டின் இளைஞனே! சமுதாய வீதியில் நீ கைவீசி நடக்கும்போது, நீ மட்டும் தனியாக நடப்பதாக ஒருபோதும் சோர்ந்துவிடாதே! உனக்குப் பின்னால் இந்த மண்ணின் பல நூறாண்டுச் சிறப்புமிக்க, மரபார்ந்த பெருமைகளும் தொடர்ந்து வருவதை உணர்ந்து கொள்வாய்என்றார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். இந்திய மண்ணின் மரபார்ந்த பெருமை எது? என்ற கேள்விக்கு, ‘துறவு, தொண்டு இரண்டு மட்டுமே இப்பூமியின் அரிய தேசிய இலட்சியங்கள்என்கிறார் அவர்.

துறவு என்பது எல்லாருக்கும் எளிதாகக் கிட்டுவதில்லை; அது பேரருள், பெரும் வரம், உன்னதக் கொடை! அது ஒரு சிலருக்கே வழங்கப்படும் வரம்; அளிக்கப்படும் அருள்; கொடுக்கப்படும் கொடை! அத்தகைய துறவு வாழ்க்கையில், ஓர் உண்மையான துறவிக்கான இலக்கணம் வகுத்தவர் இவர். ‘சமயம் என்பது சக மனிதனை நேசிப்பதுஎன்பதைத் துறவு வாழ்வின் இலக்கணமாகக் கொண்டவர்; அதை முழுமையாக அடைவதையே முழுமூச்சாகக் கொண்டவர் இவர்.

ஆன்மிகத்துக்கும், சமூகத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டுஎன மேடைதோறும் முழங்கி, ஒன்றில் மற்றொன்றைக் கண்டவர்; அதனுடைய வளமைக்கும், செழுமைக்கும், சிறப்புக்கும் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தவர் இவர். சுயநலமின்றி உயிர்கள் அனைத்தின் மீதும் அளவுகடந்த அன்பு செலுத்தி ஆரத்தழுவியவர் இவர். அத்துணை உயிர்களுக்காகவும்அவற்றின் நலனுக்காகவும் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தவர் இவர்.

துறவு என்பது வாழ்வைத் துறப்பது அன்று; மாறாக, செய்யும் செயலின் பலனைத் துறப்பதே என்பதை ஆழமாக உணர்ந்தவர், உணர்த்தியவர் இவர். இத்தகைய புரிதலோடு பொதுவாழ்வில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் இவர். தொண்டும், துறவும்தான் பொதுவாழ்வின் இரு கண்கள் எனக் கொண்டவர் இவர். காவி உடை அணிந்துகருமமே கண்ணாய் இருந்துதுறவுக்கு இலக்கணம் வகுத்தவர் இவர். மாமதுரை மக்கள் பேராயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையுடன் கரம் கோர்த்து, மனித நேயமும், மதநல்லிணக்கமும், சமூக மேம்பாடும், தமிழ்த் தொண்டும் கூறுகளாகக் கொண்டதிரு அருட்பேரவைகண்டவர் இவர்.

திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் 45 - ஆம் குரு மகா சன்னிதானமாகப் பொறுப்பேற்று, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்கு முகவரி தந்தவர். சமயத் திருமடங்களின் தலைவர்கள் மிகவும் பக்திபூர்வமாக குரு மகா சன்னிதானம், சுவாமிகள், தேசிகர் என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மக்கள் தொண்டையே முதன்மைப்படுத்துகிற வகையில்அடிகள்என்ற அடையாளத்துடன் அன்போடு அழைக்கப்பட்டுகுன்றக்குடி அடிகளாராகவலம் வந்தவர்தான் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாச்சலத் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்ற இயற்பெயர் கொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

சமூக அக்கறை கொண்டு ஆன்மிகப் பணிக்கான இலக்கணம் தந்து, செயலாக்கம் கண்ட குன்றக்குடி அடிகளாரின் பிறப்பின் நூற்றாண்டு விழாக் காலத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் மதநல்லிணக்கத் தளத்தில் இப்பேராளுமையை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

அரங்கநாதனாகப் பிறந்து, கந்தசாமி பரதேசியாக வளர்ந்து, கந்தசாமி தம்பிரானாக உயர்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளாராக வலம் வந்த இப்பேராளுமை பதித்தத் தடங்கள் ஏராளம். சிறுவனாக இருந்தபோது வீதிகள்தோறும் வீடுகளில் பால் ஊற்றி வந்த இவர், சிறு வயதிலேயே தமிழ்ப்பாலும், ஞானப்பாலும்  கொண்டார் என்பது வரலாறு கூறும் பேருண்மை. அறம், பொருள், இன்பம் என முப்பால் வடித்து, அறநெறி வாழ்வுக்கு வரையறை தந்த ஐயன் வள்ளுவரின் திருக்குறளினை ஆழ்ந்து படித்து, துறவு வாழ்வுக்கு அணிசேர்த்த இவர் ஓர் இலக்கிய ஆளுமையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சகவயது தோழர்களோடு ஒன்றிணைந்து மேற்கொண்ட சமூகப் பணிகளில் இளம் வயதிலேயே ஒரு சமூகத் தொண்டனாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இலக்கிய மன்றங்களுக்கும், பேருரைத் தளங்களுக்கும் மேடை அமைத்து, தமிழ்ப் புலமையோடு, இலக்கிய வளத்தோடு பட்டிமன்றங்கள் அமைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

சமயம், பக்தி, வழிபாடு, தொழுகை என்பது உணர்வு சார்ந்தது; அவ்வுணர்வை வெளிப்படுத்துவதே மொழி  என்றுணர்ந்த அடிகளார், வழிபாடு இதயம் கலந்ததாக அமைய வேண்டும் என முழங்கினார். ஆகவே, திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை வேண்டுமென ஆதரித்தார். இது வடமொழிக்கு எதிரான வெறுப்பு அல்ல; மாறாக, வழிபடுவோரும் பொருள் உணர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆகவேதான், ‘திருக்கோவில்களில் மணிகள் அசைந்தால் போதாது; மனித இதயங்களும் அசைய வேண்டும்என்றார்.

நாத்திகர்என ஆன்மிகவாதிகளால் ஒதுக்கப்பட்ட தந்தை பெரியாருடன் நேசம் காட்டினார். தமிழில் வழிபாட்டு உரிமை, அனைத்துச் சாதியினரும் ஆலய நுழைவு போன்ற தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்களில்  இரட்டைக் குழல் துப்பாக்கியாக அவருடன் இணைந்து களத்தில் நின்றார். “அடிகளாரைப் போல பத்து பேர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், எனது தொண்டுக்கே வேலை இருந்திருக்காதுஎன்றார் பெரியார்.

மண்டைக்காடு கலவரத்தால் குமரி மண் பற்றியெரிந்தபோது, ‘மக்கள் பேராயர்மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையுடன் கைகோர்த்துக் கிறிஸ்தவர்களை ஆற்றுப்படுத்தினார். மதப்பித்துக் கொண்டோரை அடங்கவும் வைத்தார். தனது பொதுவாழ்வில் ஒடுக்கப்பட்டோரின் தோழமையாக வலம் வந்ததால், ‘காவி உடையில் ஒரு கம்யூனிஸ்ட்என்று இடதுசாரிகளால் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தப்பட்டார்.

ஆதீனத்தின் தொன்மை மரபுகளை முறையாகப் பின்பற்றுவதோடு, புதுமையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார். திருவள்ளுவர் திருநாள், தமிழ்த் திருநாள் எனக் குன்றக்குடி ஆதீனத்தில் பல விழாக்கள் எடுத்த அடிகளார், சாதி சமய வேறுபாடு அற்ற சமத்துவ வழிபாட்டு முறைகளையும் முன்வைத்தார். கிராமங்கள் தன்னிறைவுகொள்ள பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்தார். குறிப்பாக, குன்றக்குடி பகுதிகளில் மக்கள் சமூக பொருளாதார மேம்பாடு காண வழிகாட்டினார். அறிவியல் பற்றாளர்களையும், கற்றறிந்தோரையும் ஒன்றிணைத்து அறிவியல் கழகங்கள் அமைத்துப் பணியாற்றினார். மேலும், ‘அருள்நெறி திருப்பணி மன்றம்அமைத்துக் கல்வியை யாவருக்கும் பரவலாக்கினார். குறிப்பாக, பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் அமைத்து இளையோரை ஆசிரியர் பணிக்குத் தயார்படுத்தினார்.

மரம் நடுதல், இயற்கை வேளாண்மை, தோட்டக் கலை என இயற்கை நேயம் கொண்டார். சாதி சமய வேறுபாடுகள் களைந்து எல்லா விழாக்களிலும், நிகழ்வுகளிலும், பொதுப் பிரச்சினைகளிலும், உரிமைப் போராட்டங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சமய  நல்லிணக்கராகப் போற்றப்பட்டார். பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களுடனும், ஆன்மிகத் தலைவர்களுடனும் நட்புப் பாராட்டினாலும், தான் கொண்ட கருத்தியலில், கொள்கைகளில் வழுவாது நின்று மனிதநேயம், மதநல்லிணக்கம், இயற்கை நேயம், பல்லுயிர் நேயம், மானுட உரிமை என்னும் பல்வேறு தலங்களில் குரல் கொடுத்து இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சமய - சமூக - ஆன்மிக ஆளுமையாக வலம் வந்தார்.

ஒவ்வொரு சொல்லையும் மந்திரம் போல் பயன்படுத்திய மனிதர்களை உலகம் எல்லாக் காலங்களிலும் மாலையிட்டு மரியாதை செய்தது என்பது வரலாறு. மானுடம் போற்றும் தொண்டையும், துறவையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தஅடிகளார்எனும் இப்பேராளுமை போன்று நாம் இனி காண்பது அரிது! இத்தகைய சமய, சமூக இலக்கணங்களுடன் வாழும் ஒரு துறவியை இன்றைய நமது வாழ்காலச் சமுதாயம் சந்திக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!

நிறைகுடம் தழும்பாதுஎன்பதும், ‘விளைந்த கதிர்களே தரைநோக்கிப் பணிந்து நிற்கும்என்பதும் அடக்கத்தின் அடையாளங்கள். அடக்கம் என்ற ஒற்றைப் புள்ளியிலேதான் அனைத்து நற்பண்புகளும் அடங்கி இருக்கின்றன. அடக்கம் உள்ள இடத்தில்தான் ஆண்டவனும் குடியிருக்கிறான். அடக்கம் பொதுநலத்தின் தேவாலயம். ஆகவே, மகத்தான மனிதர்கள் இறைவன் வாழும் ஆலயங்களே! அமைதியாக, சலனம் இன்றி இறைத் தொண்டாற்றிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழ்க் குடிகளின் இதய அரியணையில்  எந்நாளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் என்பதே பேருண்மை! வாழ்க அடிகளார்! வளர்க அவர் திருத்தொண்டு!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment